Thursday, December 06, 2007

2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம் வாருங்கள் !

இந்த ஆண்டு இறுதிக்குள் wordpressத் தமிழாக்கியே தீருவது என்று களத்தில் குதித்து இருக்கிறோம். கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளோம். இன்னும் 2200 சரங்கள் உள்ளன.

தமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே..

எப்படி செய்வது?

http://translate.wordpress.com/ சென்று பயனர் கணக்கு உருவாக்கி மொழிபெயர்ப்பு மொழியாகத் தமிழைத் தேர்ந்தெடுங்கள்.

http://translate.wordpress.com/list.php போய் மேலிருந்து கீழாக்க ஒவ்வொரு சரமாக மொழிபெயர்க்கலாம். edit என்ற குறிப்பிடப்பட்டிருப்பவை ஏற்கனவே தமிழாக்கப்பட்டு விட்டது. அவற்றை விட்டு விடலாம். இல்லை, சரியாக தமிழாக்கப்பட்டிருக்கிறா என்று உறுதி செய்யலாம். ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டவற்றைப் பார்ப்பதன் மூலம் தமிழாக்கம் குறித்த புரிதல் கிடைக்கும். add தொடுப்பு உள்ளவை இன்னும் தமிழாக்கப்படாமல் இருப்பவை.

தெளிவில்லாத சரங்களை அப்படியே விட்டுவிடுங்கள். வேறு யாராவது தமிழாக்கலாம். சரத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் தெரியவில்லை என்றால் அவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாக ஆங்கில எழுத்திலேயே எழுதி விடுங்கள். விவரம் தெரிந்த வேறு எவரும் தமிழாக்கலாம். ஐயங்கள், விளக்கங்களை comment பகுதியில் தந்தது உரையாடுங்கள். பொதுவான உரையாடல்களுக்கு, நம்முடையே ஆன ஒருங்கிணைப்புக்கு http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்தில் இணையலாம்.

தளம் முழுக்க ஒரே மாதிரி சொல்லாடல் இருப்பது முக்கியம்..இதுவரை நான் பயன்படுத்திய பொதுவான சொல்லாடல்க்களும் என் பரிந்துரைகளும்..

blog - பதிவு (most of the places, to be short)..வலைப்பதிவு (when we need to be more formal)

post - இடுகை

comment - மறுமொழி

category - பகுப்பு

tag - குறிச்சொல்

wordpress - வேர்ட்ப்ரெஸ

link - தொடுப்பு

user - பயனர்

logout (verb) - வெளியேறுக

login (noun) - புகுபதிகை

edit - திருத்துக

role - பொறுப்பு

blogroll - பதிவுப் பட்டியல்

password - கடவுச்சொல்

update - இற்றைப்படுத்துக (வினைச்சொல்), இற்றைப்பாடு (பெயர்ச்சொல்)

upgrade க்கு யாராவது சொல் பரிந்துரை செய்தால் நலம்..

manage - மேலாண்மை, மேலாள்க

admin - மேலாளர்

options - தெரிவுகள்

optional - விரும்பினால்

domain - ஆட்களம்

custom - தன் விருப்ப

error - பிழை

bug - வழு

activate - முடுக்கு

deactivate - முடக்கு

plugin - நீட்சி

theme - வார்ப்புரு

align - ஓரங்கட்டுக

justify - பரப்புக

spam - எரிதம்

privacy - தகவல் பாதுகாப்பு

private - இது போன்ற சொற்களை ஒற்றைச் சொல்லில் தமிழாக்க முயல அவசியமில்லை. இதை - என் பார்வைக்கு மட்டும் - என்று தமிழாக்கி இருக்கிறேன்.

ping - பிங் .

approve - ஏற்க

archives - தொகுப்புகள்

author - பதிவர்

image - படிமம்

upload - பதிவேற்றம்

import - இறக்குக, இறக்குமதி

export - ஏற்றுக, ஏற்றுமதி

parent category - தாய்ப் பகுப்பு

dashboard - கட்டுப்பாட்டகம்

default - இயல்பிருப்பு

draft - வரைவு

excerpt - துணுக்கு

header - தலைப்பகுதி

footer - அடிப்பகுதி

home - முகப்பு

server - வழங்கி

character - வரியுரு

sidebar - பக்கப்பட்டை

நினைவு வரும்போது பிற சொற்களையும் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவிக்கிறேன்.

மேலும் சில குறிப்புகள்:

%s, raquo போன்ற சரங்கள் நிரலாக்கக் கட்டளைகள். அவற்றை அப்படியே விட்டு விடுங்கள்.

வேர்ட்ப்ரெஸ் காரர்கள் ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாக சில இடங்களில் எழுதி இருப்பார்கள். அந்தத் தொனியையும் இளக்கத்தன்மையையும் நாமும் பின்பற்றுவது நலம்..இறுக்கமான தமிழாக்கமாக இல்லாமல் கலகலப்பான நட்புணர்வு கூடிய தமிழாக்கமாக இருப்பது நலம்.

சொல்லுக்குச் சொல், ஆங்கில இலக்கண அடிப்படையில் தமிழாக்கினால் தமிழ் நடையில் செயற்கையான நடை வந்துவிடும். ஆங்கிலச் சொற்றொடரைப் படித்துப் புரிந்து கருத்தை மனதில் இருத்தித் தமிழாக்கினால் போதுமானது. dubbing திரைப்படம் போல் ஆகி விடக்கூடாது.

ஆங்கிலத்தில் பெரும்பாலும் செயப்பாட்டு வினை (passive voice) பயன்படும். தமிழில் செய்வினை தான் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு இயன்றவரை
செய்வினை அடிப்படையில் எழுதலாம்.

நம் பண்பாட்டுக்கு ஏற்ப வினைச்சொற்களை மரியாதை விகுதிகளுடன் எழுதலாம். எடுத்துக்காட்டுக்கு, தேடு என்பதற்குப் பதில் தேடுக என்று தமிழாக்கலாம். இன்னொன்று நேர்மறையாக தமிழாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, delete userஐ பயனரை அழிக்கவும் என்று சொல்லாமல் பயனரை நீக்கவும் என்று தமிழாக்குவது..அழிப்பது என்பது நமது பண்பாட்டில் கடுமையான சொல்லாடல் தானே..

நீங்கள் குறைந்தது இவ்வளவு சரங்கள் தமிழாக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. உங்களால் இயன்றைச் செய்யலாம். ஒரு நிமிடத்துக்கு இரண்டு சரங்கள் என்ற வேகத்தில் தமிழாக்குவது பெரும்பாலும் சாத்தியமே..

எவ்வளவே பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டமா :)

அன்புடன்
ரவி

8 comments:

அறிஞர். அ said...

அங்கு புதிய பயனர் கணக்கு திறக்க முடியவில்லையே?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாஹிர், தனியாகப் புதுக்கணக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். wordpress.com பயனர் கணக்கு கொண்டே நுழைய முடிகிறது.

இரா.சுகுமாரன் said...

ஒரு உறுப்படியான வேலை அனைவரும் கவனமெடுத்து செய்தால் விரைவில் முடிக்கலாம்.

செய்வோம்.
இதுமாதிரி மொழி பெயர்புக்கு நான் பால்ஸ் இ டிக்னரியை உடனடி உதவிக்கு பயன்படுத்துகிறேன்.

பால்ஸ் டிக்னரி இந்திய அரசின் இந்திய மொழிகளின் நுன்பொறி வளர்பு தளத்தில் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்தால் இதற்கு பெருமளவு உதவியாக இருக்கும்.

மணியன் said...

My suggestion:
upgrade = மேம்பாடு( பெயர்ச்சொல்), மேன்மையாக்குக ( வினைச்சொல்)

கூப்பிட்டீங்க, வந்துடுவோம்:))

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இரா. சுகுமாரன் - இந்தத் தமிழாக்கத்துக்கு எந்த அகராதியும் தேவைப்படாது. தேவைப்படும் பல சொற்கள் எந்த அகராதியிலும் இருக்காது :) தேவைப்படும் பல புதுச்சொற்களை விக்சனரி குழுமத்தில் உரையாடி விக்சனரி தளத்தில் சேர்த்து வருகிறோம்..

மணியன் - நீங்கள் வருவதில் பெரு மகிழ்ச்சி.

நானும் மேம்பாடு போன்ற சொற்களைத் தான் upgradeக்கு நினைத்து இருந்தேன்.

மேம்பாடு = தரவுயர்வு, தரமுயர்த்துக என்று நண்பர்கள் பரிந்துரைத்தார்கள். அது இன்னும் கூடிய பொருத்தமாகப் படுகிறது.

புரட்சி தமிழன் said...

இதுக்கு தனிய தமிழ் ஆராய்ச்சியாளர் பட்டாளமே தேவைப்படும் போல் உள்ளது பிரஞ்ச் மொழி அளவுக்கு தமிழ் அவ்வளவு நளிவு சுளிவு இல்லையோ என்று தோன்றுகிறது பிரஞ்ச் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எல்லாரும் சேர்ந்து செய்தால் தான் விரைவாக செய்து முடிக்கமுடியும்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

புரட்சித் தமிழன் - french நல்ல மொழி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தமிழின் திறத்தை அதோடு இந்தச் சூழலில் பொருத்திப் பார்க்க அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். தமிழில் தன்னார்வலர் குறைவு என்பது தான் இது வரை தமிழாக்கப்படாமல் இருக்க ஒரே காரணம். தன்னார்வலர்கள் இருந்தால் 100 பேசும் மொழிகளில் கூட மொழிபெயர்க்கலாம் :)

Unknown said...

now the most translated Indian language is தமிழ் :-)
we will complete in another two days!!