Sunday, December 23, 2007

பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி தேவையா?

பதிவரா திரட்டியா? இடுகையில் முத்துகுமரன், இரா.சுகுமாரன் ஆகிய இருவரும் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தனர். அது:

"ஒரு பதிவரின் அனுமதி இன்றி எப்படி அப்பதிவரின் பதிவைத் திரட்டலாம். அது அவரின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா"?

ஒரு பதிவரின் பதிவைத் திரட்ட அவரின் அனுமதி தேவையில்லை என்பது எனது ஆணித்தரமான கருத்து.

ஏன் தேவையில்லை என்ற நான் விளக்குவதற்கு முன் பதிவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும்.


"ஏற்கனவே உங்கள் பதிவுகள் உங்கள் அனுமதி இன்றி பல இடங்களில் திரட்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன"


தமிழ்மணம் கேளிர் திரட்டி, தேன்கூடு ஜி திரட்டி, தமிழூற்று, சங்கமம், Technorati, Icerocket என்று உள்ளூர் தளங்கள் தொடங்கி உலகத் தளங்கள் வரைக்கும் இவற்றில் அடக்கம். இவை பிரபலமான சேவைகளாக இல்லாததால் நாம் அலட்டிக் கொள்வதில்லை.

"ஆஆ..இது எனக்குத் தெரியாதே ! என் சுதந்திரத்தைக் காக்க என்ன வழி" என்கிறீர்களா?

உங்கள் பதிவை யார் படிக்கிறார்கள் என்பதை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் பதிவுக்கோ குறிப்பிட்ட இடுகைகளுக்கோ கடவுச்சொல் வைத்து மறைக்கலாம். ப்ளாகரில் பதிவை மட்டுமே பூட்டலாம். வேர்ட்ப்ரெசில் இடுகைகளையே கூட பூட்டலாம். மறுமொழி இடும் வசதியைக் கூட குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தருமாறு பூட்டி வைக்கலாம். ஆனால், இப்படி கடவுச்சொல் இல்லாமல் தளத்தைத் திறந்து வைத்த அடுத்த நொடி உங்கள் தளத்தை யார் யார் படிக்கிறார்கள், யார் யார் எந்தெந்த வழிகளில் அணுகிறார்கள், எந்தெந்த தேடு பொறிகள் உங்கள் தளத்துக்கு வருகின்றன என்பதில் உங்களுக்குத் துளியளவு கட்டுப்பாடும் கிடையாது என்பது தான் உண்மை. வேண்டுமானால், ஓடை வசதியை முடக்கினால் திரட்டிகளால் அணுக முடியாது.

இது உங்கள் சுதந்திரத்தின் மீதான தலையீடு இல்லை. இணையம் இயங்குவதற்கே இது தான் அடிப்படை. சுதந்திரம் விரும்பும் பதிவர்கள் முதலில் வலைப்பதிவில் எழுதவே கூடாது. அப்படியே எழுதி தங்கள் நண்பர்கள் மட்டும் படிக்க விரும்புபவர்களுக்குக் கடவுச்சொல் வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு பிறகும் சுதந்திரம் குறித்துப் பேசுவதில் ஒன்றுமில்லை. உண்மையில், திரட்டிகள் பதிவர்களின் தளத்தைத் திரட்டுவதால் சுதந்திரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்றே விளங்கவில்லை. தளத்தைப் பொதுவில் வைக்கும்போதே அதற்கு எவ்வளவு கூடுதல் வாசகர்களைப் பெறலாம் என்பது தானே ஒவ்வொரு பதிவரின் எண்ணமும்? சூடான இடுகைகளைப் பார்ப்பதற்கும் மறுமொழி எண்ணிக்கை பார்ப்பதற்கும் இது தானே காரணம்? பிறகு அந்த கூடுதல் வாசகர்களைப் பெற்றுத் தர ஏன் ஒவ்வொரு திரட்டிக்கும் போய் தனி அனுமதி தர வேண்டும்?

உங்கள் பதிவைத் திரட்டலாம் என்று x திரட்டிக்கு அனுமதி கொடுக்கிறீர்கள். அதன் மூலம் சில வாசகர்கள் வருகிறார்கள். ஆனால், Y திரட்டிக்கும் கூடுதலாகவும் சேர்த்து அனுமதி கொடுப்பதால் எப்படி நமது சுதந்திரம் பாதிக்கப்படும்? ஒட்டுமொத்த தமிழ்த் திரட்டிகளுக்கும் நீங்கள் அனுமதி கொடுக்காவிட்டாலும் கூகுள் மூலம் உங்களை மக்கள் வந்தடைய முடியும். அப்போது எங்கே போகிறது சுதந்திரம்?

"x திரட்டியில் மட்டுமே இணைப்பேன், அதன் வாசகர்கள் மட்டுமே என் பதிவுக்கு வரலாம்" என்பது "கூகுள் வழியாக என் தளத்துக்கு மக்கள் வரலாம். ஆனால் யாஹூ வழியாக வரக்கூடாது" என்று சொல்வது போலத் தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

எந்தத் திரட்டியும் நீங்கள் எழுதியதில் உள்ளடக்கத்தை மாற்றியோ உங்கள் பெயரை இருட்டடிப்புச் செய்தோ காட்டப் போவதில்லை என்னும் போது எத்தனை இடங்களில் கூடுதல் காட்சிப்படுத்தல் கிடைக்கிறதோ அது உங்களுக்கு அத்தனை இலாபம் தானே? இலவசமாகக் கிடைக்கும் இதை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

ஒரு பதிவரின் பார்வையை விட்டு விலகி ஒரு பயனரின் பார்வையில் வாசகரின் பார்வையில் இதைப் பாருங்கள்.

கூகுளுக்குப் போய் "பில்லா" என்று தேடுகிறீர்கள் என்று வைப்போம். பில்லா குறித்த தேடல் முடிவுகளைக் காட்டாமல், "மன்னிக்கவும், பில்லா குறித்து எழுதிய யாரும் கூகுளில் இணைக்கச் சம்மதிக்கவில்லை. அதனால் உங்களுக்கு உதவ இயலாது" என்று பதில் வந்தால் மண்டை காயுமா இல்லையா?

அதே போல் தமிழ்ப்பதிவுகளைத் தேடிப்படிக்க தமிழ்த் திரட்டிகளைப் பயன்படுத்துகிறோம். தமிழ் வலைப்பதிவுகளில் எழுதப்படுகிற எல்லா நல்ல இடுகைகளையும் வாசிப்பது தான் நமது விருப்பமாக இருக்கும். வாசகர் ஒருவர் அப்படித் தேடும்போது "மன்னிக்கவும், அந்தப் பதிவர் இந்தத் திரட்டியில் இணைந்து அதைக் காட்ட விரும்பவில்லை என்பதால் உங்களுக்கு உதவ இயலாது" என்று பதில் வருவது மட்டும் ஏன் அபத்தமாகத் தோன்றவில்லை?

பதிவர் சுதந்திரம் என்பதற்கு முன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எழுதும் ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு தகவலைப் பதிகிறது. ஒவ்வொரு வாசகரும் ஏதோ ஒரு தகவலைத் தேடி இணையத்துக்கு வருகிறார். இப்படி இருக்கையில், நாம் எழுதும் இலவச உள்ளடக்கம் அவருக்கு எத்தனை வழிகளில் கிட்ட முடியுமோ அத்தனை வழிகளுக்கும் நாம் அனுமதி தருவது தானே நியாயம்? பதிவர் சுதந்திரம் என்ற தவறான புரிதலால் நாம் அனுமதி மறுக்கும்போது வாசகரின் தகவல் அறியும் உரிமை, வாய்ப்பு மட்டுப்படுத்தப்படுகிறதா இல்லையா?

சரி, உங்கள் பதிவைத் திரட்ட உங்கள் அனுமதி தேவையில்லை என்ற புரிதலுக்கு வருகிறீர்கள். உங்கள் அனுமதி இல்லாமல் திரட்டிகள் எப்படியெல்லாம் உங்களை அணுகலாம்?

1. தமிழில் எழுதப்படும் தகவல் எது என்பதைச் செயலிகள் மூலம் அறிந்து திரட்டுவது. கேளிர் திரட்டி, ஜி திரட்டி போன்றவை இப்படி இயங்குவதாகக் கொள்ளலாம்.

2. ஏற்கனவே உங்கள் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரட்டிகள் தங்கள் OPML பதிவர் பட்டியலை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வது. அது என்ன OPML என்கிறீர்களா? விலாவரியாக அறிய விரும்புபவர்கள் OPML விக்கிபீடியா கட்டுரையைப் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால், எடுத்துக்காட்டுக்கு நான் ஒரு வலைப்பதிவு முகவரியை இங்கு தருகிறேன் என்று கொள்வோம்.

http://valavu.blogspot.com

http://vimarsanam.wordpress.com

என்று எழுத மட்டும் செய்தால் உங்களால் அதை வாசிக்க மட்டுமே முடியும்.

அதையே

http://valavu.blogspot.com

http://vimarsanam.wordpress.com

என்று இணைப்புகளோடு தந்தால் உங்களால் அதைச் சொடுக்கி அந்தத் தளங்களுக்குச் செல்ல முடியும்.

இப்படி நீங்கள் நாளும் படிக்க விரும்பும் நூறு தளங்களின் இணைப்புகள் பட்டியலை இந்தப் பக்கத்தில் தருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் அந்த 100 இணைப்புகளைச் சொடுக்கிப் பார்ப்பது உங்களுக்கு இலகுவாக இருக்குமா? இல்லை தானே? இதையே இந்த 100 பதிவுகள் பட்டியலை OPML என்ற கோப்பு வடிவமாகத் தந்தால் அதை நீங்கள் கூகுள் ரீடர் போன்ற ஓடைத் திரட்டுத் தளங்களைக் கொண்டு இலகுவாகப் படிக்கலாம். ஆக, OPML என்பது என்ன? நீங்கள் படிக்க விரும்பும் பதிவுகளை இலகுவான பட்டியலாகத் தருவது. அவ்வளவு தான். இதை நீங்கள் தனிப்படப் பயன்படுத்துவது போலவே திரட்டிகளும் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தினால் தனிப்பட படிக்கப் போகிறீர்கள். திரட்டிகள் திரட்டினால் அவற்றைப் பொதுவில் காட்சிப்படுத்தப்போகின்றன. அவ்வளவு தான்.


ஒவ்வொரு தமிழ்த் திரட்டியும் தங்களுக்கு இடையேயான OPML பட்டியல்களைப் பகிர்வதால் உங்களுக்கு என்ன இலாபம்?


இன்னும் 100 திரட்டிகள் வந்தாலும் ஒவ்வொரு திரட்டியாகப் போய் நீங்கள் தனித்தனியாகத் திரும்பப் பதியத் தேவை இல்லை. ஒரு திரட்டியில் பதிந்தால் எல்லா திரட்டிகளிலும் காட்சிப்படுத்தப்படுவீர்கள்.

உங்கள் பெயர், மின்மடல் முகவரி, IP முகவரி உள்ளிட்ட தகவல்களை எந்தத் திரட்டிக்கும் தெரிவிக்கத் தேவை இல்லை என்பதால் உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

"இரு, இரு X திரட்டியிடம் தானே என் விவரங்களைத் தந்து பதிந்தேன். அது எப்படி என் அனுமதி இல்லாமல் இன்னொரு திரட்டிக்கு என் தகவல்களைத் தரலாம்" என்கிறீர்களா?

ஒரு முறை நினைவுகூருங்கள். OPMLல் என்ன தகவல் இருக்கும்? உங்கள் பதிவின் முகவரி மட்டுமே இருக்கும். உங்கள் பதிவின் முகவரி என்பது அவ்வளவு பெரிய இரகசியமா?

இன்னொன்று, இப்படி OPML தருவது புதிய நடைமுறை அல்ல. தேன்கூடு தொடங்கப்பட்ட போது தமிழ்மணம் தன் OPMLஐ இவ்வாறு பகிர்ந்து கொண்டது வரலாறு.

ஆனால், இத்தனைப் புரிதல்களையும் தாண்டி, "பதிவர்களின் அனுமதி பெற்றே திரட்டிகள் திரட்டுவது, பதிவர்கள் வேண்டியே திரட்டியில் சேர்ப்பது" என்ற எழுதப்படாத விதி தமிழ்ப்பதிவுலகில் நிலவுவதற்குக் காரணம் என்ன?

திரட்டி அரசியல் தான் காரணம்.

அது என்ன திரட்டி அரசியல் என்கிறீர்களா?

அடுத்தடுத்த இடுகைகளில் எழுதுகிறேனே?

அன்புடன்,
ரவி

Saturday, December 22, 2007

பதிவரா திரட்டியா? - திரட்டிச் சார்பு, திரட்டி அரசியல், பதிவர்-திரட்டி உறவு... - பாகம் 2 :)

பாகம் 1 இங்கு

சென்னை பதிவர் பட்டறை ஏற்பாடுகள் நடந்த போது அதன் நிர்வாகக் குழுவில் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் தாக்கம் குறித்த தீவிரமான உரையாடல் ஒன்று நடந்தது. பட்டறை முடிந்த பின் அதைத் தொகுத்து தங்கள் பதிவுகளில் யாராவது வெளியிடலாம் என்றும் உரையாடி இருந்தோம். அதை ஒட்டி அந்த உரையாடலின் பகுதிகளை இங்கு தருகிறேன். பட்டறை ஏற்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்த பிற நண்பர்களுக்கு தர்ம சங்கடம் வேண்டாம் என்பதால் என்னைத் தவிர பிறருடைய கருத்துக்களை பெயரை வெளியிடாமல் தருகிறேன்.

உரையாடலுக்கான சூழல் இது தான்: பட்டறை செலவில் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்ப்பதிவுகள், தேன்கூடு ஆகிய நான்கு தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளுக்கு விளம்பரத் தட்டி வைக்க வேண்டும் என்று முன்மொழியப்பட, ஆதரவாளர்கள் தவிர வேறு யாருக்கும் நாம் தட்டி வைக்கத் தேவை இல்லை என்று என் கருத்தை முன்வைத்தேன்.

இனி உரையாடல் பகுதிகள்...இந்த உரையாடல் நடந்த போது சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கு தமிழ்வெளி, தமிழ்மணத்தின் நிதி ஆதரவு கிட்டி இருக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

ரவி: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி எதுவும் பட்டறைக்கு நிதி ஆதரவு கொடுத்ததாகத் தெரியவில்லை. தேன்கூடு, தமிழ்மணம் கொடுக்கும் டி-சட்டைகளை அவர்கள் தளத்துக்கான promotion ஆகத் தான் பார்க்க இயலும். அந்த டி-சட்டைகளால் பட்டறை நடத்த ஒரு உதவியும் இல்லை. இப்படி இருக்க என்ன அடிப்படையில் பொதுச் செலவில் நான்கு திரட்டிகளுக்கு மட்டும் தட்டி வைக்க வேண்டும் என்று அறிய விரும்புகிறேன். நான்கு தளங்களும் .com முகவரியில் இயங்கும் -வணிக நோக்கு இல்லை - என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத தளங்கள். தமிழ்மணம் விற்கப்பட்டு பொருள் ஈட்டப்பட்ட ஒரு வணிக முயற்சி. தமிழ்ப்பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் உண்டு.

பதிவர் பட்டறை செலவுகளுக்கு எந்த திரட்டியும் பொருள் ஆதரவு தராத நிலையில் ஏன் திரட்டிகளை நாம் செலவு செய்து பரப்ப வேண்டும். பல வகைகளில் முன்பு ஏற்பாட்டாளர் 1 சொன்னது போல் நாம் திரட்டிகளைச் சாராமல் செயல்படுவது நன்று. எல்லா திரட்டிகளையும் நிறுத்தினாலும் பதிவுகள், பதிவர்கள் இருப்பர். ஆனால், பதிவுகள் இல்லாமல் திரட்டி இல்லை. எழுத்துப் பயிற்சிப் பட்டறையில் எழுத்துத் திறமையை வளர்ப்பது எப்படி என்று சொல்லித் தான் முன்னுரிமை அளிப்போம். நம் செலவில் விகடனுக்கும் குமுதத்துக்கும் தட்டி வைக்க மாட்டோம். இதே ஒப்புமையை பதிவுலகத்துக்கும் பொருத்திப் பார்க்லாம்.

நிதி ஆதரவு அளித்த சற்றுமுன், headway properties தவிர வேறு யாருக்கும் பொதுச் செலவில் தட்டி வைப்பதற்கான என் மறுப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நன்கொடை தொகையில் இருந்து தட்டி வைப்பதற்கான காசைக் கழித்துக் கொண்டு கணக்கு வைக்கவும் பரிந்துரைக்கிறேன்.

செய்முறை பயிற்சி, கலந்துரையாடல் முதலியவற்றில் திரட்டிகளின் அறிமுகம் எப்படியும் நிகழப் போகிறது. அதுவே போதுமானது என நினைக்கிறேன். எதற்கு காசு செலவழிக்கிறோம் என்பது முக்கியம். தட்டி வைக்காவிட்டாலும் எப்படியும் இந்தத் தளங்களின் பெயர்கள் பட்டறைக்கு வருவோருக்கு அறிமுகப்பட போகிறது என்கையில் காசு செலவழிக்கத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் badge, banner செலவு 10,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டறை செலவுகளிலேயே இது அதிகமாக இருப்பதால் இதன் நியாயமான தேவையைக் கேள்வி கேட்க வேண்டி உள்ளது.

திரட்டிகளை விட முக்கியம் blogger, wordpress, எகலப்பை போன்றவை. அவற்றையே காசு செலவழிக்காமல் அறிமுகப்படுத்த முடியும் போது திரட்டிகளுக்கு எதற்கு?

முதலில் திரட்டிகள் என்ற நிலையில் அறிமுகத்தை ஏன் சுருக்க வேண்டும்? இந்த 4 திரட்டிகளில் ஒரு சிலவற்றை நான் பயன்படுத்துவதே இல்லை. இது போக technorati தமிழ்பதிவுகள், ta.wordpress.com, adadaa.com, மகளிர் சக்தி எல்லாவற்றிலும் சிறிய வட்டத்திலான திரட்டிகள் உண்டு. தமிழ்பாரதி திரட்டி என்று சொல்லிக் கொண்டாலும் அதை உறுதிப்படுத்த வழியில்லை. திரட்டிகளின் திரட்டியான தமிழ். கணிமையும் உண்டு.

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மனு போட்டு விண்ணப்பித்துக் காத்திருந்து திரட்டியில் சேர்ந்து பிறகு 24 மணி நேர கெடு அறிவிப்புகளுக்கு பயப்பட்டுக் கொண்டு பதிவு எழுத வேண்டி இருப்பது என்றில்லாமல் சுதந்திரமாக பதிவர்கள் எதையும் இணைக்கத் தேவை இல்லாமல் தானாகவே திரட்டும் தமிழூற்றும் என் நுட்பப் பார்வையில் ஆகச் சிறந்த திரட்டி. எல்லா திரட்டிகளும் இப்படி சட்ட திட்டமில்லாமல் தன்னியக்கமாக ஆனால் - திரட்டியில் சேர்வது எப்படி - என்று நாம் வகுப்பு எடுக்கவே தேவை இல்லை.

உலகிலேயே இப்படி திரட்டி முறை வேறு எங்கும் இருப்பது போல் தெரியவில்லை. பதிவர்கள் நாமாக சேர்ந்து ஒரு திரட்டி முறையை வலுவுள்ளதாக ஆக்கி விட்டு பிறகு அதன் சாதக பாதகங்களுக்கு உட்படுட்டு நடந்து கொண்டிருக்கிறோம். திரட்டிகள் பட்டறையைக் கண்டு கொள்ளவில்லை என்று புலம்பவும் செய்கிறோம். தேன்கூடு பதிவில் இன்னும் மே மாச 20ஆம் தேதி பட்டறை அறிவிப்பு தான் இருக்கிறது. தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளியில் பட்டறை குறித்த அறிவிப்பு எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. அடையாள அளவில் கூட பட்டறைக்கு ஆதரவளிக்காதவர்களுக்கு காசு செலவு செய்து நாம் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்?

ஆண்டுக்கு 2,3 திரட்டிகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும். திறந்த நிலையில் அறிவித்து எல்லா சுட்டிகளின் பேரையும் சேர்க்கிறோம் என்றால் ஒரு கட்டத்தில் முடிவில்லாமல் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.எது நல்ல திரட்டி என்று உறுதி செய்து நம்மால் சேர்க்க இயலுமா? எது நல்ல திரட்டி என்று தீர்மானிக்க நமக்கு உள்ள உரிமை என்ன?

திரட்டிகள் குறித்த விழிப்புணர்வு பரப்புகிறோம் என்று சொல்வதே அவசியமற்றது. ஆண்டுக்குப் புதிது புதிதாக 2,3 திரட்டிகள் வருமோ என்ற நினைக்கிற நிலையில் ஒவ்வொரு திரட்டியாக அறிமுகப்படுத்துவது, சேர்க்கச் சொல்வது என்பது பதிவு வாசகர்களையும் பதிவர்களையும் சோரச் செய்யக்கூட வித்திடும்.

தட்டி விசயம் போக, பொதுவாகப் பட்டறையிலும் திரட்டி குறித்த over அறிமுகம், சார்பு, நன்றி நிலை இருப்பது தேவை இல்லை. லினக்ஸ் குறித்து அறிமுகப்பட்டறை நடத்தினால் உபுண்டு, சுசி, டெபியன் என்று எல்லாவற்றுக்கும் நம் செலவில் தட்டி வைக்கப்போவதில்லை. லினக்ஸ்க்கு பின்னுள்ள நுட்பம், அதன் கொள்கை, அவசியம் ஆகியவற்றையே சுட்டிக் காட்டுவோம். இணையம் குறித்த பட்டறை வைத்தால் கூகுளுக்கும் யாஹூவுக்கும் செலவு செய்து தட்டி வைப்போமா? நாம் பரப்ப வேண்டிய விழிப்புணர்வு நுட்பம் குறித்து தானே தவிர தனி நிறுவனங்கள் பற்றி அல்ல. இன்று ஒரு திரட்டி, நிறுவனம் வரும். நாளை போகும். ஆனால், நுட்பம் மட்டுமே வளர்ந்து கொண்டே இருக்கும். தன் இருப்பைத் தக்க வைக்கும்.

பட்டறைக்கு வருபவர்களுக்கும் உலகாளவிய பார்வையில் பதிவு நுட்பம், அதை எழுதவதன் மகிழ்ச்சி குறித்து அறிமுகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

....
....

ஏற்பாட்டாளர் 2: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி போன்றவற்றுக்கும் நீங்கள் குறிப்பிட்ட மற்ற வலைப்பதிவு அறிமுகச் சேவைகளுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு இவற்றில் பதிவர் தன் ஒப்புதலுடன் இணைகிறார். மற்றவற்றில் பதிவருக்குத் தெரியாமலே அவை திரட்டப் பட வாய்ப்புகள் உண்டு.


ரவி:உங்கள் பார்வையில் இவை நிறை. என் பார்வையில் இது குறை. இணைப்புகள் தருவது, indexing செய்வது, ஓடைகள் திரட்டப்படுவது இவை எல்லாம் தான் இணையம் இயங்குவதின் அடிப்படை. நம் ஒவ்வொரு தளத்தின் பக்கத்தையும் கூகுளில் சேர்க்க எழுதி விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்த்தால் திரட்டியில் சேர விதிகளுக்கு உடன்பட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்பதின் அபத்தம் புரியும். இந்த அளவில் இவை மன்றங்களே. என்ன வேண்டுமானாலும் எழுதும் சுதந்திரத்தை இணையம், பதிவுகள் தருகின்றன. சில விதிகளுக்கு உட்பட்டு எழுத வேண்டும் என்ற வகையில் பலம் மிக்க அமைப்புகளான திரட்டிகள் பதிவர்களைக் கட்டுப்படுத்துகின்றன.

இணையத்தில் தானாக திரட்டப்படுவது தான் plus. அப்படி விருப்பம் இல்லையென்றால் கூகுள் போன்ற தேடுபொறிகள், கூகுள் ரீடர் போன்ற திரட்டிகள் வந்து செல்லாமல் இருக்க நம் தளத்தின் நிரலை மாற்ற முடியும். உண்மையில் நம் பதிவை எத்தனை தளங்களில் காட்ட முடியுமோ எத்தனை இணைப்புகள் பெற இயலுமோ அதற்கு தான் வலைஞர்கள் விரும்புவார்கள். பதிவைத் திரட்ட வேண்டுமானால் பதிவர் ஒப்புதல் தர வேண்டும் என்று திரட்டி நிர்வாகத்தாரும் பதிவரும் நினைப்பது நுட்பத்தில் பின்னோக்கிப் போவது போல்.

இந்த வகையில் தமிழூற்று மட்டும் தான் சரியான நுட்பத் திசையில் செல்கிறது. எல்லாவற்றையும் தானாகத் திரட்டுவது தான் திரட்டி. மற்ற அனைத்தும் மன்றமே. ஈழத்துப் பதிவுகளைத் தவிர்க்கிறார்கள் என்று தேன்கூடு மேல் குற்றச் சாட்டு உண்டு. என்ன தான் காரணம் என்றாலும், 24 மணி நேர அறிவிப்பு விட்டு தூக்குகிறார்கள் தமிழ்மணத்தில். இவை எல்லாம் மன்றச் செயல்பாடுகளே.

ஏற்பாட்டாளர் 2:தமிழ்மணம், தேன்கூட்டில் தகவலை மின்னஞ்சல் செய்தால் அவர்கள் அறிவிப்பில் வெளியிடுவார்கள். அனுப்பத் தவறி இருக்கலாம்.

ரவி:தமிழ்மணத்தில் மின்னும் இணைப்பாக இருக்கிறது. தேன்கூடு கதை தெரியவில்லை. "நாம் ஐயோ பாவம் பதிவர்கள் தானே, அவர்கள் பெரிய திரட்டிகள், எழுதிக் கேட்டால் தான் போடுவார்கள்" என்பதே ஏதோ அதிகார அமைப்பை உருவாக்குவது போல் இருக்கிறது. தானாக அவர்கள் இணைப்பு தர வேண்டாமா? இதைக் காட்டிலும் தானாக இணைப்பு தந்த தமிழூற்று, சற்றுமுன், கில்லி போன்றவை பாராட்டத்தக்கவை. இவை பதிவர்களில் ஒன்றாக தங்களை உணர்கின்றன. திரட்டிகள் admin முகவரிக்குப் பின்னால் அமர்ந்திருக்கின்றன.

ஏற்பாட்டாளர் 2:தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி ஆகிய நான்கின் தனித்தன்மையே பதிவர் தன் விருப்பப்படி இணைவதுதான். அப்படி இணைவதற்கான வாய்ப்புகள் எவை என்பதை அவர்களுக்கு அறிமுகம் செய்வது தவறில்லையே?

ரவி:அறிமுகப்படுத்துவதில் தவறே இல்லை. தாராளமாக அறிமுகப்படுத்தலாம். ஆனால், பதிவைப் படிப்பதற்கான ஒரே வழியாக இவற்றை அறிமுகப்படுத்தாமல் கூகுள் blog search , feed reader, google search போன்றவற்றையும் உள்ளடக்கி முழுமையாக அறிமுகப்படுத்துங்கள். தமிழ் மணம் முடங்கினால் 2000+ தமிழ்த் திரட்டிகளும் அதில் இருந்து நிரல் பெறுவதால் முடங்குகின்றன. தவிர, தமிழ்மணம் இல்லாவிட்டால் கையும் காலும் ஓடாத பதிவர்களும் பலர். வேறு வழிகளில் படிக்க முடியும் என்பதை மறந்து விடுகின்றனர். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி திரட்டிகளை மட்டும் அறிமுகப்படுத்தாமல் முழுமையான சிறந்த அறிமுகத்தைப் பதிவுலகுக்கு அளிக்க வேண்டும்.

கணினிச்சுவடி போல் தமிழ்ப் பதிவுலகுக்கும் ஒரு கையேடு / bit notice போல் உருவாக்கி அதில் திரட்டி முகவரிகள், wordpress, blogger, எகலப்பை முகவரிகள் என்று முக்கியமானவற்றைக் குறிப்பிட்டுக் கொடுக்கலாம். கையோடு வீட்டுக்கு எடுத்துப் போய் பார்த்துக் கொள்வார்கள். பட்டறை முடிந்த கையோடு கழற்றி வைக்கும் bannerகளை விட இவற்றுக்குச் செலவும் குறைவு. பயனும் நீடிப்பு. அதிக முகவரிகளையும் உள்ளடக்கலாம்.

ஏற்பாட்டாளர் 2:

தமிழில் 2000 பதிவுகள் இருக்கின்றன. அல்லது 3000 பதிவுகள் இருக்கின்றன என்ற கணக்கை தமிழ்மணம் போன்ற ஒரு பதிவுத் திரட்டி இல்லாமல் கொண்டு வந்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை. சிலநூறு பதிவுகளாக இருந்த போது மதியால் வலைப்பதிவுகள் பட்டியலை உருவாக்க முடிந்தது. அது பல நூறாக மாறியபோது தமிழ்மணத்தில் இருந்து தான் அந்த பட்டியலில் எண்ணிக்கை திரட்டப் பட்டது.

//இணையத்தில் தானாக திரட்டப்படுவது தான் plus. //

ஆனால் இன்று இப்படி ஒரு நிகழ்வு நடக்க ஒரு ஒருங்கிணைவை அடிப்படையில் திரட்டிகள் தான் உருவாக்கித் தந்தன. இல்லா விட்டால் எங்கோ, யாரோ, எப்போதோ ரயில் பயணங்கள் போலத்தான் இருந்திருப்போம். இரண்டுமே அவசியம் தான் என்று கருதுகிறேன்.

//தானாக இணைப்பு தந்த தமிழூற்று, சற்றுமுன், கில்லி//

அதன் காரணம் பட்டறையின் தன்னார்வலர்கள் ஒருவரேனும் இவற்றில் பங்களிக்கிறோம்.

ரவி: சரியாகச் சொன்னீர்கள். திரட்டி நிர்வாகங்கள் ஏன் பட்டறை வேலையில் இறங்கவில்லை? அவர்கள் பதிவர்களில் ஒருவராகத் தங்களை உணரவில்லையா? அப்ப அவர்கள் யார்? நாமெல்லாம் சேர்ந்து நமக்கு மேல்படியில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர் குழுவை உருவாக்கி வைத்திருக்கிறோமா? முறையாக நிறுவனமாகப் பதிவு செய்து இயங்கும் தேன்கூடு, தமிழ்மணம் போன்றவற்றிடம் இருந்து நமக்கு நேரடிப் பங்களிப்புகள் கிடைக்காது என்றால் நாமும் அவர்களை நிறுவனங்களாகவே பார்ப்போம். தூக்கிப் பிடிக்கத் தேவை இல்லை.

தமிழ்மணம் இல்லாவிட்டாலும் காலத்தின் போக்கில் ஒரு தானியங்கித் திரட்டி வந்திருக்கும். கூகுள் இல்லாவிட்டால் இணையம் இப்படி இருக்குமா என்று நினைப்பதும் தமிழமணம் இல்லாவிட்டால் பதிவுகள் இப்படி இருக்குமா என்று நினைப்பதையும் ஒப்பு நோக்க முடியும். இணையம் குறித்த மாநாட்டுக்கு கூகுள் ஆதரவு வழங்கும். சொந்தச் செலவில் மாநாடு நடத்தி யாரும் கூகுளுக்குத் தட்டி வைக்க மாட்டார்கள். நுட்பம் காரணமாக ஒன்று கூடுபவர்கள் ஒரு சில நிறுவனங்களை மட்டும் முன்னிறுத்தி செயல்பட மாட்டார்கள். நுட்பத்தை மட்டுமே முன்னிறுத்துவார்கள்.


சேவை வேறு. ஊடகம் / நுட்பம் வேறு. வளரும் ஊடகம் / நுட்பம் தனக்கான சேவையைக் காலத்தின் தேவையாக உருவாக்குகிறது. நம் திரட்டிகள் போல் உலகில் வேறு எங்கும் இல்லையே? அங்கு எல்லாம் பதிவுகள் வளரவில்லையா? தமிழில் பதிவுகள் வளராததற்குத் தமிழில் கணினியில் எழுதுவது குறித்த அறிவின்மை. தமிழ்நாட்டில் இணைய அணுக்கமின்மை என்று பல காரணங்கள். ஆங்கில விக்கிபீடியா பங்களிப்புக்கும் தமிழ் விக்கிபீடியா பங்களிப்புக்கும் உள்ள வேறுபாடுகளுக்கும் உள்ள அதே காரணங்கள்.

இப்ப தமிழ்மணம், தேன்கூடு இரண்டுமே ஜி திரட்டி தருகின்றனவே? அது போல் எவர் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒப்புதல் அளித்து சேரும் திரட்டிகள் தேவை இல்லை. knowledge foundation நடத்திய blog campக்கு எந்த திரட்டியின் அடிப்படையில் மக்கள் திரண்டார்கள்? திரட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நம்மை அறியாமல் நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு பலம் மிக்க மையத்தை உருவாக்கிக் கொள்வதை உணர வேண்டும். கட்டற்ற சுதந்திரம் diversityயும் அளிக்கும் இணையத்தில் நாமே ஒரு மையத்தை உருவாக்கி விடுவது வேடிக்கை. பின்னூட்டத்தை மட்டுறுத்து என்று திரட்டி சொன்னால் மட்டுறுத்துகிறோம். வேண்டாம் என்றால் விடுகிறோம். 40 பின்னூட்டம் தான் காட்டுவோம் என்றால் நம் பின்னூட்ட நடவடிக்கையை மாற்றுகிறோம். ஒரு நாள் தமிழ்மணம் இயங்காது என்று அறிவித்தால் அன்று முழுக்க யாரும் பதிவு போடாமல் dull அடிக்கிறார்கள். wordpress பின்னூட்டங்களை தமிழ்மணம் திரட்டாது என்ற ஒரே காரணதுக்காக wordpressக்கு மாறத் தயங்குகிறார்கள். நியாயமாக ஒரு பதிவர் எடுக்க வேண்டிய முடிவை, ஒரு திரட்டியின் நுட்பக் குறை கட்டுப்பட்டுத்துவதைக் கவனித்தீர்களா? கணினிப் பயனரின் சுதந்திரத்தை windowsன் குறை மட்டுப்படுத்துவதையும் இதையும் ஒப்பு நோக்கலாம்.

திரட்டிகளைச் சார்ந்து இயங்குவதால் பதிவிடுவதைத் தவிர இன்னும் பல விசயங்களைக் குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் அந்தப் போக்கை வளர்க்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள். நல்ல பதிவுகளை அறியாதவர்கள் தமிழ்மணத்தை மேம்போக்காகத் திறந்து பார்த்து விட்டு பதிவுலகம் குறித்த தவறான புரிதலோடு விலக வாய்ப்புண்டு. மையப்படுத்தல் என்ற பேரில் எல்லா வகைப் பதிவுகளையும் ஒரே இடத்தில் குவித்ததின் விளைவு. குழந்தைகள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் எந்தத் தயக்கமும் இன்றி தமிழ்த் திரட்டிகளை அறிமுகப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? அதே வேளை கூகுள் ரீடர், கூகுள் பதிவுத் தேடல், blogger, wordpress என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் நுட்பங்களை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வேண்டியதை அவர்களே தேடிப் படிக்கக் கற்றுக் கொள்வார்கள்.

பதிவு எழுதுபவருக்கு என்ன எழுதினாலும் விளம்பரப்படுத்த ஒரு வாய்ப்பாக திரட்டி இருக்கிறதே தவிர, பதிவுகளை ஒரு மாற்று ஊடகமாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் தற்போதைய திரட்டிகளின் வடிவம், இல்லை.

எழுத்தாளர் மாநாடு, பட்டறை நடத்தி ஆனந்த விகடனுக்கும் குமுதத்துக்கும் சொந்தச் செலவில் தட்டி வைப்போமா? சில நல்ல எழுத்தாளர்களை இப்பத்திரிக்கைகள் அடையாளம் காட்டி இருக்கலாம். சிலருக்கு கூடுதல் வாசகர்களைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், இவை இல்லாவிட்டால். சில பதிப்பகங்கள் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் இலக்கியமே இருந்திருக்காது என்று நினைப்போமா?

ஆனால், தமிழ்மணம் இல்லாவிட்டால் பிற திரட்டிகள் இல்லாவிட்டால் தமிழ்ப் பதிவுலமே இருண்டு விடும் என்று தவறான நினைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது அப்படி ஒரு நிலையைத் தெரியாத்தனமாக உருவாக்கி வைத்திருக்கிறோம். ஒரு திரட்டி தான் தேவை என்றால் அதையும் open source போல் உருவாக்க இயலும். மாய மந்திரமில்லை. tamilblogs.com கூட திறமூலமாக இருக்கிறது. நமக்குத் தேவையானதை நாமே உருவாக்க முடியும். கட்டுப்பாடுகள், குறை உள்ள பழைய திரட்டிகளுக்கு ஆள் சேர்ப்பதை விட திறமான புதிய திரட்டிகளை உருவாக்கலாம். திரட்டிகளை உருவாக்குவது எப்படி என்று கூட பட்டறையில் சொல்லித் தரலாம். என்ன அடிப்படையில் சேர்க்கிறார்கள், என்ன அடிப்படையில் நீக்குகிறார்கள் என்ற தெளிவில்லாத மூடு மந்திரத் திரட்டிகளுக்கு ஆதரவளிக்கத் தேவை இல்லை. பதிவர்களின் பலத்தால் ஒரு பூங்கா உருவாகிறது. பிறகு, என் பதிவை பூங்காவில் சேர்க்கவில்லை என்று ஏங்குவது. நம் ஒன்றுகூடலால் ஒரு திரட்டி உருவாவது, பிறகு என்னை நட்சத்திரமாக்கவில்லை என்று புலம்புவது. தமிழ்ப் பதிவர்கள் கூடுதல் தன்னம்பிக்கை, தற்சார்பு, esteem உடன் செயல்பட வேண்டும் என்றால் திரட்டிகளைச் சாராமல் இயங்குவது முக்கியமாகப் படுகிறது.

திரட்டிகளே இல்லாவிட்டாலும் கூட தேடு பொறிகள் மூலம் தாளாரமாக வாசகர்கள் வருவார்கள்.

banner வைப்பதற்கு பெரிய அளவில் செலவு ஆனாலும் சின்ன அளவில் செலவு ஆனாலும் அது பிரச்சினையில்லை. இலவசத் தட்டிகள் வைக்காததன் மூலம் நாம் நடுநிலையாகச் செயல்பட வாய்ப்பு இருக்கும். திரட்டிகளின் சார்பின்றி நம் பதிவர்கள் செயல்பட்டால் இன்னும் நல்ல விளைவுகள் கிடைக்கும். அது குறித்த தன்னம்பிக்கை, சுய சார்பு தான் தமிழ்ப் பதிவர்களுக்குத் தேவை.

நாம் நம்ம திரட்டி என்று நினைத்து திரட்டிகளைப் பரப்ப முனைகையில், திரட்டி நிர்வாகங்கள் ஏன் இன்னும் இது போன்ற முன்னெடுப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்பது நெருடவில்லையா? பதிவுகளுக்குத் தொடர்பில்லாத கீற்று, திண்ணை ஆகியவற்றுக்கு நாம் மின்மடல் இட்டு விளம்பரப்படுத்தக் கேட்பது நியாயம். நாம் செய்வது விழிப்புணர்வா வழிபாடா நன்றியா ரசிகர் மன்ற மனோபாவமா?

ஏற்பாட்டாளர் 2:

திரட்டிகள் குறித்து ரவியுடன் நல்லதொரு விவாதம் நடைபெறுவது எனக்கும் நல்ல புரிதல்களை தருகிறது. இன்னும் சில கருத்துகள்.

//தமிழ்மணம் இல்லாவிட்டாலும் காலத்தின் போக்கில் ஒரு தானியங்கித் திரட்டி வந்திருக்கும்.//

உண்மை. ஆனால் வரலாறு என்பது ஏற்கனவே நிகழ்ந்தது தானே?
guess எல்லாம் செய்ய முடியாதே?

ரவி: வரலாறைச் சொல்லிக் கொடுப்போம். இனி வர இருப்பதை முழு சுதந்திரத்துடன் செய்வோம்.

ஏற்பாட்டாளர் 2: முதலாவது...இந்திய மொழிகளில் தமிழில்தான் அதிக பதிவுகள் என்று அதிகாரப்பூர்வமாக சொல்ல முடிவது இந்த திரட்டிகளால் தான்.

ரவி: சரி. tamilbloggers.orgல் எல்லா பதிவர்களையும் ஒரு பயனர் கணக்கு உருவாக்கச் சொன்னால் முடிந்தது கதை. :)

ஏற்பாட்டாளர் 2: மற்ற மொழிகளில் இப்படி ஒரு ஒருங்கிணைப்புக்கு வழி இல்லாதால் ஒன்று திரட்டல் சாத்தியமில்லாமல் இருக்கிறது.

ரவி:எந்தத் திரட்டியும் இல்லாமலேயே knowledge foundation பதிவர் பட்டறை நடத்தியது. அதில் நுழைவுக் கட்டணம் செலுத்தி மக்கள் கலந்து கொண்டார்கள் என்பதையும் கவனியுங்கள். நாம் இந்திய மொழி அளவில் பார்க்காமல் உலக அளவில் பார்த்தாலும் பதிவர் சந்திப்புகள், பட்டறைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஏற்பாட்டாளர் 2: தமிழில் இத்தனைப் பதிவுகள் வளர முக்கிய காரணம் இதுவரை- திரட்டிகளே. தமிழ்மண அறிமுகம் பலரை பதிவுகளின் வாசகராக்கி, பின் பதிவராக வகை செய்தது. பல பதிவர்கள் பிற பதிவர்கள் மூலமாகவே புதுப்புது நுட்பங்களை அறிய முடிந்தாலும் ஒரு தொகுப்பை தமிழ்மணத்தில் நேரடியாக பெற முடிந்தது. அதாவது ஒரு புதியவர் தமிழ்மணத்தை அடைந்தால் அவர் தமிழில் வலைப்பதிவு தொடங்குவதற்கான ஓரளவு தயார்நிலையை நேரடியாக பெற முடிந்தது.

இன்று நாம் வலைப்பதிவு என்றால் என்ன என்றே தெரியாத பலருக்கு வலைப்பதிவை அறிமுகம் செய்யவும், ஏற்கனவே அறிந்தவர்களுக்கு நுட்பங்களை அறிமுகம் செய்யவும் பட்டறை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இணையம் அறிந்தவர்கள் பலர் வலைப்பதிவை அறிந்தது திரட்டிகளின் மூலமாகத்தான்.

ரவி: இது வரை காலத்தில் தமிழ்த் திரட்டிகளின் முக்கியத்துவம் குறித்து நான் மறுக்கவில்லை. இனி வரும் காலத்தில் நாம் திரட்டிகள் சாராமலேயே இயங்க முடியும். அதனால் இழப்பு இல்லை என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஏற்பாட்டாளர் 2: இப்போது கூகுள் தேடலில் தமிழில் நாம் என்ன தேடினாலும் வலைப்பதிவுப் பக்கங்கள் கிடைக்கின்றன. அதுவே பலருக்கு நல்ல அறிமுகம் தந்துவிடும். ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அப்படி இல்லை. இந்த வேகமான வளர்ச்சிக்கு திரட்டிகள் தான் காரணம். அதே சமயம் இனி திரட்டிகளை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் பெரிதாக இல்லை என்பது உண்மைதான்.

ரவி: இந்தப் புரிதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏற்பாட்டாளர் 2: //திரட்டி நிர்வாகங்கள் ஏன் இன்னும் இது போன்ற முன்னெடுப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன //

பதிவர் சந்திப்பு என்ற நிலையிருந்து இப்போது தான் பதிவர் பட்டறை என்ற நிலைக்கு முன்னேறி இருக்கிறது. இது அதற்கும் மேம்பட்டது எனபதை நாம் நிருபிக்க வேண்டாமா? இது தொடரும்போது அவர்களும் தானாக ஒத்துழைப்பார்கள்.

மேலும் பட்டறையை நடத்துவது யார்? என்பது போன்றும் தனித்தனிக் குழுக்கள் தடத்தும் நிகழ்வுகளில் எல்லாம் ஏற்கனவே சொந்தப் பணம் செலவழித்து திரட்டிகளை நடத்துபவர்கள் பணம் செலவு செய்ய இயலுமா என்பது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. ஆங்காங்கே நடத்தப்படும் நிகழ்வுகளை முறையாக நாம் அவர்களுக்கு அறிவிப்பதில் தவறில்லை. அவர்களாக எல்லா நிகழ்வுகளுக்கும் அறிவிப்பு தருவது நடைமுறை சாத்தியம் இல்லை.

இங்கே கூட அதிகபட்சம் பத்து வலைப்பதிவர்கள
சேர்ந்து திட்டமிட்டு இந்த நிகழ்வு நடக்கிறது. இது போல இன்னும் இருக்கும் 2000+ பதிவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் நடத்த முடியும்.

இந்த நிலையில் திரட்டிகள் கண்டு கொள்ளவில்லை என்பதற்கும், திரட்டிகளை நாம் கண்டுகொள்ள வேண்டுமா என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

ரவி: இன்னும் நிறைய திரட்டிகள் வரட்டும். அவர்கள் எல்லாம் காசு கொடுத்து தங்கள் திரட்டியை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பதிவர்கள் தனித்தியங்கும் வல்லமை பெற வேண்டும் என்பது தான் என் அவா. எப்படியும் இலவசமாகத் தட்டி வைப்போம் என்றால் காலத்துக்கும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மனம் வராது. இலவசமாகக் கிடைக்கும் என்று தெரிந்து விட்டால் யாரும் காசு தந்து ஆதரவளிக்க மாட்டார்கள். இது வரை பெரிய அளவில் எந்தத் திரட்டியும் பொருள் ஈட்ட வில்லை. எல்லா சிறிய சந்திப்புகளுக்கும் ஆதரவு அளிக்க முடியாது. அதே வேளை நாமும் காசு செலவழித்து வளர்த்து விட வேண்டாம் என்பதே என் நிலை

ஏற்பாட்டாளர் 2:

//என்ன அடிப்படையில் சேர்க்கிறார்கள், என்ன அடிப்படையில் நீக்குகிறார்கள் என்ற தெளிவில்லாத மூடு மந்திரத் திரட்டிகளுக்கு ஆதரவளிக்கத் தேவை இல்லை//

சேர விரும்புகிறவர்களைத்தான் சேர்க்கிறார்கள். யாரையும் வலுக்காட்டாயமாக அழைத்து வருவது இல்லை.

ரவி: எதையும் திரட்டுவது தான் திரட்டி. கூகுள் போல. விதிகளுக்கு உட்பட்டு திரட்டுவது மன்றமே. திரட்டி என்ற பெயரில் மன்றம் நடைபெறுவதைத் தான் சுட்டிக் காட்டினேன். மன்றம் என்ற சொல்லி விட்டே மன்றம் நடத்தினால் ஒரு பிரச்சினையுமில்லை.

சேர்க்க விரும்புபவர்களைத் தான் சேர்க்கிறார்கள். சரி. ஆனால், விருப்பமுடைய எல்லாரையும் சேர்ப்பார்களா? திரட்டிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதுபவர்களைத் தான் சேர்ப்பார்கள். சட்ட திட்டங்களில் உடன்பாடில்லை என்றால் உங்களால் சேர முடியாது. எடுத்துக்காட்டுக்கு, உங்கள் ip முகவரி அவர்களுக்குத் தெரிய வரும். நீங்கள் திரட்டி நிர்வாகத்துக்கு வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாவிட்டால் திரட்டிகளில் சேர முடியாது. (கவனிக்கவும்: திரட்டி நிர்வாகத்துக்கு என்று சொன்னேன். திரட்டி நிர்வாகம் ஐபி முகவரியை வெளியில் தருகிறது என்று சொல்லவில்லை). இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அரசியல் சர்ச்சைகளுடன் கூடிய கருத்துக்களை எழுதக் கூடியவருக்கு இது பாதுகாப்பு அளிக்காது. ஏனெனில், திரட்டி நிறுவனங்கள் அவர்கள் பதியப்பட்டுள்ள நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இயங்குபவை. நாட்டின் சட்ட நிறுவனங்கள் ஏதேனும் காரணத்துக்காக இத்திரட்டிகளை அணுகி ஐபி முகவரிகளைக் கோரினால் தரக் கடமைப்பட்டவை.

இதே உள்ளடக்கம், கருத்து, விண்ணப்பம் என்று எந்த நிபந்தனையும் இன்றி திரட்டும் கூகுள் போன்ற திரட்டிகள் பதிவருக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்கன்றன.

ஏற்பாட்டாளர் 2: நீக்குவது குறித்து- அதை தணிக்கை என்று நான் நினைக்கவில்லை. தமிழ்மணத்தில் இருந்து நீக்கப் பட்ட பதிவுகள் பிறபதிவர்களால் புகார் செய்யப்பட்டு விவாதிக்கப் பட்டே நீக்கப் பட்டன. தனிமனிதத் தாக்குதல்களை நீக்குவது நியாயமானது என்றே கருதுகிறேன். ( இன்னும் சில இருக்கின்றனவே அவற்றை எல்லாம் ஏன் நீக்கவில்லை? பிறபதிவர்களால் புகார் செய்யப் படும்போதுதான் அவர்கள் விவாதித்து நீக்குகிறார்கள் என்று அறிகிறேன்.)

ரவி: ஒரு திரட்டியில் 100 பேர் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மீதி 99 பேருக்குப் பிடிக்க வில்லை என்பதால் நான் என்ன எழுதுகிறேன் என்பதை மாற்ற முடியாது. 99 பேரும் உண்மை சொன்னாலும் பொய்யைச் சொல்லும் உரிமை எனக்கு உண்டு. வேண்டுமானால், தங்களுக்கு விருப்பம் இல்லாத பதிவை காட்டாதே என்று 99 பேரும் திரட்டியைக் கேட்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த hide blog நுட்ப வசதி செய்ய இயலாத திரட்டி, என்னை திரட்டியை விட்டு வெளியே போ என்று சொல்வது தவறு. எல்லாவற்றையும் திரட்ட வேண்டும். யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் காட்ட வேண்டும். இணையம், தேடு பொறிகள், உலகாளவிய திரட்டிகள் இயங்குவது இந்த அடிப்படையில் தான்.

ஒரு திரட்டியில் இணைந்த பிறகு பதிவராக நாம் என்ன எழுதுகிறோம் என்பதை திரட்டி நிர்வாகமும் திரட்டியில் இணைந்துள்ள பிறரும் கட்டுப்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூகுளைத் திட்டி எழுதலாம். ஆனால், கூகுள் உங்கள் தளத்தைத் திரட்டுவதை நிறுத்தாது. ஆனால், தமிழ்மணத்தைத் திட்டித் தொடர்ந்து பதிவு இடுங்கள். 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால் வெளியேற வேண்டிய நிலை உங்களுக்கு வரும்.

நிகழுலகில் ஒரு மன்றம் செயல்படும் விதத்துடன் தமிழ்த் திரட்டிகள் இயங்கும் நிலையை முற்றிலும் ஒப்பிட முடியும். இணையம் தரும் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் விதத்திலேயே தற்போதைய திரட்டிகள் உள்ளன.

திரட்டிகள் மூலமே பதிவுகளைப் படிக்க மக்களைப் பழக்கப்படுத்துவதால் திரட்டிகளுக்கு வெளியே தேடிப் படிக்கும் தேவை, நுட்ப அறிவை மழுங்கடித்து விடுகிறோம். இதனால் திரட்டிகளில் வரும் குப்பை, பொய்யையும் படிக்க வேண்டி இருக்கும் வாசகர்கள் தன்னுடைய சுதந்திரம், பாதுகாப்பு காரணங்களுக்காக திரட்டிக்கு வெளியே எழுதப்படும் பதிவுகளைக் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள்.

ஏற்பாட்டாளர் 3: ரவியின் பெரும்பாலான கருத்துக்களோடு நான் முழுவதும் உடன்படுகிறேன். திரட்டிகள் (இது கூட சரி கிடையாது .. தமிழ்மணம் என்பதே சரி...) எவ்வளவு தூரம் தமிழ் வலைப்பதிவுகள் பெருக உதவி செய்ததோ அதற்கு மேலாகவே தமிழ் வலைப்பதிவுலகில் பல பிரச்சனைகளுக்கு platform அமைத்து கொடுத்திருக்கிறது/கொடுத்துக்கொண்டிருக்கிறது. வலைப்பதிவின் அடிப்படை நோக்கத்திலிருந்தே விலகி எந்த தலைப்பில் எழுதுவது ... யாரை குறிப்பிட்டு எழுதுவது , பின்னூட்ட வெறி என்று வலைப்பதிவுலகின் தரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. அதைப்போலவே திரட்டிகளுக்கு வணிக நோக்கங்கள் இல்லை என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. வணிக ரீதியான வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை என்பதே உண்மை.. அதைப்பற்றி கருத்து இந்த களத்தில் விவாதிக்கப்பட வேண்டியதில்லை என்றாலும் ... தமிழ் வலைப்பதிவுலகில் வலைப்பதிவு பட்டறை மாதிரியான நல்ல முயற்சிக்கு திரட்டிகள் இன்னும் எவ்வளவோ வகையில் உதவியிருக்கலாம் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது.

ரவி: ஏற்பாட்டாளர் 3, சரியாகச் சொன்னீர்கள். பதிவுகளின் எண்ணிக்கை பெருக திரட்டிகள் காரணமாக இருக்கும் அதே வேளை திரட்டிகள் இருப்பதாலேயே உருவாகி இருக்கும் பிரச்சினைகளை நாம் மறந்து விடுகிறோம். பதிவுலகம் = தமிழ்மணம் என்ற சமன்பாடு உருவாக விட்டதே பிழை. ஒன்றின் பிழையை இன்னொன்றின் குறையாக புரிய வைக்கிறது. கணினியை அறிமுகப்படுத்தும்போதே கண்ணைக் கட்டி விண்டோஸை மட்டும் அறிமுகப்படுத்துவதால் கணினிப் பயனருக்கு உள்ள சுதந்திரத்தை விளக்க கட்டற்ற இயக்கம் வைத்து நடத்தி தாவு தீரும்..(லக்கி லுக் காப்புரிமை பெற்ற சொல் :))..அதே போல் பதிவுலகம் = தமிழ்மணம் அல்லது சில திரட்டிகளின் கூட்டு என்ற நிலையை இனிமேலும் உருவாக்க வேண்டாம்.

வலைப்பதிவின் அடிப்படை நோக்கம் என்கிற ஏற்பாட்டாளர் 3ன் சொற்றொடர் இங்கு முக்கியம். தனக்குப் பிடித்ததை, தான் தெரிவிக்க விரும்புவதை எழுதுவதற்குத் தான் வலைப்பதிவு. வலைப்பதிபவர்கள் எல்லாம் திரட்டிக்கு வர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

எடுத்துக்காட்டுக்கு, ஒரு பள்ளி தன் வலைப்பதிவை நடத்தி அதில் பள்ளிக் குழந்தைகளின் படைப்புகளை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை அக்குழந்தைகளின் பெற்றோர்கள், அடுத்த வகுப்பு பிள்ளைகளை பார்த்து மகிழ்ந்தாலே போதுமானது. வலைப்பதிவின் நோக்கம் நிறைவேறி விடுகிறது. அவர்கள் பதிவைப் படிக்க திரட்டியில் இணைக்க வேண்டும் என்று சொல்லித் தருவதை விட பெரிதாக feed subscription இணைப்பு தாருங்கள். அதைப் பார்த்து விரும்புபவர்கள் தங்கள் வாசிப்புப் பட்டியலில் என்று சொல்லித் தர வேண்டும். தன்னுடைய பதிவை படி படி என்று ஒவ்வொரு திரட்டியாக ஏறி இறங்கி பதிந்து கொண்டிருக்கத் தேவை இல்லை என்ற எண்ணம் அவருக்கு வர வேண்டும். பதிவர்களாகிய எழுத்தாளர்களுக்கு இந்த அறிவைப் புகட்டும் வேளையில் வாசகர்கள் தமிழ்மணத்தில் எல்லாம் குப்பையாக என்று புலம்பிக் கொண்டு இருப்பவர்களிடத்து தாங்கள் விரும்பும் பதிவுகளை மட்டும் படிப்பது எப்படி என்று feed readerகள் குறித்து சொல்லித் தர வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் ஆகிய இருவருக்கும் முழு சுதந்திரம் அளிக்கும் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே நுட்ப ஆர்வலர் என்ற முறையில் சரி. மற்ற எல்லாம் ரசிகர் மன்ற மனோபாவம். தான். நாம் தமிங்கிலத்தில் பழகி விட்டோம் என்பதற்காக அதையே புதியவர்களுக்குத் திணிக்கத் தேவை இல்லை என்று மா.சி சொன்னது போல் நாம் திரட்டிகள் மூலம் தான் அறிமுகமானோம் என்பதற்காக அதையே புதியவர்களுக்கும் திணிக்கத் தேவை இல்லை. இன்னும் சுதந்திரமான தெரிவுகளைத் தரலாம்.

திரட்டி வாசகர்கள் அவர்கள் வலைப்பதிவைப் பார்க்க இயலாததால் அவர்களுக்கு ஒரு நட்டமும் வந்து விடப் போவதில்லை. இன்று ஒரு பள்ளி இணையாததால் வாசிப்புலகுக்கு பேரிழப்பு போன்று தோன்றலாம். ஆனால், நாளை தமிழ்நாடு முழுக்க பள்ளிகள், குழந்தைகள் என்று வலைப்பதியும் போது அவர்களுக்கு என்று தனித்திரட்டி உருவாகி இருக்கும். இல்லை, உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அத்தனை பேரும் பொதுத் திரட்டியில் இணையவில்லை என்று வருந்திக் கொண்டிருப்போமா? technoratiயில் கோடிக் கணக்கானவர் இணையாமல் இருக்கலாம். அவர்கள் எல்லாம் இணையாததால் ஆங்கில வலைப்பதிவுகளை வாசிக்க இயலவில்லை என்று வருந்துகிறோமா? என்ன ஒன்று தமிழ் வலைப்பதிவில் எழுதினாலும் அதை படித்தே தீர்ந்து விட வேண்டும் என்று கொலை வெறி கொல்லத் தேவை இல்லை. வலைப்பதிவர்கள் எல்லாம் சகோதரர்கள் என்று எல்லாம் உணர்ச்சி வசப்படத் தேவை இல்லை.

வலைப்பதிவு என்பது ஒரு கருவி என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும். சிலர் பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். சிலர் மேடையில் பேசுகிறார்கள். நாம் வலைப்பதிகிறோம். வலைப்பதிவு என்பது நமக்கு கருவி. வலைப்பதியாமல் இணையத்தளத்தில் கட்டுரையாக எழுதலாம். எங்கு எழுதுகிறோம் எப்படி எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம். நான் தேடும் ஒரு தகவல் கூகுளில் சிக்கினால் அது மடற்குழுவில் இருந்தாலும் இணையத்தளத்திலு இருந்தாலும் படிக்கத் தான் போகிறேன். வலைப்பதிவு என்பதற்காக concession ஏதும் இல்லை. அது போல் புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கும் பிடித்ததை பயனுள்ளதை எழுதுங்கள். அதைப் பிடித்தவர்கள், பயனுள்ளவர்கள் தொடர்ந்து படிப்பார்கள் என்று சொல்லித் தர வேண்டும். அதை விட்டு விட்டு - திரட்டியில் அரசியல், பதிவுலக அரசியல் - என்றெல்லாம் வகுப்பு எடுக்க வேண்டிய அளவுக்கு திரட்டிகளால் நம் பதிவுக் கலாச்சாரம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர வேண்டும். நான் எப்படி பதிவிடுகிறேன் என்ற முழுச் சுதந்திரம், எண்ணம் எனக்கு இருக்க வேண்டும். அதை influnce செய்யும் எதுவும் புறக்கணிக்கத்தகதே என்கிற விழிப்புணர்வு வர வேண்டும்.

திரட்டிகளில் இருந்து சிலர் விலகி தனியே பதிந்தால் " குய்யோ முய்யோ" என்று அலறி போகாதே என்று அலறுகிறோம். திரட்டியில் இருந்து விலகி எழுதினால் படிப்பதற்கு வேறு வழியே இல்லையா என்ன? திரட்டி திரட்டி என்று over buildup கொடுத்து வலைப்பதிவர்கள் நியாயமாக அறிந்திருக்க வேண்டிய feed subscription ,feed reader போன்ற விசயங்களை அறிய விடாமல், முயல விடாமல் அறியாமையில் சோம்பலில் வைத்திருக்கிறோம்.

1000 பேர் படிக்க வேண்டும் என்று ஏங்கி, 100 பேர் பின்னூட்டம் இட வேண்டும என்று மருகி வலைப்பதியக் கற்றுக் கொடுத்தால் பட்டறைக்கு வருபவர்களுக்கு நம்மை அறியாமல் சேர்த்தே complex, politics எல்லாவற்றையும் சேர்த்து விதைக்கிறோம். நாம் கற்றுத் தருவது மின்மடல் எப்படி எழுதுவது போல் தான். நுட்பத்தை மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் யாருக்கு எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்பது அவரது தேவை, purpose பொறுத்தது. குருட்டாம்போக்கில் 100 மின்மடல் முகவரிகள் கொடுத்து இவர்களுக்கு எல்லாம் எழுதினால் அவர்கள் உனக்கு பதில் எழுதுவார்கள் என்று சொல்வது போல் நீ திரட்டியில் வந்து எழுது அவர்கள் எல்லாம் வந்து படிப்பார்கள் என்று சொல்வது.

//அதைப்போலவே திரட்டிகளுக்கு வணிக நோக்கங்கள் இல்லை என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. //

தமிழ்மணம் tmi என்ற நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. பதிவர்களின் உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு திரட்டி விற்கப்பட்டது, விற்க இயலும் என்பதைக் கவனத்தில் கொள்க.

// வணிக ரீதியான வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை என்பதே உண்மை.. //

முற்றிலும் உண்மை. திரட்டிகளுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் வரும்போது விளம்பரம் இடாமல் தளத்தை நடத்துவோம் என்ற உறுதி அளிக்க முடியுமா எந்தத் திரட்டியாலும். கொஞ்ச நாள் முன்பு வரை கூட - விளம்பரம் செய்யுங்கள் - என்ற தமிழ்மணத்தில் காண முடிந்தது. வணிக நோக்கு தவறு என்று சொல்ல வர வில்லை. தமிழ் இணையம் முன்னேற வேண்டுமானால், தமிழ் இணையத்தில் பொருள் ஈட்ட முடியும் என்ற நிலை வருவது அவசியம். அப்போது தான் இன்னும் புதிது புதிதான திறம் மிக்க முயற்சிகள் வரும். ஆனால், இப்படி வணிக நோக்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும். நம் செயற்பாடுகளையும் - கையில காசு வாயில தோசை - என்று அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

//அதைப்பற்றி கருத்து இந்த களத்தில் விவாதிக்கப்பட வேண்டியதில்லை என்றாலும் ... தமிழ் வலைப்பதிவுலகில் வலைப்பதிவு பட்டறை மாதிரியான நல்ல முயற்சிக்கு திரட்டிகள் இன்னும் எவ்வளவோ வகையில் உதவியிருக்கலாம் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. //


தேன்கூடு, தமிழ்மணம் நிகழ்வுக்கு ஆதரவு வழங்கி இருப்பதாக ஏற்பாட்டடாளர் 4 குறிப்பிட்டார். மன்னிக்கவும். வெறும் t-shirt கொடுத்ததை என்னால் ஆதரவாகக் கருத முடியாது. இந்த t-shirt இல்லாமலும் பட்டறை நடக்கும். 100 t-shirt அடித்து தங்கள் தளத்தை விளம்பரப்படுத்த இயல்பவர்களுக்கு அதில் ஒரு 10 t-shirt காசையேனும் அளிக்க நினைத்திருக்கலாம் அல்லவா? தங்கள் தள விளம்பரம் என்ற சுயநலம் மட்டுமே இதில் தெரிவதைத் தவிர, பதிவுலகை வளர்க்க வேண்டும் என்ற நோக்கமும் இதில் தெரியவில்லை.

எங்கள் திரட்டி எங்கள் திரட்டி என்று இவ்வளவு புளங்காகிதப்படுகிறோம். ஆனால், அந்தத் திரட்டி எப்படி செயல்படுகிறது என்பதில் நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமானால், தமிழ்மணத்துக்கு பதிவு எழுதியோ மடல் எழுதியோ கேட்டு விட்டுக் காத்துக்கொண்டிருக்க வேண்டும். வேண்டுகோள் மட்டும் வைக்கலாம். முடிவு நம் கையில் இல்லை என்னும் போது பதிவர்- திரட்டி என்ற இரண்டு எல்லைகளுக்குள்ள வேறுபாட்டை அறியலாம்.

பதிவர்கள் , திரட்டிகள் இருவரும் ஒருவரை ஒருவர் சாராமல் இயங்கும் சூழல் தான் பதிவுலகத்துக்கு ஆரோக்கியமானது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு பதிவு நன்றாக இருக்கிறது என்றால் அதை திரட்டி தானாக திரட்டிக் காட்ட வேண்டும். தற்போது, பதிவர்களின் அனுமதியுடனேயே திரட்ட வேண்டி இருப்பதால் நல்ல பதிவுகளைத் தெரிந்தே தமிழ்மணம் தவறவிடலாம். ஏன் என் பதிவைச் சேர்த்தாய், ஏன் என் பதிவை நீக்கினாய் என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தமிழ்மணம் எல்லாவற்றையும் திரட்ட வேண்டும். உண்மையில் இதற்கு பதிவருடைய அனுமதி தேவை இல்லை. இணைப்புகள் இல்லாமல் இணையம் இயங்க முடியாது. உள்ளடக்கமாக இல்லாமல் வெறும் இணைப்புகளை மட்டுமே தமிழ்மணம் வழங்குகிறது. எனவே, ஒரு பதிவைச் சேர்க்க பதிவருடைய அனுமதிக்குக் காத்திராமல் பதிவுகளை அதுவே திரட்ட வேண்டும். ஒருவர் கருவிப்பட்டையைச் சேர்க்காவிட்டாலும் பின்னூட்ட நிலவரம் காட்டும் வகையில் தமிழ்மணம் தனித்தியங்க வேண்டும். அதாவது அதன் வசதிகளை செயல்படுத்தும் திறன் பதிவரின் உதவியைச் சார்ந்து இருக்கக் கூடாது.

ஏற்பாட்டாளர் 5: திரட்டி குறித்த நண்பர்களின் கருத்துக்களில் எனக்கு நிறைய மாறுபாடு உண்டு. தமிழ்மணம் குறித்து வைக்கும் விமர்சனங்கள் போன்ற விமர்சனங்கள் பல பத்திரிகையுலகில் தினத்தந்தி மீது உண்டு. இதுகுறித்து விவாதிக்கும் சபை இதுவல்ல என்பதால் விடு ஜூட்.....

ரவி: சரி ஜூட் விடுவோம். ஆனா, பத்திரிக்கை உவமானத்தை இழுத்ததால் ஒரு உவமை இன்னொரு முறை :) (Grr..) பத்திரிக்கையாளர் சந்திப்பு, பட்டறை நடந்தால் நாம் அங்கு தினத்தந்தி, தினமலர் தட்டியையா வைப்போம்? மாட்டோம் தானே? தங்கள் எழுத்துக்களைப் படிக்க இந்த இந்த பத்திரிக்கைகளை வாங்கிப் படியுங்கள் என்று சொல்வோமா? சிறு பத்திரிக்கையாளர்கள், இலக்கிய பத்திரிக்கையாளர்கள், பெரிய பத்திரிக்கையாளர் என்று குழுமி இருக்கும் இடத்தில் ஒரு சில பத்திரிக்கைகளை மட்டும் பிரதானப்படுத்திப் பேசுவோமா?

அது போல் பதிவர்களுக்குப் பதிவர்கள் என்ற அடையாளமே போதுமானது.

சரி, இன்றைய திரட்டி உரையாடலை இத்துடன் இனிதேஏஏஏ.. முடித்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்குச் செல்கிறேன்.

ஏற்பாட்டாளர் 5: சாரி ரவி. எனக்கு இது விதண்டாவாதமாக படுகிறது. எல்லா பத்திரிகைகளுக்குமான மாநாடு நடக்குமேயானால் அங்கே பத்திரிகைகளின் பேனர் வைக்கப்பட மாட்டாது. மாறாக Indian Newspaper Society, Press Trust of India போன்ற பத்திரிகை ஒருங்கிணைப்பாளர்களின் பேனர் இருக்கும். பதிவர் = பத்திரிகைகள், திரட்டி = ஒருங்கிணைப்பாளர். ஓகேவா?

நான் தினத்தந்தி உதாரணம் காட்டியது தமிழ்மணத்தின் பாமரத்தன எளிமை, அதிக தமிழ் பதிவாளர்களை சென்றடைந்தது போன்றவற்றை சுட்டிக் காட்டியே.

ரவி: உவமையில் பொருள் குற்றம் காண்கிறேன் :) இப்ப தமிழ் வலைப்பதிவர் மன்றம், தமிழ் வலைப்பதிவர் சங்கம் என்று உருவாக்கி இருந்தோம் என்றால் அவற்றை press trust of india போன்றவற்றுக்கு ஒப்பு நோக்கலாம். ஏனெனில், இவை முழுக்க முழுக்கப்பதிவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போதைக்கு சங்கம் இல்லாத நிலையில் தமிழ் வலைப்பதிவர் பட்டறை என்ற banner வைக்கிறோம். INS, PTI ஆகியவற்றில் முழு சுதந்திரம், கட்டுப்பாடு, திறந்த நிலை இருப்பது போல் நாமும் ஒரு அமைப்பை உருவாக்கலாம்.

ஆனால், பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிக்கைகளில் ஒரு கட்டுப்பாடும் இல்லாதது போல் திரட்டி நிர்வாகத்தில் நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தைக் காட்சிப்படுத்த உதவும் பத்திரிக்கைகள் போல் திரட்டிகள் ஒரு காட்சிப்படுத்தல் ஊடகம் அவ்வளவே. பதிவர்களை பத்திரிக்கை என்ற உங்கள் உவமைக்கு வந்தாலும் திரட்டிகள் அந்த பத்திரிக்கைகளை விநியோகிக்க, விளம்பரப்படுத்த உதவும் ஒரு agent அவ்வளவே. நாமே தெரு தெருவாகப் பத்திரிக்க விற்க முடியாது என்பதால் வேண்டுவோர் இங்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று இந்த agentஇடம் அளிக்கிறோம். புதிதாக பத்திரிக்கை தொடங்க வருபவர்கள் இந்த agentன் விற்பனை நிலவரம், அவரின் கமிஷன் தொகைக்கு ஏற்ப தங்கள் உள்ளடக்கம், விலையை மாற்றுவது போல் பதிவுகளுக்காகத் திரட்டி என்றிருந்த நிலை போய் திரட்டிகளில் என்ன படிக்கப்படுகிறதோ அதை மட்டும் வாசிக்கும் நிலைக்கு வாசகர்களையும் அதை மட்டும் எழுதத் தூண்டும் வகையில் பதிவர்களையும் தள்ளி விடக்கூடாது என்பது தான் கவலை.

.........

இப்படி எல்லாம் நீண்ட அந்த உரையாடல் பிறகு பட்டறை குறித்த வேறு நிர்வாகப் பணிகளில் மூழ்கி தொடர்பற்றது..திரட்டிகள் குறித்து பொதுவாக நான் எடுத்துரைக்கும் கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் இந்த உரையாடல் பதிவு செய்கிறது என்று நம்புகிறேன். இது ஆகஸ்ட் 2007ல் நடந்த உரையாடல். திடீரென்று யார் மேலும் கோபம் கொண்டோ hidden agendaவுடனோ எழுத எனக்கு எந்தத் தேவையும் இல்லை. ஏற்கனவே ஒரு பொதுக்களத்தில் நான் பதிவு செய்த கருத்துக்கள் குறைந்தபட்சம் இந்தப் புரிதலையாவது வாசிப்பவர்களுக்குத் தரும் என்று நம்புகிறேன்.

Thursday, December 13, 2007

திரட்டி எத்தனை திரட்டியடா?

புதிது புதிதாக பல தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள் வரத் தொடங்கியுள்ளன.

அண்மையில் கண்ட இரண்டு: http://www.thiratti.com, http://tamil.blogkut.com

தமிழ் வலைப்பதிவுகள் சார்ந்து இயங்கும் தளங்கள், திரட்டிகள் பட்டியலும் பார்க்கவும்.

இது போல் புதிய பல தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள், தளங்கள், இதழ்கள், முயற்சிகள் வருவது தமிழ்ப் பதிவுலகுக்கு நல்லது. திரட்டி சாராமல் பதிவர்கள் இயங்கவும், தமிழ் வலைப்பதிவுலகில் மையப்படுத்தல், நிறுவனப்படுத்தல், அதிகாரப்பீடங்களைத் தவிர்க்கவும் இவை உதவும்.

ஆனால், இந்தப் போக்கு இன்னும் வீரியமாக தொடர வேண்டுமானால் பதிவர்கள், தற்போது உள்ள திரட்டிகள் இரு தரப்புமே செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் சில உண்டு. அதற்கு முன், தற்போதைய நிலையைப் புரிந்து கொள்வோம். தற்போதைய நிலைகளை ஒட்டி எழும் கேள்விகள், தீர்வுகளையும் பார்ப்போம்.

நிலை

பதிவர் ஒருவர் X திரட்டியில் இணைய விருப்பம் தெரிவித்து தன் விவரங்களைத் தந்து சேர்கிறார். இன்னும் புதிதாக வரும் Y, Z திரட்டிகளில் சேர்கிறார். அப்புறமும் புதிது புதிதாக வரும் ஒவ்வொரு திரட்டியிலும் தன் விவரங்களைச் சேர்க்கச் சோம்பல் பட்டு சும்மா இருந்து விடுகிறார். இதனால் புதிதாக வரும் திரட்டிகள் நுட்பத்தில் சிறந்ததாக இருந்தாலும் உள்ளடக்கம் இல்லாமல் தடுமாறுகின்றன. தமிழ்மணத்தில் 2000+ பதிவுகளும், இரண்டு ஆண்டுகளாக இருக்கும் தமிழ்ப் பதிவுகள் தளத்தில் 700+ பதிவுகளும் தமிழ்வெளி தளத்தில் 300+ பதிவுகளும் மட்டுமே இருப்பதைக் கவனிக்கவும்.

தீர்வு என்ன?

தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள் தங்கள் தளத்தில் திரட்டப்படும் பதிவுகளின் முழுமையான விவரத்தை OPML வடிவில் தர வேண்டும். இந்தப் பொதுவில் வைக்கப்படும் OPMLகளைப் புதிதாக வரும் எந்தத் திரட்டியும், மற்ற திரட்டிகளும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையையும் பதிவர்கள் திரட்டித் தளங்களுக்குத் தர வேண்டும். பதிவர்களைச் சேர்க்கும் ஒவ்வொரு தளமும் இந்த நிபந்தனைக்கு உட்பட்டுச் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது ஒரு தெரிவாகவும் தரலாம். தற்போது இருக்கும் உறுப்பினர் பதிவர்களுக்கும் ஒரு மடல் எழுதி இந்த நிபந்தனைக்கு உட்படச் செய்யலாம். மறுப்பு தெரிவிக்கும் பதிவர்களை வேண்டுமானால் OPML பட்டியலில் இருந்து தவிர்க்கலாம்.

பயன் என்ன?

1. பதிவர்கள் ஒவ்வொரு திரட்டியாகப் போய் பதியத் தேவை இல்லை. ஒரு திரட்டியில் பதிந்தால் மற்ற எல்லா திரட்டிகளிலும் தானாகப் பதியபட்டு விடும். ஒவ்வொரு திரட்டியுலும் பதிந்து காத்திருக்கவும் பதிவதில் சிக்கல் ஏற்பட்டு மிரளவும் தேவை இல்லை. திரட்டிகளில் இணைப்பது எப்படி என்று பட்டறை நடத்தவும் தேவை இல்லை :)

2. இத்திரட்டிகளின் தள வடிவமைப்பு, இடைமுகப்பு சார்ந்து வாசகர்கள் தங்கள் வாசிப்பைச் சுருக்காமல், தங்களுக்குப் பிடித்தமான மேலதிக வசதிகள் தரும் கூகுள் ரீடர் போன்ற திரட்டிகளில் பதிவுகளைப் படிக்க உதவும். தமிழ் வலைப்பதிவுத் திரட்டித் தளங்கள் ஓரிரு நாட்கள் தொழில்நுட்பத் தடை காரணமாகத் தடைபடும் போது கை, கால் நடுக்கம் போன்ற தொல்லைகளில் இருந்து வாசகர்கள் தப்பிக்கலாம் :)

3. எல்லா தளங்களிலும் ஒரே உள்ளடக்கம் என்னும் போது எந்தத் தனித் திரட்டியும் மையப்படுத்தப்படுவதோ நிறுவனப்படுத்தப்படுவதோ அதிகாரமயமாக்கப்படுவதோ தவிர்க்கப்படும். உள்ளடக்கம் ஒன்றே எனும்போது தங்கள் தளத்தை வேறுபடுத்திக்காட்ட நுட்பம் மட்டுமே ஒரே ஆயுதமாக இருக்கும். புதிதாகப் பதிவுலகச் சேவைகள் தர முனைபவர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கும். இருக்கிற எல்லா தளங்களையும் விட சிறப்பான தளத்தை வடிவமைக்க முடியும் என்று நினைப்பவர்கள் உள்ளடக்கம் பற்றிய கவலை இன்றி சட்டுப்புட்டுன்னு களத்தில் இறங்க முடியும். ஆக, பதிவர்களுக்கு ஒவ்வொரு தளமும் தங்களால் ஆன கூடுதல் வசதிகளைத் தர முயல்வார்கள். ஒரு பூங்காவில் இடம் பிடிக்க முடியவில்லை என்று வருந்துபவர்கள் பல பூங்காக்களில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும் :)

4. திரட்டிகளில் பதிந்து கொள்ளும் பதிவர்களின் ip ரகசியங்கள் திரட்டிகளிடம் தற்போது இருக்கின்றன. அரசியல் ரீதியாக இயங்குபவர்களுக்கு இது பாதுகாப்பானதல்ல. privacy பலத்த அடி வாங்கும். கொஞ்ச நாள் முன்னர் திரட்டி ஒன்று ipஐ வெளியிட்டது என்று பலத்த சர்ச்சை கிளப்பப்பட்டதை அறியலாம் (அந்த சர்ச்சையின் உண்மை என்ன என்பது வேறு விசயம்). இது போன்ற open OPMLகள் நடைமுறைக்கு வந்தால் பதிவர்களின் இரகசியமும் காக்கப்படும். திரட்டிகளும் வீண் பழிகளில் இருந்து தப்பலாம்.

இது நிரந்தரத் தீர்வா?

இல்லை. 10,000+ தமிழ்ப் பதிவுகள் வரும்போது இப்படி ஒவ்வொருவராக எழுதிப் போட்டு அனுமதி வாங்கி சேர்வது இயலாத காரியம். முட்டாள்த்தனமானதும் கூட. நம் அனுமதி இன்றியே கூகுள், யாஹூ போன்ற தேடுபொறிகள் நம் தளத்துக்கு வந்து உள்ளடக்கத்தை எடுத்துச் செல்லும்போது, உள்ளூர் திரட்டிகள் மட்டும் ஏன் இதைச் செய்யக்கூடாது? ஏன் நம் அனுமதி பெற வேண்டுகிறோம்?

இந்த பொது OPML ஒரு தொடக்கமாக இருக்கலாம். போகப் போக, வருங்காலத்தில் பதிவரின் அனுமதி இன்றியே எல்லா திரட்டிகளும் பதிவுகளின் உள்ளடக்கத்தைத் திரட்டும் நிலை வர வேண்டும். கண்ணில் அகப்படும் தமிழ்ப் பதிவுகளை எல்லாம் இவை திரட்டிக் கொள்ளட்டும். அவற்றில் எது காட்சிப்படுத்த உகந்தது, எது அல்லது என்று மனித முறையிலோ தானியக்கமாகவோ அவையே தீர்மானித்துக் கொள்ளட்டும். தமிழில் தற்போது, தமிழூற்று தளம் மட்டுமே ஓரளவு இந்தத் திசையில் சரியாகச் செயல்படுகிறது. இதைப் போன்ற tamil blog engineகள் தான் அடுத்த கட்டத் தேவையே தவிர, எழுதிப் போட்டு அனுமதி வாங்கிப் பதிப்பிக்கும் கற்கால பத்திரிக்கை முறை இல்லை. இந்தக் கற்கால முறையால் பதிவர்கள், திரட்டிகள் இரண்டுக்குமே நன்மை இல்லை.

உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்ப் பதிவுலகத் திரட்டிகள் தங்கள் தளத்தில் பதிந்துள்ள பதிவர்களுக்குப் பொதுவிலும் மின்மடல் மூலமும் இந்தப் பொது OPML முயற்சி குறித்து ஒரு அறிவிப்பு விடுக்க வேண்டும். மறுப்பதற்காக ஒரு வாரமோ இரு வாரமோ அவகாசம் தரலாம். மறுத்த பதிவர்களைத் தவிர்த்து பிறரின் பதிவுகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.

2007 முடிவுக்குள் இதை எந்தத் திரட்டியாவது செய்து காட்டி அடுத்த கட்டம் அல்லது சதுரத்துக்குத் தமிழ்ப் பதிவுகளை நகர்த்தும் பெருமையைப் பெற்றுக் கொள்ளலாம்.

எந்தத் திரட்டி செய்யப் போகிறது? எத்தனை பதிவர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பார்கள்?

கொஞ்சம் நப்பாசை, நிறைய நம்பிக்கையுடன்

ரவி

விருப்ப நிகழ்படங்களைத் தொகுத்துக் காட்சிப்படுத்துவது எப்படி?

YouTube, Google video என்று பல இடங்களிலும் பார்க்கும் விருப்ப நிகழ்படங்களைத் தொகுத்துக் காட்சிப்படுத்த vodpod தளத்தைப் பயன்படுத்தலாம். என் விருப்ப நிகழ்படங்களை http://ravidreams.vodpod.com தளத்தில் பார்க்கலாம். நிகழ்படங்களைப் பொதிய (embed) அனுமதிக்கும் எந்தத் தளத்தில் இருந்தும் படங்களைச் சேகரிக்கலாம். இவற்றை உங்கள் பதிவுகளிலும் காட்டலாம். இந்தப் பதிவின் பக்கப்பட்டையில் Ravi Tube என்று காட்சிப்படுத்தி இருப்பதைக் கவனிக்கலாம்.

Tuesday, December 11, 2007

இன்று முதல் தமிழில் wordpress தளம் !!!

இன்று முதல் wordpress தமிழ் இடைமுகப்புடன் வெளி வருகிறது !!!

பார்க்க - http://ta.wordpress.com

உங்கள் வேர்ட்ப்ரெஸ் தன்விவரப் பக்கத்தில் பக்கத்தில் interface languageஆக ta - தமிழ் தெரிவு செய்யப்பட்டிருந்தால் உங்கள் பதிவின் கட்டுப்பாட்டகமும் தமிழில் தெரியும்.

இந்திய மொழிகளில் தமிழே முதலாவதாக இத்தகைய இடைமுகப்புடன் வெளிவருகிறது !!

தமிழாக்கப் பங்களிப்புக்கு அழைப்பு விடுத்து ஐந்தே நாட்களில் அசுரத்தனமாக மொழிபெயர்த்து திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள் தமிழ் வலைப்பதிவு நண்பர்கள். 20க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தமிழாக்கப்பணியில் பங்களித்திருக்கிறார்கள். குழுமத்தில் பதிந்து பங்களித்தவர்கள் விவரத்தை இங்கு பார்க்கலாம்.

என்னுடைய மகிழ்ச்சியைச் சொல்வதற்கு வார்த்தைகள் ஏதும் இல்லை.

பிழை திருத்த, சரி பார்க்க வாய்ப்பு இன்றி நேரடியாக இந்த மொழிபெயர்ப்பு பொதுப்பார்வைக்கு வந்திருக்கிறது என்பதால் நிச்சயம் இதில் சில குறைபாடுகள் இருக்கும். நமது முதல் முயற்சி என்பதால் இதைப் பொறுத்துக் கொள்வீர்கள் தானே?

நீங்கள் கண்டறியும் குறைகள், விரும்பும் மேம்பாடுகள் குறித்து வேர்ட்ப்ரெஸ் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவித்தால் உதவியாக இருக்கும். இந்தத் தமிழாக்கப் பணி ஒரு தொடர் பணி என்பதால் வரும் நாட்களில் தொடர்ந்து செப்பனிடப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

அன்புடன்
ரவி

Thursday, December 06, 2007

2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம் வாருங்கள் !

இந்த ஆண்டு இறுதிக்குள் wordpressத் தமிழாக்கியே தீருவது என்று களத்தில் குதித்து இருக்கிறோம். கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளோம். இன்னும் 2200 சரங்கள் உள்ளன.

தமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே..

எப்படி செய்வது?

http://translate.wordpress.com/ சென்று பயனர் கணக்கு உருவாக்கி மொழிபெயர்ப்பு மொழியாகத் தமிழைத் தேர்ந்தெடுங்கள்.

http://translate.wordpress.com/list.php போய் மேலிருந்து கீழாக்க ஒவ்வொரு சரமாக மொழிபெயர்க்கலாம். edit என்ற குறிப்பிடப்பட்டிருப்பவை ஏற்கனவே தமிழாக்கப்பட்டு விட்டது. அவற்றை விட்டு விடலாம். இல்லை, சரியாக தமிழாக்கப்பட்டிருக்கிறா என்று உறுதி செய்யலாம். ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டவற்றைப் பார்ப்பதன் மூலம் தமிழாக்கம் குறித்த புரிதல் கிடைக்கும். add தொடுப்பு உள்ளவை இன்னும் தமிழாக்கப்படாமல் இருப்பவை.

தெளிவில்லாத சரங்களை அப்படியே விட்டுவிடுங்கள். வேறு யாராவது தமிழாக்கலாம். சரத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் தெரியவில்லை என்றால் அவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாக ஆங்கில எழுத்திலேயே எழுதி விடுங்கள். விவரம் தெரிந்த வேறு எவரும் தமிழாக்கலாம். ஐயங்கள், விளக்கங்களை comment பகுதியில் தந்தது உரையாடுங்கள். பொதுவான உரையாடல்களுக்கு, நம்முடையே ஆன ஒருங்கிணைப்புக்கு http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்தில் இணையலாம்.

தளம் முழுக்க ஒரே மாதிரி சொல்லாடல் இருப்பது முக்கியம்..இதுவரை நான் பயன்படுத்திய பொதுவான சொல்லாடல்க்களும் என் பரிந்துரைகளும்..

blog - பதிவு (most of the places, to be short)..வலைப்பதிவு (when we need to be more formal)

post - இடுகை

comment - மறுமொழி

category - பகுப்பு

tag - குறிச்சொல்

wordpress - வேர்ட்ப்ரெஸ

link - தொடுப்பு

user - பயனர்

logout (verb) - வெளியேறுக

login (noun) - புகுபதிகை

edit - திருத்துக

role - பொறுப்பு

blogroll - பதிவுப் பட்டியல்

password - கடவுச்சொல்

update - இற்றைப்படுத்துக (வினைச்சொல்), இற்றைப்பாடு (பெயர்ச்சொல்)

upgrade க்கு யாராவது சொல் பரிந்துரை செய்தால் நலம்..

manage - மேலாண்மை, மேலாள்க

admin - மேலாளர்

options - தெரிவுகள்

optional - விரும்பினால்

domain - ஆட்களம்

custom - தன் விருப்ப

error - பிழை

bug - வழு

activate - முடுக்கு

deactivate - முடக்கு

plugin - நீட்சி

theme - வார்ப்புரு

align - ஓரங்கட்டுக

justify - பரப்புக

spam - எரிதம்

privacy - தகவல் பாதுகாப்பு

private - இது போன்ற சொற்களை ஒற்றைச் சொல்லில் தமிழாக்க முயல அவசியமில்லை. இதை - என் பார்வைக்கு மட்டும் - என்று தமிழாக்கி இருக்கிறேன்.

ping - பிங் .

approve - ஏற்க

archives - தொகுப்புகள்

author - பதிவர்

image - படிமம்

upload - பதிவேற்றம்

import - இறக்குக, இறக்குமதி

export - ஏற்றுக, ஏற்றுமதி

parent category - தாய்ப் பகுப்பு

dashboard - கட்டுப்பாட்டகம்

default - இயல்பிருப்பு

draft - வரைவு

excerpt - துணுக்கு

header - தலைப்பகுதி

footer - அடிப்பகுதி

home - முகப்பு

server - வழங்கி

character - வரியுரு

sidebar - பக்கப்பட்டை

நினைவு வரும்போது பிற சொற்களையும் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவிக்கிறேன்.

மேலும் சில குறிப்புகள்:

%s, raquo போன்ற சரங்கள் நிரலாக்கக் கட்டளைகள். அவற்றை அப்படியே விட்டு விடுங்கள்.

வேர்ட்ப்ரெஸ் காரர்கள் ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாக சில இடங்களில் எழுதி இருப்பார்கள். அந்தத் தொனியையும் இளக்கத்தன்மையையும் நாமும் பின்பற்றுவது நலம்..இறுக்கமான தமிழாக்கமாக இல்லாமல் கலகலப்பான நட்புணர்வு கூடிய தமிழாக்கமாக இருப்பது நலம்.

சொல்லுக்குச் சொல், ஆங்கில இலக்கண அடிப்படையில் தமிழாக்கினால் தமிழ் நடையில் செயற்கையான நடை வந்துவிடும். ஆங்கிலச் சொற்றொடரைப் படித்துப் புரிந்து கருத்தை மனதில் இருத்தித் தமிழாக்கினால் போதுமானது. dubbing திரைப்படம் போல் ஆகி விடக்கூடாது.

ஆங்கிலத்தில் பெரும்பாலும் செயப்பாட்டு வினை (passive voice) பயன்படும். தமிழில் செய்வினை தான் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு இயன்றவரை
செய்வினை அடிப்படையில் எழுதலாம்.

நம் பண்பாட்டுக்கு ஏற்ப வினைச்சொற்களை மரியாதை விகுதிகளுடன் எழுதலாம். எடுத்துக்காட்டுக்கு, தேடு என்பதற்குப் பதில் தேடுக என்று தமிழாக்கலாம். இன்னொன்று நேர்மறையாக தமிழாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, delete userஐ பயனரை அழிக்கவும் என்று சொல்லாமல் பயனரை நீக்கவும் என்று தமிழாக்குவது..அழிப்பது என்பது நமது பண்பாட்டில் கடுமையான சொல்லாடல் தானே..

நீங்கள் குறைந்தது இவ்வளவு சரங்கள் தமிழாக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. உங்களால் இயன்றைச் செய்யலாம். ஒரு நிமிடத்துக்கு இரண்டு சரங்கள் என்ற வேகத்தில் தமிழாக்குவது பெரும்பாலும் சாத்தியமே..

எவ்வளவே பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டமா :)

அன்புடன்
ரவி

Friday, November 30, 2007

OpenID - இணையம் முழுக்க ஒரே பயனர் பெயர், கடவுச்சொல்

பல இணையத்தளங்களிலும் பயனர் கணக்கு துவங்க வேண்டி இருப்பதும், துவங்கிய பின் பயனர் கணக்கு,கடவுச்சொல் விவரங்களை மறக்காமல் இருக்க வேண்டி இருப்பதும் பல இணையப் பயனர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. இதற்கான தீர்வு தான் OpenID.

OpenID என்னும் ஒரே ஒரு பயனர் கணக்கு,கடவுச்சொல் கொண்டு பல இணையத்தளங்களில் உலாவ முடியும். இது ஒரு இலவச சேவை. இந்த openID சேவையைத் தரும் பல நிறுவனங்களை இங்கு காணலாம். Wordpress.comல் பதிவு வைத்திருப்பவர்கள் தங்கள் பதிவின் முகவரியையே பயனர் பெயராக, openIDஆகப் பயன்படுத்த இயலும். எடுத்துக்காட்டுக்கு, openIDஐ ஆதரிக்கும் FeedHub, Wikitravel தளங்களில் இதைப் பயன்படுத்திப் பாருங்களேன்.

தற்போது openID பயன்படுத்தும் தளங்கள் பட்டியல் இங்கு. நீங்கள் பயன்படுத்தும் தளங்களையும் openIDஐ ஆதரிக்கச் சொல்லி கடிதம் எழுதலாம். உங்கள் தளங்களிலும் இவ்வசதிகளை ஏற்படுத்தித் தரலாம்.

Wednesday, August 15, 2007

தனித்தளத்தில் பதிவது அவசியமா?

தமிழ்மண விவாதக்கேள்விக்கான பதில். மறுமொழி பெரிதானதால் பதிவாகவே இட்டு விடுகிறேன்.


//சொந்தமாக தளம் தொடங்கி கருத்துக்களை பதிவிட பதிவர்கள் ஆரம்பித்துவிட்டனர்//

தனி வலைமனைகள், வலைப்பதிவுகள் (Personal homepage, self-hosted blogs) உலகம் முழுக்க இருப்பவை தான். நாம ஒன்னும் புதுசா செய்யலை :)

//இலவசமாக சேவை வழங்கிகள் இருக்க, தனித்தளங்கள் அவசியமா?//

அவசியம் என்பது அவரவர் தேவை, விருப்பம், இயலுகை பொறுத்தது. சொந்த வீடு கட்ட இயன்றும் விரும்பி வாடகை வீட்டில் இருப்பவர்களும் உண்டு. கடன் வாங்கி சொந்த வீடு கட்டுபவர்களும் உண்டு. வாடகை வீடு, சொந்த வீடு இரண்டிலும் என்ன சாதக, பாதகங்கள் உண்டோ அதையே தனித்தளத்தில் பதிவதற்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

//சொந்தத் தளத்தில் எழுதுவதின் மூலமாக பொறுப்புணர்ச்சி அதிகமாகுமா?//

பொறுப்புணர்சிக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. blogger, wordpressலும் பொறுப்போடு எழுதலாம். தனித்தளத்தில் பொறுப்பு இல்லாமலும் எழுதலாம்.

//சாதக பாதகங்கள் என்ன?//

பாதகம் என்று ஒன்றும் இல்லை. கொஞ்சம் பணம் செலவாகும். மறக்காமல் தளத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். தரவுகளை அவ்வப்போது backup செய்து கொள்ள வேண்டும். பதிவு நிறுவுவது, அதை பராமரிப்பது என சில நுட்பங்கள் கற்றுக் கொள்ள நேரம் செலவாகலாம். ஆனால், இதன் மூலம் நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வீர்கள் என்பதால் இது நன்மையே.

//தனித்தளங்களில் பதிவதின் வாயிலாக தொழில்நுட்ப ரீதியாக மேலும் பல விசயங்களைக் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பு உருவாகிறதா?//

நுட்ப ரீதியில் விளையாடிப் பார்ப்பதற்கு தனித்தளம் முழு சுதந்திரம் தருகிறது. அப்படி விளையாடிப் பார்க்கையில் கற்றலும் கூடவே நிகழ்கிறது. blogger வார்ப்புருவை மாற்ற முடியும் என்றாலும் அதன் அடிப்படை நிரலாக்கக் கட்டமைப்புக்கு உட்பட்டே நாம் விளையாட முடியும். இலவச wordpressல் வார்ப்புருவை மாற்ற முடியாது.

//தனித்தளத்தில் எழுதுவதின் மூலமாக கிடைக்கும் லாபம் என்ன? //
தனிப்பட்ட அளவில், சொந்த வீட்டில் வசிப்பது போல் தனித்தளத்தில் பதிவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது தான் எல்லாவற்றையும் விட முக்கியம். இதே போல் யாராவது மகிழ்ச்சியாக உணர்ந்தால் தாராளமாக தனித்தளத்தில் பதியலாம். அவசியமா என்பதெல்லாம் அடுத்தபட்ச கேள்வி தான். blogger, wordpress.comன் கட்டமைப்புக்கு உட்படாமல் எனக்கு விரும்பியதை நுட்ப அளவில் சோதித்துப் பார்க்க முடிகிறது. பிற நன்மைகள்:

bloggerஐக் காட்டிலும் wordpress பிடித்தவர்கள் தனித்தளத்தில் wordpress நிறுவினால் கூடுதலாக ஏகப்பட்ட நுட்ப வசதிகள் கிடைக்கும்.

நம் தளத்துக்கு யார் எங்கிருந்து, எப்போது வருகிறார்கள் என்பது குறித்த ஏகப்பட்ட தரவுகள் கிடைக்கும்.

வேண்டாத பின்னூட்டங்களை தடை செய்யலாம். வருகிறவர்களின் ip அறியலாம்.

wordpress.com பதிவின் பின்னூட்டங்களைத் தமிழ்மணம் திரட்டாது. இதே தனித்தளத்தில் wordpress நிறுவினால் தமிழ்மணம் திரட்டும்.

myname.blogspot.com என்ற முகவரியை விட myname.com என்ற முகவரி பிறர் நினைவில் வைத்துக் கொள்ள எளிது.

மற்றபடி, தனித்தளத்தில் பதிபவர்கள் பெரிய பதிவர்களா என்பது போன்ற விவாதங்கள் வந்தால் அவை பிழையான புரிதலால் வருபவை. எங்கு பதிகிறோம் என்பதை விட என்ன பதிகிறோம், எப்படி பதிகிறோம் என்பது தான் என்றுமே முக்கியத்துவம் கூடியது.

Sunday, February 25, 2007

Thinkfree - இலவச இணைய office மென்பொருள்

Microsoft office, OpenOffice போல் இணையத்திலேயே இலவசமாக word, spreadsheet, presentation வசதிகளை தருகிறது Thinkfree.com தளம்.

ஏற்கனவே கூகுள் Docs and spreadsheets என்ற சேவையை அளித்து வந்தாலும், அதில் Powerpointக்கு இணையான வசதி இல்லாமல் இருக்கிறது (ஆனால், இதற்கான வசதிகளை கூகுள் வெளியிடும் என்று இணையத்தில் கிசுகிசுக்கிறார்கள்! Presently என்ற பெயரில் இதற்கான முன்னோட்ட வேலைகள் நடப்பதாகவும் தகவல் உலவுகிறது). Openoffice நிறுவ சொந்தக் கணினியோ அலுவலகக் கணினியில் நிர்வாக அணுக்கமோ தேவை. எனவே, இணையத்திலேயே ஒரு office மென்பொருள் இருப்பது விரும்பத்தக்கது.

இந்த வகையில் Thinkfree தளத்தில் word, spreadsheet, presentation மூன்றையும் இணையத்திலேயே இலவசமாக உருவாக்கவும் அவற்றை உலகெங்கும் இணையம் வழி பகிரவும் இயலும். இந்த கோப்புகளை பதிவிறக்கி Microsoft office வழியாகவும் பார்க்கலாம் என்பது சிறப்பு. தவிர, இணைப்பறு நிலையில் பயன்படுத்துவதற்கு பதிவிறக்கத் தக்க Thinkfree மென்பொருள்களையும் தருகிறார்கள்.

Thinkfree மென்பொருளை கூகுள் வாங்கி தன் Google Apps சேவையுடன் இணைக்கக்கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

இன்று தான் இந்த Thinkfree தளம் குறித்து அறிந்தேன். ஒப்பீட்டளவில் Google Docsஐ காட்டிலும் சிறந்த சேவையாகவே தோன்றுகிறது. நீங்களும் போய்ப் பார்த்து சொல்லுங்களேன்.

http://www.thinkfree.com/common/main.tfo

Thursday, February 22, 2007

கூகுள் கணக்குப் பொறி

கூகுள் தேடல் பெட்டியில் இருந்து கூட்டல், கழித்தல் போன்ற எளிய கணக்குகளை செய்யலாம்.

எடுத்துக்காட்டுக்கு, பின் வரும் இணைப்புகளை அழுத்திப் பாருங்கள்.

56*78

100 miles in kilometers

இது போன்ற சிறு கணக்குகள், அலகு மாற்றங்கள் ஆகியவற்றை கூகுள் தேடல் பெட்டியில் இருந்தே செய்யலாம். Windowsல் start->accessories->calculator போய் அதை எடுத்துச் செய்வதற்குள் கூகுளில் கணக்கைப் போட்டு முடித்து விடலாம். தவிர, Windows கணக்குப் பொறியில் இல்லாத பல கணக்குகளையும் கூகுளில் செய்யலாம்.

முழுமையான கூகுள் கணக்குப் பொறி உதவிக்கு இங்கு பார்க்கவும்.

கூகுளில் சொற்களை தேடுவதை தவிர்த்து நிறைய குறுக்கு வழித் தேடல்கள் செய்ய முடியும். முழுமையான தேடல் உதவிக்கு இங்கு பார்க்கவும்.

அன்புடன்,
ரவிசங்கர்.