Saturday, December 22, 2007

பதிவரா திரட்டியா? - திரட்டிச் சார்பு, திரட்டி அரசியல், பதிவர்-திரட்டி உறவு... - பாகம் 2 :)

பாகம் 1 இங்கு

சென்னை பதிவர் பட்டறை ஏற்பாடுகள் நடந்த போது அதன் நிர்வாகக் குழுவில் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் தாக்கம் குறித்த தீவிரமான உரையாடல் ஒன்று நடந்தது. பட்டறை முடிந்த பின் அதைத் தொகுத்து தங்கள் பதிவுகளில் யாராவது வெளியிடலாம் என்றும் உரையாடி இருந்தோம். அதை ஒட்டி அந்த உரையாடலின் பகுதிகளை இங்கு தருகிறேன். பட்டறை ஏற்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்த பிற நண்பர்களுக்கு தர்ம சங்கடம் வேண்டாம் என்பதால் என்னைத் தவிர பிறருடைய கருத்துக்களை பெயரை வெளியிடாமல் தருகிறேன்.

உரையாடலுக்கான சூழல் இது தான்: பட்டறை செலவில் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்ப்பதிவுகள், தேன்கூடு ஆகிய நான்கு தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளுக்கு விளம்பரத் தட்டி வைக்க வேண்டும் என்று முன்மொழியப்பட, ஆதரவாளர்கள் தவிர வேறு யாருக்கும் நாம் தட்டி வைக்கத் தேவை இல்லை என்று என் கருத்தை முன்வைத்தேன்.

இனி உரையாடல் பகுதிகள்...இந்த உரையாடல் நடந்த போது சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கு தமிழ்வெளி, தமிழ்மணத்தின் நிதி ஆதரவு கிட்டி இருக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

ரவி: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி எதுவும் பட்டறைக்கு நிதி ஆதரவு கொடுத்ததாகத் தெரியவில்லை. தேன்கூடு, தமிழ்மணம் கொடுக்கும் டி-சட்டைகளை அவர்கள் தளத்துக்கான promotion ஆகத் தான் பார்க்க இயலும். அந்த டி-சட்டைகளால் பட்டறை நடத்த ஒரு உதவியும் இல்லை. இப்படி இருக்க என்ன அடிப்படையில் பொதுச் செலவில் நான்கு திரட்டிகளுக்கு மட்டும் தட்டி வைக்க வேண்டும் என்று அறிய விரும்புகிறேன். நான்கு தளங்களும் .com முகவரியில் இயங்கும் -வணிக நோக்கு இல்லை - என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத தளங்கள். தமிழ்மணம் விற்கப்பட்டு பொருள் ஈட்டப்பட்ட ஒரு வணிக முயற்சி. தமிழ்ப்பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் உண்டு.

பதிவர் பட்டறை செலவுகளுக்கு எந்த திரட்டியும் பொருள் ஆதரவு தராத நிலையில் ஏன் திரட்டிகளை நாம் செலவு செய்து பரப்ப வேண்டும். பல வகைகளில் முன்பு ஏற்பாட்டாளர் 1 சொன்னது போல் நாம் திரட்டிகளைச் சாராமல் செயல்படுவது நன்று. எல்லா திரட்டிகளையும் நிறுத்தினாலும் பதிவுகள், பதிவர்கள் இருப்பர். ஆனால், பதிவுகள் இல்லாமல் திரட்டி இல்லை. எழுத்துப் பயிற்சிப் பட்டறையில் எழுத்துத் திறமையை வளர்ப்பது எப்படி என்று சொல்லித் தான் முன்னுரிமை அளிப்போம். நம் செலவில் விகடனுக்கும் குமுதத்துக்கும் தட்டி வைக்க மாட்டோம். இதே ஒப்புமையை பதிவுலகத்துக்கும் பொருத்திப் பார்க்லாம்.

நிதி ஆதரவு அளித்த சற்றுமுன், headway properties தவிர வேறு யாருக்கும் பொதுச் செலவில் தட்டி வைப்பதற்கான என் மறுப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நன்கொடை தொகையில் இருந்து தட்டி வைப்பதற்கான காசைக் கழித்துக் கொண்டு கணக்கு வைக்கவும் பரிந்துரைக்கிறேன்.

செய்முறை பயிற்சி, கலந்துரையாடல் முதலியவற்றில் திரட்டிகளின் அறிமுகம் எப்படியும் நிகழப் போகிறது. அதுவே போதுமானது என நினைக்கிறேன். எதற்கு காசு செலவழிக்கிறோம் என்பது முக்கியம். தட்டி வைக்காவிட்டாலும் எப்படியும் இந்தத் தளங்களின் பெயர்கள் பட்டறைக்கு வருவோருக்கு அறிமுகப்பட போகிறது என்கையில் காசு செலவழிக்கத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் badge, banner செலவு 10,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டறை செலவுகளிலேயே இது அதிகமாக இருப்பதால் இதன் நியாயமான தேவையைக் கேள்வி கேட்க வேண்டி உள்ளது.

திரட்டிகளை விட முக்கியம் blogger, wordpress, எகலப்பை போன்றவை. அவற்றையே காசு செலவழிக்காமல் அறிமுகப்படுத்த முடியும் போது திரட்டிகளுக்கு எதற்கு?

முதலில் திரட்டிகள் என்ற நிலையில் அறிமுகத்தை ஏன் சுருக்க வேண்டும்? இந்த 4 திரட்டிகளில் ஒரு சிலவற்றை நான் பயன்படுத்துவதே இல்லை. இது போக technorati தமிழ்பதிவுகள், ta.wordpress.com, adadaa.com, மகளிர் சக்தி எல்லாவற்றிலும் சிறிய வட்டத்திலான திரட்டிகள் உண்டு. தமிழ்பாரதி திரட்டி என்று சொல்லிக் கொண்டாலும் அதை உறுதிப்படுத்த வழியில்லை. திரட்டிகளின் திரட்டியான தமிழ். கணிமையும் உண்டு.

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மனு போட்டு விண்ணப்பித்துக் காத்திருந்து திரட்டியில் சேர்ந்து பிறகு 24 மணி நேர கெடு அறிவிப்புகளுக்கு பயப்பட்டுக் கொண்டு பதிவு எழுத வேண்டி இருப்பது என்றில்லாமல் சுதந்திரமாக பதிவர்கள் எதையும் இணைக்கத் தேவை இல்லாமல் தானாகவே திரட்டும் தமிழூற்றும் என் நுட்பப் பார்வையில் ஆகச் சிறந்த திரட்டி. எல்லா திரட்டிகளும் இப்படி சட்ட திட்டமில்லாமல் தன்னியக்கமாக ஆனால் - திரட்டியில் சேர்வது எப்படி - என்று நாம் வகுப்பு எடுக்கவே தேவை இல்லை.

உலகிலேயே இப்படி திரட்டி முறை வேறு எங்கும் இருப்பது போல் தெரியவில்லை. பதிவர்கள் நாமாக சேர்ந்து ஒரு திரட்டி முறையை வலுவுள்ளதாக ஆக்கி விட்டு பிறகு அதன் சாதக பாதகங்களுக்கு உட்படுட்டு நடந்து கொண்டிருக்கிறோம். திரட்டிகள் பட்டறையைக் கண்டு கொள்ளவில்லை என்று புலம்பவும் செய்கிறோம். தேன்கூடு பதிவில் இன்னும் மே மாச 20ஆம் தேதி பட்டறை அறிவிப்பு தான் இருக்கிறது. தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளியில் பட்டறை குறித்த அறிவிப்பு எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. அடையாள அளவில் கூட பட்டறைக்கு ஆதரவளிக்காதவர்களுக்கு காசு செலவு செய்து நாம் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்?

ஆண்டுக்கு 2,3 திரட்டிகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும். திறந்த நிலையில் அறிவித்து எல்லா சுட்டிகளின் பேரையும் சேர்க்கிறோம் என்றால் ஒரு கட்டத்தில் முடிவில்லாமல் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.எது நல்ல திரட்டி என்று உறுதி செய்து நம்மால் சேர்க்க இயலுமா? எது நல்ல திரட்டி என்று தீர்மானிக்க நமக்கு உள்ள உரிமை என்ன?

திரட்டிகள் குறித்த விழிப்புணர்வு பரப்புகிறோம் என்று சொல்வதே அவசியமற்றது. ஆண்டுக்குப் புதிது புதிதாக 2,3 திரட்டிகள் வருமோ என்ற நினைக்கிற நிலையில் ஒவ்வொரு திரட்டியாக அறிமுகப்படுத்துவது, சேர்க்கச் சொல்வது என்பது பதிவு வாசகர்களையும் பதிவர்களையும் சோரச் செய்யக்கூட வித்திடும்.

தட்டி விசயம் போக, பொதுவாகப் பட்டறையிலும் திரட்டி குறித்த over அறிமுகம், சார்பு, நன்றி நிலை இருப்பது தேவை இல்லை. லினக்ஸ் குறித்து அறிமுகப்பட்டறை நடத்தினால் உபுண்டு, சுசி, டெபியன் என்று எல்லாவற்றுக்கும் நம் செலவில் தட்டி வைக்கப்போவதில்லை. லினக்ஸ்க்கு பின்னுள்ள நுட்பம், அதன் கொள்கை, அவசியம் ஆகியவற்றையே சுட்டிக் காட்டுவோம். இணையம் குறித்த பட்டறை வைத்தால் கூகுளுக்கும் யாஹூவுக்கும் செலவு செய்து தட்டி வைப்போமா? நாம் பரப்ப வேண்டிய விழிப்புணர்வு நுட்பம் குறித்து தானே தவிர தனி நிறுவனங்கள் பற்றி அல்ல. இன்று ஒரு திரட்டி, நிறுவனம் வரும். நாளை போகும். ஆனால், நுட்பம் மட்டுமே வளர்ந்து கொண்டே இருக்கும். தன் இருப்பைத் தக்க வைக்கும்.

பட்டறைக்கு வருபவர்களுக்கும் உலகாளவிய பார்வையில் பதிவு நுட்பம், அதை எழுதவதன் மகிழ்ச்சி குறித்து அறிமுகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

....
....

ஏற்பாட்டாளர் 2: தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி போன்றவற்றுக்கும் நீங்கள் குறிப்பிட்ட மற்ற வலைப்பதிவு அறிமுகச் சேவைகளுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு இவற்றில் பதிவர் தன் ஒப்புதலுடன் இணைகிறார். மற்றவற்றில் பதிவருக்குத் தெரியாமலே அவை திரட்டப் பட வாய்ப்புகள் உண்டு.


ரவி:உங்கள் பார்வையில் இவை நிறை. என் பார்வையில் இது குறை. இணைப்புகள் தருவது, indexing செய்வது, ஓடைகள் திரட்டப்படுவது இவை எல்லாம் தான் இணையம் இயங்குவதின் அடிப்படை. நம் ஒவ்வொரு தளத்தின் பக்கத்தையும் கூகுளில் சேர்க்க எழுதி விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்த்தால் திரட்டியில் சேர விதிகளுக்கு உடன்பட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்பதின் அபத்தம் புரியும். இந்த அளவில் இவை மன்றங்களே. என்ன வேண்டுமானாலும் எழுதும் சுதந்திரத்தை இணையம், பதிவுகள் தருகின்றன. சில விதிகளுக்கு உட்பட்டு எழுத வேண்டும் என்ற வகையில் பலம் மிக்க அமைப்புகளான திரட்டிகள் பதிவர்களைக் கட்டுப்படுத்துகின்றன.

இணையத்தில் தானாக திரட்டப்படுவது தான் plus. அப்படி விருப்பம் இல்லையென்றால் கூகுள் போன்ற தேடுபொறிகள், கூகுள் ரீடர் போன்ற திரட்டிகள் வந்து செல்லாமல் இருக்க நம் தளத்தின் நிரலை மாற்ற முடியும். உண்மையில் நம் பதிவை எத்தனை தளங்களில் காட்ட முடியுமோ எத்தனை இணைப்புகள் பெற இயலுமோ அதற்கு தான் வலைஞர்கள் விரும்புவார்கள். பதிவைத் திரட்ட வேண்டுமானால் பதிவர் ஒப்புதல் தர வேண்டும் என்று திரட்டி நிர்வாகத்தாரும் பதிவரும் நினைப்பது நுட்பத்தில் பின்னோக்கிப் போவது போல்.

இந்த வகையில் தமிழூற்று மட்டும் தான் சரியான நுட்பத் திசையில் செல்கிறது. எல்லாவற்றையும் தானாகத் திரட்டுவது தான் திரட்டி. மற்ற அனைத்தும் மன்றமே. ஈழத்துப் பதிவுகளைத் தவிர்க்கிறார்கள் என்று தேன்கூடு மேல் குற்றச் சாட்டு உண்டு. என்ன தான் காரணம் என்றாலும், 24 மணி நேர அறிவிப்பு விட்டு தூக்குகிறார்கள் தமிழ்மணத்தில். இவை எல்லாம் மன்றச் செயல்பாடுகளே.

ஏற்பாட்டாளர் 2:தமிழ்மணம், தேன்கூட்டில் தகவலை மின்னஞ்சல் செய்தால் அவர்கள் அறிவிப்பில் வெளியிடுவார்கள். அனுப்பத் தவறி இருக்கலாம்.

ரவி:தமிழ்மணத்தில் மின்னும் இணைப்பாக இருக்கிறது. தேன்கூடு கதை தெரியவில்லை. "நாம் ஐயோ பாவம் பதிவர்கள் தானே, அவர்கள் பெரிய திரட்டிகள், எழுதிக் கேட்டால் தான் போடுவார்கள்" என்பதே ஏதோ அதிகார அமைப்பை உருவாக்குவது போல் இருக்கிறது. தானாக அவர்கள் இணைப்பு தர வேண்டாமா? இதைக் காட்டிலும் தானாக இணைப்பு தந்த தமிழூற்று, சற்றுமுன், கில்லி போன்றவை பாராட்டத்தக்கவை. இவை பதிவர்களில் ஒன்றாக தங்களை உணர்கின்றன. திரட்டிகள் admin முகவரிக்குப் பின்னால் அமர்ந்திருக்கின்றன.

ஏற்பாட்டாளர் 2:தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி ஆகிய நான்கின் தனித்தன்மையே பதிவர் தன் விருப்பப்படி இணைவதுதான். அப்படி இணைவதற்கான வாய்ப்புகள் எவை என்பதை அவர்களுக்கு அறிமுகம் செய்வது தவறில்லையே?

ரவி:அறிமுகப்படுத்துவதில் தவறே இல்லை. தாராளமாக அறிமுகப்படுத்தலாம். ஆனால், பதிவைப் படிப்பதற்கான ஒரே வழியாக இவற்றை அறிமுகப்படுத்தாமல் கூகுள் blog search , feed reader, google search போன்றவற்றையும் உள்ளடக்கி முழுமையாக அறிமுகப்படுத்துங்கள். தமிழ் மணம் முடங்கினால் 2000+ தமிழ்த் திரட்டிகளும் அதில் இருந்து நிரல் பெறுவதால் முடங்குகின்றன. தவிர, தமிழ்மணம் இல்லாவிட்டால் கையும் காலும் ஓடாத பதிவர்களும் பலர். வேறு வழிகளில் படிக்க முடியும் என்பதை மறந்து விடுகின்றனர். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி திரட்டிகளை மட்டும் அறிமுகப்படுத்தாமல் முழுமையான சிறந்த அறிமுகத்தைப் பதிவுலகுக்கு அளிக்க வேண்டும்.

கணினிச்சுவடி போல் தமிழ்ப் பதிவுலகுக்கும் ஒரு கையேடு / bit notice போல் உருவாக்கி அதில் திரட்டி முகவரிகள், wordpress, blogger, எகலப்பை முகவரிகள் என்று முக்கியமானவற்றைக் குறிப்பிட்டுக் கொடுக்கலாம். கையோடு வீட்டுக்கு எடுத்துப் போய் பார்த்துக் கொள்வார்கள். பட்டறை முடிந்த கையோடு கழற்றி வைக்கும் bannerகளை விட இவற்றுக்குச் செலவும் குறைவு. பயனும் நீடிப்பு. அதிக முகவரிகளையும் உள்ளடக்கலாம்.

ஏற்பாட்டாளர் 2:

தமிழில் 2000 பதிவுகள் இருக்கின்றன. அல்லது 3000 பதிவுகள் இருக்கின்றன என்ற கணக்கை தமிழ்மணம் போன்ற ஒரு பதிவுத் திரட்டி இல்லாமல் கொண்டு வந்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை. சிலநூறு பதிவுகளாக இருந்த போது மதியால் வலைப்பதிவுகள் பட்டியலை உருவாக்க முடிந்தது. அது பல நூறாக மாறியபோது தமிழ்மணத்தில் இருந்து தான் அந்த பட்டியலில் எண்ணிக்கை திரட்டப் பட்டது.

//இணையத்தில் தானாக திரட்டப்படுவது தான் plus. //

ஆனால் இன்று இப்படி ஒரு நிகழ்வு நடக்க ஒரு ஒருங்கிணைவை அடிப்படையில் திரட்டிகள் தான் உருவாக்கித் தந்தன. இல்லா விட்டால் எங்கோ, யாரோ, எப்போதோ ரயில் பயணங்கள் போலத்தான் இருந்திருப்போம். இரண்டுமே அவசியம் தான் என்று கருதுகிறேன்.

//தானாக இணைப்பு தந்த தமிழூற்று, சற்றுமுன், கில்லி//

அதன் காரணம் பட்டறையின் தன்னார்வலர்கள் ஒருவரேனும் இவற்றில் பங்களிக்கிறோம்.

ரவி: சரியாகச் சொன்னீர்கள். திரட்டி நிர்வாகங்கள் ஏன் பட்டறை வேலையில் இறங்கவில்லை? அவர்கள் பதிவர்களில் ஒருவராகத் தங்களை உணரவில்லையா? அப்ப அவர்கள் யார்? நாமெல்லாம் சேர்ந்து நமக்கு மேல்படியில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர் குழுவை உருவாக்கி வைத்திருக்கிறோமா? முறையாக நிறுவனமாகப் பதிவு செய்து இயங்கும் தேன்கூடு, தமிழ்மணம் போன்றவற்றிடம் இருந்து நமக்கு நேரடிப் பங்களிப்புகள் கிடைக்காது என்றால் நாமும் அவர்களை நிறுவனங்களாகவே பார்ப்போம். தூக்கிப் பிடிக்கத் தேவை இல்லை.

தமிழ்மணம் இல்லாவிட்டாலும் காலத்தின் போக்கில் ஒரு தானியங்கித் திரட்டி வந்திருக்கும். கூகுள் இல்லாவிட்டால் இணையம் இப்படி இருக்குமா என்று நினைப்பதும் தமிழமணம் இல்லாவிட்டால் பதிவுகள் இப்படி இருக்குமா என்று நினைப்பதையும் ஒப்பு நோக்க முடியும். இணையம் குறித்த மாநாட்டுக்கு கூகுள் ஆதரவு வழங்கும். சொந்தச் செலவில் மாநாடு நடத்தி யாரும் கூகுளுக்குத் தட்டி வைக்க மாட்டார்கள். நுட்பம் காரணமாக ஒன்று கூடுபவர்கள் ஒரு சில நிறுவனங்களை மட்டும் முன்னிறுத்தி செயல்பட மாட்டார்கள். நுட்பத்தை மட்டுமே முன்னிறுத்துவார்கள்.


சேவை வேறு. ஊடகம் / நுட்பம் வேறு. வளரும் ஊடகம் / நுட்பம் தனக்கான சேவையைக் காலத்தின் தேவையாக உருவாக்குகிறது. நம் திரட்டிகள் போல் உலகில் வேறு எங்கும் இல்லையே? அங்கு எல்லாம் பதிவுகள் வளரவில்லையா? தமிழில் பதிவுகள் வளராததற்குத் தமிழில் கணினியில் எழுதுவது குறித்த அறிவின்மை. தமிழ்நாட்டில் இணைய அணுக்கமின்மை என்று பல காரணங்கள். ஆங்கில விக்கிபீடியா பங்களிப்புக்கும் தமிழ் விக்கிபீடியா பங்களிப்புக்கும் உள்ள வேறுபாடுகளுக்கும் உள்ள அதே காரணங்கள்.

இப்ப தமிழ்மணம், தேன்கூடு இரண்டுமே ஜி திரட்டி தருகின்றனவே? அது போல் எவர் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒப்புதல் அளித்து சேரும் திரட்டிகள் தேவை இல்லை. knowledge foundation நடத்திய blog campக்கு எந்த திரட்டியின் அடிப்படையில் மக்கள் திரண்டார்கள்? திரட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நம்மை அறியாமல் நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு பலம் மிக்க மையத்தை உருவாக்கிக் கொள்வதை உணர வேண்டும். கட்டற்ற சுதந்திரம் diversityயும் அளிக்கும் இணையத்தில் நாமே ஒரு மையத்தை உருவாக்கி விடுவது வேடிக்கை. பின்னூட்டத்தை மட்டுறுத்து என்று திரட்டி சொன்னால் மட்டுறுத்துகிறோம். வேண்டாம் என்றால் விடுகிறோம். 40 பின்னூட்டம் தான் காட்டுவோம் என்றால் நம் பின்னூட்ட நடவடிக்கையை மாற்றுகிறோம். ஒரு நாள் தமிழ்மணம் இயங்காது என்று அறிவித்தால் அன்று முழுக்க யாரும் பதிவு போடாமல் dull அடிக்கிறார்கள். wordpress பின்னூட்டங்களை தமிழ்மணம் திரட்டாது என்ற ஒரே காரணதுக்காக wordpressக்கு மாறத் தயங்குகிறார்கள். நியாயமாக ஒரு பதிவர் எடுக்க வேண்டிய முடிவை, ஒரு திரட்டியின் நுட்பக் குறை கட்டுப்பட்டுத்துவதைக் கவனித்தீர்களா? கணினிப் பயனரின் சுதந்திரத்தை windowsன் குறை மட்டுப்படுத்துவதையும் இதையும் ஒப்பு நோக்கலாம்.

திரட்டிகளைச் சார்ந்து இயங்குவதால் பதிவிடுவதைத் தவிர இன்னும் பல விசயங்களைக் குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் அந்தப் போக்கை வளர்க்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள். நல்ல பதிவுகளை அறியாதவர்கள் தமிழ்மணத்தை மேம்போக்காகத் திறந்து பார்த்து விட்டு பதிவுலகம் குறித்த தவறான புரிதலோடு விலக வாய்ப்புண்டு. மையப்படுத்தல் என்ற பேரில் எல்லா வகைப் பதிவுகளையும் ஒரே இடத்தில் குவித்ததின் விளைவு. குழந்தைகள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் எந்தத் தயக்கமும் இன்றி தமிழ்த் திரட்டிகளை அறிமுகப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? அதே வேளை கூகுள் ரீடர், கூகுள் பதிவுத் தேடல், blogger, wordpress என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் நுட்பங்களை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வேண்டியதை அவர்களே தேடிப் படிக்கக் கற்றுக் கொள்வார்கள்.

பதிவு எழுதுபவருக்கு என்ன எழுதினாலும் விளம்பரப்படுத்த ஒரு வாய்ப்பாக திரட்டி இருக்கிறதே தவிர, பதிவுகளை ஒரு மாற்று ஊடகமாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் தற்போதைய திரட்டிகளின் வடிவம், இல்லை.

எழுத்தாளர் மாநாடு, பட்டறை நடத்தி ஆனந்த விகடனுக்கும் குமுதத்துக்கும் சொந்தச் செலவில் தட்டி வைப்போமா? சில நல்ல எழுத்தாளர்களை இப்பத்திரிக்கைகள் அடையாளம் காட்டி இருக்கலாம். சிலருக்கு கூடுதல் வாசகர்களைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், இவை இல்லாவிட்டால். சில பதிப்பகங்கள் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் இலக்கியமே இருந்திருக்காது என்று நினைப்போமா?

ஆனால், தமிழ்மணம் இல்லாவிட்டால் பிற திரட்டிகள் இல்லாவிட்டால் தமிழ்ப் பதிவுலமே இருண்டு விடும் என்று தவறான நினைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது அப்படி ஒரு நிலையைத் தெரியாத்தனமாக உருவாக்கி வைத்திருக்கிறோம். ஒரு திரட்டி தான் தேவை என்றால் அதையும் open source போல் உருவாக்க இயலும். மாய மந்திரமில்லை. tamilblogs.com கூட திறமூலமாக இருக்கிறது. நமக்குத் தேவையானதை நாமே உருவாக்க முடியும். கட்டுப்பாடுகள், குறை உள்ள பழைய திரட்டிகளுக்கு ஆள் சேர்ப்பதை விட திறமான புதிய திரட்டிகளை உருவாக்கலாம். திரட்டிகளை உருவாக்குவது எப்படி என்று கூட பட்டறையில் சொல்லித் தரலாம். என்ன அடிப்படையில் சேர்க்கிறார்கள், என்ன அடிப்படையில் நீக்குகிறார்கள் என்ற தெளிவில்லாத மூடு மந்திரத் திரட்டிகளுக்கு ஆதரவளிக்கத் தேவை இல்லை. பதிவர்களின் பலத்தால் ஒரு பூங்கா உருவாகிறது. பிறகு, என் பதிவை பூங்காவில் சேர்க்கவில்லை என்று ஏங்குவது. நம் ஒன்றுகூடலால் ஒரு திரட்டி உருவாவது, பிறகு என்னை நட்சத்திரமாக்கவில்லை என்று புலம்புவது. தமிழ்ப் பதிவர்கள் கூடுதல் தன்னம்பிக்கை, தற்சார்பு, esteem உடன் செயல்பட வேண்டும் என்றால் திரட்டிகளைச் சாராமல் இயங்குவது முக்கியமாகப் படுகிறது.

திரட்டிகளே இல்லாவிட்டாலும் கூட தேடு பொறிகள் மூலம் தாளாரமாக வாசகர்கள் வருவார்கள்.

banner வைப்பதற்கு பெரிய அளவில் செலவு ஆனாலும் சின்ன அளவில் செலவு ஆனாலும் அது பிரச்சினையில்லை. இலவசத் தட்டிகள் வைக்காததன் மூலம் நாம் நடுநிலையாகச் செயல்பட வாய்ப்பு இருக்கும். திரட்டிகளின் சார்பின்றி நம் பதிவர்கள் செயல்பட்டால் இன்னும் நல்ல விளைவுகள் கிடைக்கும். அது குறித்த தன்னம்பிக்கை, சுய சார்பு தான் தமிழ்ப் பதிவர்களுக்குத் தேவை.

நாம் நம்ம திரட்டி என்று நினைத்து திரட்டிகளைப் பரப்ப முனைகையில், திரட்டி நிர்வாகங்கள் ஏன் இன்னும் இது போன்ற முன்னெடுப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்பது நெருடவில்லையா? பதிவுகளுக்குத் தொடர்பில்லாத கீற்று, திண்ணை ஆகியவற்றுக்கு நாம் மின்மடல் இட்டு விளம்பரப்படுத்தக் கேட்பது நியாயம். நாம் செய்வது விழிப்புணர்வா வழிபாடா நன்றியா ரசிகர் மன்ற மனோபாவமா?

ஏற்பாட்டாளர் 2:

திரட்டிகள் குறித்து ரவியுடன் நல்லதொரு விவாதம் நடைபெறுவது எனக்கும் நல்ல புரிதல்களை தருகிறது. இன்னும் சில கருத்துகள்.

//தமிழ்மணம் இல்லாவிட்டாலும் காலத்தின் போக்கில் ஒரு தானியங்கித் திரட்டி வந்திருக்கும்.//

உண்மை. ஆனால் வரலாறு என்பது ஏற்கனவே நிகழ்ந்தது தானே?
guess எல்லாம் செய்ய முடியாதே?

ரவி: வரலாறைச் சொல்லிக் கொடுப்போம். இனி வர இருப்பதை முழு சுதந்திரத்துடன் செய்வோம்.

ஏற்பாட்டாளர் 2: முதலாவது...இந்திய மொழிகளில் தமிழில்தான் அதிக பதிவுகள் என்று அதிகாரப்பூர்வமாக சொல்ல முடிவது இந்த திரட்டிகளால் தான்.

ரவி: சரி. tamilbloggers.orgல் எல்லா பதிவர்களையும் ஒரு பயனர் கணக்கு உருவாக்கச் சொன்னால் முடிந்தது கதை. :)

ஏற்பாட்டாளர் 2: மற்ற மொழிகளில் இப்படி ஒரு ஒருங்கிணைப்புக்கு வழி இல்லாதால் ஒன்று திரட்டல் சாத்தியமில்லாமல் இருக்கிறது.

ரவி:எந்தத் திரட்டியும் இல்லாமலேயே knowledge foundation பதிவர் பட்டறை நடத்தியது. அதில் நுழைவுக் கட்டணம் செலுத்தி மக்கள் கலந்து கொண்டார்கள் என்பதையும் கவனியுங்கள். நாம் இந்திய மொழி அளவில் பார்க்காமல் உலக அளவில் பார்த்தாலும் பதிவர் சந்திப்புகள், பட்டறைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஏற்பாட்டாளர் 2: தமிழில் இத்தனைப் பதிவுகள் வளர முக்கிய காரணம் இதுவரை- திரட்டிகளே. தமிழ்மண அறிமுகம் பலரை பதிவுகளின் வாசகராக்கி, பின் பதிவராக வகை செய்தது. பல பதிவர்கள் பிற பதிவர்கள் மூலமாகவே புதுப்புது நுட்பங்களை அறிய முடிந்தாலும் ஒரு தொகுப்பை தமிழ்மணத்தில் நேரடியாக பெற முடிந்தது. அதாவது ஒரு புதியவர் தமிழ்மணத்தை அடைந்தால் அவர் தமிழில் வலைப்பதிவு தொடங்குவதற்கான ஓரளவு தயார்நிலையை நேரடியாக பெற முடிந்தது.

இன்று நாம் வலைப்பதிவு என்றால் என்ன என்றே தெரியாத பலருக்கு வலைப்பதிவை அறிமுகம் செய்யவும், ஏற்கனவே அறிந்தவர்களுக்கு நுட்பங்களை அறிமுகம் செய்யவும் பட்டறை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இணையம் அறிந்தவர்கள் பலர் வலைப்பதிவை அறிந்தது திரட்டிகளின் மூலமாகத்தான்.

ரவி: இது வரை காலத்தில் தமிழ்த் திரட்டிகளின் முக்கியத்துவம் குறித்து நான் மறுக்கவில்லை. இனி வரும் காலத்தில் நாம் திரட்டிகள் சாராமலேயே இயங்க முடியும். அதனால் இழப்பு இல்லை என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஏற்பாட்டாளர் 2: இப்போது கூகுள் தேடலில் தமிழில் நாம் என்ன தேடினாலும் வலைப்பதிவுப் பக்கங்கள் கிடைக்கின்றன. அதுவே பலருக்கு நல்ல அறிமுகம் தந்துவிடும். ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அப்படி இல்லை. இந்த வேகமான வளர்ச்சிக்கு திரட்டிகள் தான் காரணம். அதே சமயம் இனி திரட்டிகளை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் பெரிதாக இல்லை என்பது உண்மைதான்.

ரவி: இந்தப் புரிதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏற்பாட்டாளர் 2: //திரட்டி நிர்வாகங்கள் ஏன் இன்னும் இது போன்ற முன்னெடுப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன //

பதிவர் சந்திப்பு என்ற நிலையிருந்து இப்போது தான் பதிவர் பட்டறை என்ற நிலைக்கு முன்னேறி இருக்கிறது. இது அதற்கும் மேம்பட்டது எனபதை நாம் நிருபிக்க வேண்டாமா? இது தொடரும்போது அவர்களும் தானாக ஒத்துழைப்பார்கள்.

மேலும் பட்டறையை நடத்துவது யார்? என்பது போன்றும் தனித்தனிக் குழுக்கள் தடத்தும் நிகழ்வுகளில் எல்லாம் ஏற்கனவே சொந்தப் பணம் செலவழித்து திரட்டிகளை நடத்துபவர்கள் பணம் செலவு செய்ய இயலுமா என்பது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. ஆங்காங்கே நடத்தப்படும் நிகழ்வுகளை முறையாக நாம் அவர்களுக்கு அறிவிப்பதில் தவறில்லை. அவர்களாக எல்லா நிகழ்வுகளுக்கும் அறிவிப்பு தருவது நடைமுறை சாத்தியம் இல்லை.

இங்கே கூட அதிகபட்சம் பத்து வலைப்பதிவர்கள
சேர்ந்து திட்டமிட்டு இந்த நிகழ்வு நடக்கிறது. இது போல இன்னும் இருக்கும் 2000+ பதிவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் நடத்த முடியும்.

இந்த நிலையில் திரட்டிகள் கண்டு கொள்ளவில்லை என்பதற்கும், திரட்டிகளை நாம் கண்டுகொள்ள வேண்டுமா என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

ரவி: இன்னும் நிறைய திரட்டிகள் வரட்டும். அவர்கள் எல்லாம் காசு கொடுத்து தங்கள் திரட்டியை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பதிவர்கள் தனித்தியங்கும் வல்லமை பெற வேண்டும் என்பது தான் என் அவா. எப்படியும் இலவசமாகத் தட்டி வைப்போம் என்றால் காலத்துக்கும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மனம் வராது. இலவசமாகக் கிடைக்கும் என்று தெரிந்து விட்டால் யாரும் காசு தந்து ஆதரவளிக்க மாட்டார்கள். இது வரை பெரிய அளவில் எந்தத் திரட்டியும் பொருள் ஈட்ட வில்லை. எல்லா சிறிய சந்திப்புகளுக்கும் ஆதரவு அளிக்க முடியாது. அதே வேளை நாமும் காசு செலவழித்து வளர்த்து விட வேண்டாம் என்பதே என் நிலை

ஏற்பாட்டாளர் 2:

//என்ன அடிப்படையில் சேர்க்கிறார்கள், என்ன அடிப்படையில் நீக்குகிறார்கள் என்ற தெளிவில்லாத மூடு மந்திரத் திரட்டிகளுக்கு ஆதரவளிக்கத் தேவை இல்லை//

சேர விரும்புகிறவர்களைத்தான் சேர்க்கிறார்கள். யாரையும் வலுக்காட்டாயமாக அழைத்து வருவது இல்லை.

ரவி: எதையும் திரட்டுவது தான் திரட்டி. கூகுள் போல. விதிகளுக்கு உட்பட்டு திரட்டுவது மன்றமே. திரட்டி என்ற பெயரில் மன்றம் நடைபெறுவதைத் தான் சுட்டிக் காட்டினேன். மன்றம் என்ற சொல்லி விட்டே மன்றம் நடத்தினால் ஒரு பிரச்சினையுமில்லை.

சேர்க்க விரும்புபவர்களைத் தான் சேர்க்கிறார்கள். சரி. ஆனால், விருப்பமுடைய எல்லாரையும் சேர்ப்பார்களா? திரட்டிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதுபவர்களைத் தான் சேர்ப்பார்கள். சட்ட திட்டங்களில் உடன்பாடில்லை என்றால் உங்களால் சேர முடியாது. எடுத்துக்காட்டுக்கு, உங்கள் ip முகவரி அவர்களுக்குத் தெரிய வரும். நீங்கள் திரட்டி நிர்வாகத்துக்கு வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாவிட்டால் திரட்டிகளில் சேர முடியாது. (கவனிக்கவும்: திரட்டி நிர்வாகத்துக்கு என்று சொன்னேன். திரட்டி நிர்வாகம் ஐபி முகவரியை வெளியில் தருகிறது என்று சொல்லவில்லை). இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அரசியல் சர்ச்சைகளுடன் கூடிய கருத்துக்களை எழுதக் கூடியவருக்கு இது பாதுகாப்பு அளிக்காது. ஏனெனில், திரட்டி நிறுவனங்கள் அவர்கள் பதியப்பட்டுள்ள நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இயங்குபவை. நாட்டின் சட்ட நிறுவனங்கள் ஏதேனும் காரணத்துக்காக இத்திரட்டிகளை அணுகி ஐபி முகவரிகளைக் கோரினால் தரக் கடமைப்பட்டவை.

இதே உள்ளடக்கம், கருத்து, விண்ணப்பம் என்று எந்த நிபந்தனையும் இன்றி திரட்டும் கூகுள் போன்ற திரட்டிகள் பதிவருக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்கன்றன.

ஏற்பாட்டாளர் 2: நீக்குவது குறித்து- அதை தணிக்கை என்று நான் நினைக்கவில்லை. தமிழ்மணத்தில் இருந்து நீக்கப் பட்ட பதிவுகள் பிறபதிவர்களால் புகார் செய்யப்பட்டு விவாதிக்கப் பட்டே நீக்கப் பட்டன. தனிமனிதத் தாக்குதல்களை நீக்குவது நியாயமானது என்றே கருதுகிறேன். ( இன்னும் சில இருக்கின்றனவே அவற்றை எல்லாம் ஏன் நீக்கவில்லை? பிறபதிவர்களால் புகார் செய்யப் படும்போதுதான் அவர்கள் விவாதித்து நீக்குகிறார்கள் என்று அறிகிறேன்.)

ரவி: ஒரு திரட்டியில் 100 பேர் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மீதி 99 பேருக்குப் பிடிக்க வில்லை என்பதால் நான் என்ன எழுதுகிறேன் என்பதை மாற்ற முடியாது. 99 பேரும் உண்மை சொன்னாலும் பொய்யைச் சொல்லும் உரிமை எனக்கு உண்டு. வேண்டுமானால், தங்களுக்கு விருப்பம் இல்லாத பதிவை காட்டாதே என்று 99 பேரும் திரட்டியைக் கேட்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த hide blog நுட்ப வசதி செய்ய இயலாத திரட்டி, என்னை திரட்டியை விட்டு வெளியே போ என்று சொல்வது தவறு. எல்லாவற்றையும் திரட்ட வேண்டும். யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் காட்ட வேண்டும். இணையம், தேடு பொறிகள், உலகாளவிய திரட்டிகள் இயங்குவது இந்த அடிப்படையில் தான்.

ஒரு திரட்டியில் இணைந்த பிறகு பதிவராக நாம் என்ன எழுதுகிறோம் என்பதை திரட்டி நிர்வாகமும் திரட்டியில் இணைந்துள்ள பிறரும் கட்டுப்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூகுளைத் திட்டி எழுதலாம். ஆனால், கூகுள் உங்கள் தளத்தைத் திரட்டுவதை நிறுத்தாது. ஆனால், தமிழ்மணத்தைத் திட்டித் தொடர்ந்து பதிவு இடுங்கள். 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால் வெளியேற வேண்டிய நிலை உங்களுக்கு வரும்.

நிகழுலகில் ஒரு மன்றம் செயல்படும் விதத்துடன் தமிழ்த் திரட்டிகள் இயங்கும் நிலையை முற்றிலும் ஒப்பிட முடியும். இணையம் தரும் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் விதத்திலேயே தற்போதைய திரட்டிகள் உள்ளன.

திரட்டிகள் மூலமே பதிவுகளைப் படிக்க மக்களைப் பழக்கப்படுத்துவதால் திரட்டிகளுக்கு வெளியே தேடிப் படிக்கும் தேவை, நுட்ப அறிவை மழுங்கடித்து விடுகிறோம். இதனால் திரட்டிகளில் வரும் குப்பை, பொய்யையும் படிக்க வேண்டி இருக்கும் வாசகர்கள் தன்னுடைய சுதந்திரம், பாதுகாப்பு காரணங்களுக்காக திரட்டிக்கு வெளியே எழுதப்படும் பதிவுகளைக் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள்.

ஏற்பாட்டாளர் 3: ரவியின் பெரும்பாலான கருத்துக்களோடு நான் முழுவதும் உடன்படுகிறேன். திரட்டிகள் (இது கூட சரி கிடையாது .. தமிழ்மணம் என்பதே சரி...) எவ்வளவு தூரம் தமிழ் வலைப்பதிவுகள் பெருக உதவி செய்ததோ அதற்கு மேலாகவே தமிழ் வலைப்பதிவுலகில் பல பிரச்சனைகளுக்கு platform அமைத்து கொடுத்திருக்கிறது/கொடுத்துக்கொண்டிருக்கிறது. வலைப்பதிவின் அடிப்படை நோக்கத்திலிருந்தே விலகி எந்த தலைப்பில் எழுதுவது ... யாரை குறிப்பிட்டு எழுதுவது , பின்னூட்ட வெறி என்று வலைப்பதிவுலகின் தரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. அதைப்போலவே திரட்டிகளுக்கு வணிக நோக்கங்கள் இல்லை என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. வணிக ரீதியான வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை என்பதே உண்மை.. அதைப்பற்றி கருத்து இந்த களத்தில் விவாதிக்கப்பட வேண்டியதில்லை என்றாலும் ... தமிழ் வலைப்பதிவுலகில் வலைப்பதிவு பட்டறை மாதிரியான நல்ல முயற்சிக்கு திரட்டிகள் இன்னும் எவ்வளவோ வகையில் உதவியிருக்கலாம் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது.

ரவி: ஏற்பாட்டாளர் 3, சரியாகச் சொன்னீர்கள். பதிவுகளின் எண்ணிக்கை பெருக திரட்டிகள் காரணமாக இருக்கும் அதே வேளை திரட்டிகள் இருப்பதாலேயே உருவாகி இருக்கும் பிரச்சினைகளை நாம் மறந்து விடுகிறோம். பதிவுலகம் = தமிழ்மணம் என்ற சமன்பாடு உருவாக விட்டதே பிழை. ஒன்றின் பிழையை இன்னொன்றின் குறையாக புரிய வைக்கிறது. கணினியை அறிமுகப்படுத்தும்போதே கண்ணைக் கட்டி விண்டோஸை மட்டும் அறிமுகப்படுத்துவதால் கணினிப் பயனருக்கு உள்ள சுதந்திரத்தை விளக்க கட்டற்ற இயக்கம் வைத்து நடத்தி தாவு தீரும்..(லக்கி லுக் காப்புரிமை பெற்ற சொல் :))..அதே போல் பதிவுலகம் = தமிழ்மணம் அல்லது சில திரட்டிகளின் கூட்டு என்ற நிலையை இனிமேலும் உருவாக்க வேண்டாம்.

வலைப்பதிவின் அடிப்படை நோக்கம் என்கிற ஏற்பாட்டாளர் 3ன் சொற்றொடர் இங்கு முக்கியம். தனக்குப் பிடித்ததை, தான் தெரிவிக்க விரும்புவதை எழுதுவதற்குத் தான் வலைப்பதிவு. வலைப்பதிபவர்கள் எல்லாம் திரட்டிக்கு வர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

எடுத்துக்காட்டுக்கு, ஒரு பள்ளி தன் வலைப்பதிவை நடத்தி அதில் பள்ளிக் குழந்தைகளின் படைப்புகளை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை அக்குழந்தைகளின் பெற்றோர்கள், அடுத்த வகுப்பு பிள்ளைகளை பார்த்து மகிழ்ந்தாலே போதுமானது. வலைப்பதிவின் நோக்கம் நிறைவேறி விடுகிறது. அவர்கள் பதிவைப் படிக்க திரட்டியில் இணைக்க வேண்டும் என்று சொல்லித் தருவதை விட பெரிதாக feed subscription இணைப்பு தாருங்கள். அதைப் பார்த்து விரும்புபவர்கள் தங்கள் வாசிப்புப் பட்டியலில் என்று சொல்லித் தர வேண்டும். தன்னுடைய பதிவை படி படி என்று ஒவ்வொரு திரட்டியாக ஏறி இறங்கி பதிந்து கொண்டிருக்கத் தேவை இல்லை என்ற எண்ணம் அவருக்கு வர வேண்டும். பதிவர்களாகிய எழுத்தாளர்களுக்கு இந்த அறிவைப் புகட்டும் வேளையில் வாசகர்கள் தமிழ்மணத்தில் எல்லாம் குப்பையாக என்று புலம்பிக் கொண்டு இருப்பவர்களிடத்து தாங்கள் விரும்பும் பதிவுகளை மட்டும் படிப்பது எப்படி என்று feed readerகள் குறித்து சொல்லித் தர வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் ஆகிய இருவருக்கும் முழு சுதந்திரம் அளிக்கும் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே நுட்ப ஆர்வலர் என்ற முறையில் சரி. மற்ற எல்லாம் ரசிகர் மன்ற மனோபாவம். தான். நாம் தமிங்கிலத்தில் பழகி விட்டோம் என்பதற்காக அதையே புதியவர்களுக்குத் திணிக்கத் தேவை இல்லை என்று மா.சி சொன்னது போல் நாம் திரட்டிகள் மூலம் தான் அறிமுகமானோம் என்பதற்காக அதையே புதியவர்களுக்கும் திணிக்கத் தேவை இல்லை. இன்னும் சுதந்திரமான தெரிவுகளைத் தரலாம்.

திரட்டி வாசகர்கள் அவர்கள் வலைப்பதிவைப் பார்க்க இயலாததால் அவர்களுக்கு ஒரு நட்டமும் வந்து விடப் போவதில்லை. இன்று ஒரு பள்ளி இணையாததால் வாசிப்புலகுக்கு பேரிழப்பு போன்று தோன்றலாம். ஆனால், நாளை தமிழ்நாடு முழுக்க பள்ளிகள், குழந்தைகள் என்று வலைப்பதியும் போது அவர்களுக்கு என்று தனித்திரட்டி உருவாகி இருக்கும். இல்லை, உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அத்தனை பேரும் பொதுத் திரட்டியில் இணையவில்லை என்று வருந்திக் கொண்டிருப்போமா? technoratiயில் கோடிக் கணக்கானவர் இணையாமல் இருக்கலாம். அவர்கள் எல்லாம் இணையாததால் ஆங்கில வலைப்பதிவுகளை வாசிக்க இயலவில்லை என்று வருந்துகிறோமா? என்ன ஒன்று தமிழ் வலைப்பதிவில் எழுதினாலும் அதை படித்தே தீர்ந்து விட வேண்டும் என்று கொலை வெறி கொல்லத் தேவை இல்லை. வலைப்பதிவர்கள் எல்லாம் சகோதரர்கள் என்று எல்லாம் உணர்ச்சி வசப்படத் தேவை இல்லை.

வலைப்பதிவு என்பது ஒரு கருவி என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும். சிலர் பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். சிலர் மேடையில் பேசுகிறார்கள். நாம் வலைப்பதிகிறோம். வலைப்பதிவு என்பது நமக்கு கருவி. வலைப்பதியாமல் இணையத்தளத்தில் கட்டுரையாக எழுதலாம். எங்கு எழுதுகிறோம் எப்படி எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம். நான் தேடும் ஒரு தகவல் கூகுளில் சிக்கினால் அது மடற்குழுவில் இருந்தாலும் இணையத்தளத்திலு இருந்தாலும் படிக்கத் தான் போகிறேன். வலைப்பதிவு என்பதற்காக concession ஏதும் இல்லை. அது போல் புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கும் பிடித்ததை பயனுள்ளதை எழுதுங்கள். அதைப் பிடித்தவர்கள், பயனுள்ளவர்கள் தொடர்ந்து படிப்பார்கள் என்று சொல்லித் தர வேண்டும். அதை விட்டு விட்டு - திரட்டியில் அரசியல், பதிவுலக அரசியல் - என்றெல்லாம் வகுப்பு எடுக்க வேண்டிய அளவுக்கு திரட்டிகளால் நம் பதிவுக் கலாச்சாரம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர வேண்டும். நான் எப்படி பதிவிடுகிறேன் என்ற முழுச் சுதந்திரம், எண்ணம் எனக்கு இருக்க வேண்டும். அதை influnce செய்யும் எதுவும் புறக்கணிக்கத்தகதே என்கிற விழிப்புணர்வு வர வேண்டும்.

திரட்டிகளில் இருந்து சிலர் விலகி தனியே பதிந்தால் " குய்யோ முய்யோ" என்று அலறி போகாதே என்று அலறுகிறோம். திரட்டியில் இருந்து விலகி எழுதினால் படிப்பதற்கு வேறு வழியே இல்லையா என்ன? திரட்டி திரட்டி என்று over buildup கொடுத்து வலைப்பதிவர்கள் நியாயமாக அறிந்திருக்க வேண்டிய feed subscription ,feed reader போன்ற விசயங்களை அறிய விடாமல், முயல விடாமல் அறியாமையில் சோம்பலில் வைத்திருக்கிறோம்.

1000 பேர் படிக்க வேண்டும் என்று ஏங்கி, 100 பேர் பின்னூட்டம் இட வேண்டும என்று மருகி வலைப்பதியக் கற்றுக் கொடுத்தால் பட்டறைக்கு வருபவர்களுக்கு நம்மை அறியாமல் சேர்த்தே complex, politics எல்லாவற்றையும் சேர்த்து விதைக்கிறோம். நாம் கற்றுத் தருவது மின்மடல் எப்படி எழுதுவது போல் தான். நுட்பத்தை மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் யாருக்கு எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்பது அவரது தேவை, purpose பொறுத்தது. குருட்டாம்போக்கில் 100 மின்மடல் முகவரிகள் கொடுத்து இவர்களுக்கு எல்லாம் எழுதினால் அவர்கள் உனக்கு பதில் எழுதுவார்கள் என்று சொல்வது போல் நீ திரட்டியில் வந்து எழுது அவர்கள் எல்லாம் வந்து படிப்பார்கள் என்று சொல்வது.

//அதைப்போலவே திரட்டிகளுக்கு வணிக நோக்கங்கள் இல்லை என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. //

தமிழ்மணம் tmi என்ற நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. பதிவர்களின் உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு திரட்டி விற்கப்பட்டது, விற்க இயலும் என்பதைக் கவனத்தில் கொள்க.

// வணிக ரீதியான வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை என்பதே உண்மை.. //

முற்றிலும் உண்மை. திரட்டிகளுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் வரும்போது விளம்பரம் இடாமல் தளத்தை நடத்துவோம் என்ற உறுதி அளிக்க முடியுமா எந்தத் திரட்டியாலும். கொஞ்ச நாள் முன்பு வரை கூட - விளம்பரம் செய்யுங்கள் - என்ற தமிழ்மணத்தில் காண முடிந்தது. வணிக நோக்கு தவறு என்று சொல்ல வர வில்லை. தமிழ் இணையம் முன்னேற வேண்டுமானால், தமிழ் இணையத்தில் பொருள் ஈட்ட முடியும் என்ற நிலை வருவது அவசியம். அப்போது தான் இன்னும் புதிது புதிதான திறம் மிக்க முயற்சிகள் வரும். ஆனால், இப்படி வணிக நோக்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும். நம் செயற்பாடுகளையும் - கையில காசு வாயில தோசை - என்று அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

//அதைப்பற்றி கருத்து இந்த களத்தில் விவாதிக்கப்பட வேண்டியதில்லை என்றாலும் ... தமிழ் வலைப்பதிவுலகில் வலைப்பதிவு பட்டறை மாதிரியான நல்ல முயற்சிக்கு திரட்டிகள் இன்னும் எவ்வளவோ வகையில் உதவியிருக்கலாம் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. //


தேன்கூடு, தமிழ்மணம் நிகழ்வுக்கு ஆதரவு வழங்கி இருப்பதாக ஏற்பாட்டடாளர் 4 குறிப்பிட்டார். மன்னிக்கவும். வெறும் t-shirt கொடுத்ததை என்னால் ஆதரவாகக் கருத முடியாது. இந்த t-shirt இல்லாமலும் பட்டறை நடக்கும். 100 t-shirt அடித்து தங்கள் தளத்தை விளம்பரப்படுத்த இயல்பவர்களுக்கு அதில் ஒரு 10 t-shirt காசையேனும் அளிக்க நினைத்திருக்கலாம் அல்லவா? தங்கள் தள விளம்பரம் என்ற சுயநலம் மட்டுமே இதில் தெரிவதைத் தவிர, பதிவுலகை வளர்க்க வேண்டும் என்ற நோக்கமும் இதில் தெரியவில்லை.

எங்கள் திரட்டி எங்கள் திரட்டி என்று இவ்வளவு புளங்காகிதப்படுகிறோம். ஆனால், அந்தத் திரட்டி எப்படி செயல்படுகிறது என்பதில் நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமானால், தமிழ்மணத்துக்கு பதிவு எழுதியோ மடல் எழுதியோ கேட்டு விட்டுக் காத்துக்கொண்டிருக்க வேண்டும். வேண்டுகோள் மட்டும் வைக்கலாம். முடிவு நம் கையில் இல்லை என்னும் போது பதிவர்- திரட்டி என்ற இரண்டு எல்லைகளுக்குள்ள வேறுபாட்டை அறியலாம்.

பதிவர்கள் , திரட்டிகள் இருவரும் ஒருவரை ஒருவர் சாராமல் இயங்கும் சூழல் தான் பதிவுலகத்துக்கு ஆரோக்கியமானது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு பதிவு நன்றாக இருக்கிறது என்றால் அதை திரட்டி தானாக திரட்டிக் காட்ட வேண்டும். தற்போது, பதிவர்களின் அனுமதியுடனேயே திரட்ட வேண்டி இருப்பதால் நல்ல பதிவுகளைத் தெரிந்தே தமிழ்மணம் தவறவிடலாம். ஏன் என் பதிவைச் சேர்த்தாய், ஏன் என் பதிவை நீக்கினாய் என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தமிழ்மணம் எல்லாவற்றையும் திரட்ட வேண்டும். உண்மையில் இதற்கு பதிவருடைய அனுமதி தேவை இல்லை. இணைப்புகள் இல்லாமல் இணையம் இயங்க முடியாது. உள்ளடக்கமாக இல்லாமல் வெறும் இணைப்புகளை மட்டுமே தமிழ்மணம் வழங்குகிறது. எனவே, ஒரு பதிவைச் சேர்க்க பதிவருடைய அனுமதிக்குக் காத்திராமல் பதிவுகளை அதுவே திரட்ட வேண்டும். ஒருவர் கருவிப்பட்டையைச் சேர்க்காவிட்டாலும் பின்னூட்ட நிலவரம் காட்டும் வகையில் தமிழ்மணம் தனித்தியங்க வேண்டும். அதாவது அதன் வசதிகளை செயல்படுத்தும் திறன் பதிவரின் உதவியைச் சார்ந்து இருக்கக் கூடாது.

ஏற்பாட்டாளர் 5: திரட்டி குறித்த நண்பர்களின் கருத்துக்களில் எனக்கு நிறைய மாறுபாடு உண்டு. தமிழ்மணம் குறித்து வைக்கும் விமர்சனங்கள் போன்ற விமர்சனங்கள் பல பத்திரிகையுலகில் தினத்தந்தி மீது உண்டு. இதுகுறித்து விவாதிக்கும் சபை இதுவல்ல என்பதால் விடு ஜூட்.....

ரவி: சரி ஜூட் விடுவோம். ஆனா, பத்திரிக்கை உவமானத்தை இழுத்ததால் ஒரு உவமை இன்னொரு முறை :) (Grr..) பத்திரிக்கையாளர் சந்திப்பு, பட்டறை நடந்தால் நாம் அங்கு தினத்தந்தி, தினமலர் தட்டியையா வைப்போம்? மாட்டோம் தானே? தங்கள் எழுத்துக்களைப் படிக்க இந்த இந்த பத்திரிக்கைகளை வாங்கிப் படியுங்கள் என்று சொல்வோமா? சிறு பத்திரிக்கையாளர்கள், இலக்கிய பத்திரிக்கையாளர்கள், பெரிய பத்திரிக்கையாளர் என்று குழுமி இருக்கும் இடத்தில் ஒரு சில பத்திரிக்கைகளை மட்டும் பிரதானப்படுத்திப் பேசுவோமா?

அது போல் பதிவர்களுக்குப் பதிவர்கள் என்ற அடையாளமே போதுமானது.

சரி, இன்றைய திரட்டி உரையாடலை இத்துடன் இனிதேஏஏஏ.. முடித்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்குச் செல்கிறேன்.

ஏற்பாட்டாளர் 5: சாரி ரவி. எனக்கு இது விதண்டாவாதமாக படுகிறது. எல்லா பத்திரிகைகளுக்குமான மாநாடு நடக்குமேயானால் அங்கே பத்திரிகைகளின் பேனர் வைக்கப்பட மாட்டாது. மாறாக Indian Newspaper Society, Press Trust of India போன்ற பத்திரிகை ஒருங்கிணைப்பாளர்களின் பேனர் இருக்கும். பதிவர் = பத்திரிகைகள், திரட்டி = ஒருங்கிணைப்பாளர். ஓகேவா?

நான் தினத்தந்தி உதாரணம் காட்டியது தமிழ்மணத்தின் பாமரத்தன எளிமை, அதிக தமிழ் பதிவாளர்களை சென்றடைந்தது போன்றவற்றை சுட்டிக் காட்டியே.

ரவி: உவமையில் பொருள் குற்றம் காண்கிறேன் :) இப்ப தமிழ் வலைப்பதிவர் மன்றம், தமிழ் வலைப்பதிவர் சங்கம் என்று உருவாக்கி இருந்தோம் என்றால் அவற்றை press trust of india போன்றவற்றுக்கு ஒப்பு நோக்கலாம். ஏனெனில், இவை முழுக்க முழுக்கப்பதிவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போதைக்கு சங்கம் இல்லாத நிலையில் தமிழ் வலைப்பதிவர் பட்டறை என்ற banner வைக்கிறோம். INS, PTI ஆகியவற்றில் முழு சுதந்திரம், கட்டுப்பாடு, திறந்த நிலை இருப்பது போல் நாமும் ஒரு அமைப்பை உருவாக்கலாம்.

ஆனால், பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிக்கைகளில் ஒரு கட்டுப்பாடும் இல்லாதது போல் திரட்டி நிர்வாகத்தில் நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தைக் காட்சிப்படுத்த உதவும் பத்திரிக்கைகள் போல் திரட்டிகள் ஒரு காட்சிப்படுத்தல் ஊடகம் அவ்வளவே. பதிவர்களை பத்திரிக்கை என்ற உங்கள் உவமைக்கு வந்தாலும் திரட்டிகள் அந்த பத்திரிக்கைகளை விநியோகிக்க, விளம்பரப்படுத்த உதவும் ஒரு agent அவ்வளவே. நாமே தெரு தெருவாகப் பத்திரிக்க விற்க முடியாது என்பதால் வேண்டுவோர் இங்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று இந்த agentஇடம் அளிக்கிறோம். புதிதாக பத்திரிக்கை தொடங்க வருபவர்கள் இந்த agentன் விற்பனை நிலவரம், அவரின் கமிஷன் தொகைக்கு ஏற்ப தங்கள் உள்ளடக்கம், விலையை மாற்றுவது போல் பதிவுகளுக்காகத் திரட்டி என்றிருந்த நிலை போய் திரட்டிகளில் என்ன படிக்கப்படுகிறதோ அதை மட்டும் வாசிக்கும் நிலைக்கு வாசகர்களையும் அதை மட்டும் எழுதத் தூண்டும் வகையில் பதிவர்களையும் தள்ளி விடக்கூடாது என்பது தான் கவலை.

.........

இப்படி எல்லாம் நீண்ட அந்த உரையாடல் பிறகு பட்டறை குறித்த வேறு நிர்வாகப் பணிகளில் மூழ்கி தொடர்பற்றது..திரட்டிகள் குறித்து பொதுவாக நான் எடுத்துரைக்கும் கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் இந்த உரையாடல் பதிவு செய்கிறது என்று நம்புகிறேன். இது ஆகஸ்ட் 2007ல் நடந்த உரையாடல். திடீரென்று யார் மேலும் கோபம் கொண்டோ hidden agendaவுடனோ எழுத எனக்கு எந்தத் தேவையும் இல்லை. ஏற்கனவே ஒரு பொதுக்களத்தில் நான் பதிவு செய்த கருத்துக்கள் குறைந்தபட்சம் இந்தப் புரிதலையாவது வாசிப்பவர்களுக்குத் தரும் என்று நம்புகிறேன்.

26 comments:

வவ்வால் said...

ரவி சங்கர்,

அடேங்கப்பா..அசாத்திய பொறுமை, விரிவான , தெளிவான , "திரட்டி, மற்றும் வலைப்பதிவு சூழல்" குறித்தான சிறப்பான பதிவு.

நீங்கள் சொல்வது முற்றிலும், சரி ஒரு நுட்பம் மட்டுமே முன்னெடுத்து செல்ல வேண்டும், அது வரும் வடிவத்தை அல்ல.

கணினி அறிவென்றால் விண்டோஸ் இயங்குதளத்தை இயக்குவது என்று பலரும் நினைப்பதை போலவே , இப்போது ஆகிவிட்டது. காரணம் அதிகப்படியான ஒன்றின் சார்ந்த பயன்பாடே!

இப்பதிவில் உள்ளப்பலவும் ஏற்புக்குறியதே. ஆனால் தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு என்பது வேறு , அவர்கள் அப்படித்தான் இருப்போம் என்றால் , அவர்களை கையை பிடித்து இழுக்க கூடாது.

என்ன இருக்கிறது என்பதை காட்டிவிட்டு தேர்வு அவர்களது என்று செல்வதே சிறந்தது.

முத்துகுமரன் said...

//பதிவர்கள் , திரட்டிகள் இருவரும் ஒருவரை ஒருவர் சாராமல் இயங்கும் சூழல் தான் பதிவுலகத்துக்கு ஆரோக்கியமானது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு பதிவு நன்றாக இருக்கிறது என்றால் அதை திரட்டி தானாக திரட்டிக் காட்ட வேண்டும். தற்போது, பதிவர்களின் அனுமதியுடனேயே திரட்ட வேண்டி இருப்பதால் நல்ல பதிவுகளைத் தெரிந்தே தமிழ்மணம் தவறவிடலாம். ஏன் என் பதிவைச் சேர்த்தாய், ஏன் என் பதிவை நீக்கினாய் என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தமிழ்மணம் எல்லாவற்றையும் திரட்ட வேண்டும். உண்மையில் இதற்கு பதிவருடைய அனுமதி தேவை இல்லை. இணைப்புகள் இல்லாமல் இணையம் இயங்க முடியாது. உள்ளடக்கமாக இல்லாமல் வெறும் இணைப்புகளை மட்டுமே தமிழ்மணம் வழங்குகிறது. எனவே, ஒரு பதிவைச் சேர்க்க பதிவருடைய அனுமதிக்குக் காத்திராமல் பதிவுகளை அதுவே திரட்ட வேண்டும். ஒருவர் கருவிப்பட்டையைச் சேர்க்காவிட்டாலும் பின்னூட்ட நிலவரம் காட்டும் வகையில் தமிழ்மணம் தனித்தியங்க வேண்டும். அதாவது அதன் வசதிகளை செயல்படுத்தும் திறன் பதிவரின் உதவியைச் சார்ந்து இருக்கக் கூடாது.//

ரவி, ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு இந்த பதிவு ஒத்துழைப்பாக இருக்கும்.என் மனதிலிருப்பவற்றை உங்களீடம் பகிர்ந்து கொள்கிறேன். பதிவரின் அனுமதியின்றி திரட்டிகள் திரட்ட வேண்டுமென்றால் அவைகள் பிளாக்கர், வேர்ட்பிரஸ் போன்றவைகளின் துணை நிறுவனமாகத்தான் இயங்க வேண்டும். இது என் புரிதல். எடுத்துகாட்டாக ஜிமெயிலில்(ஜிமெயிலின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு) மூலமாக நான் ஒரு வலைப்பூவை உருவாக்கிக் கொள்கிறேன். அதை பிறர் வாசிக்க வேண்டுமா இல்லையா என்பதை நான் தானே தீர்மானிக்க வேண்டும். பதிவுகள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சேமிப்பு பக்கங்களாக இருக்கும்போது அவைகளை மூன்றாவது நபர் சேர்த்துக்கொள்வது என்பது தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பதற்கு ஒப்பாகும். தொழில்நுட்ப ரீதியாக நான்கூறுவது தவறு என்றாலும் விளக்கவும்.

வவ்வால் said...

//மூலமாக நான் ஒரு வலைப்பூவை உருவாக்கிக் கொள்கிறேன். அதை பிறர் வாசிக்க வேண்டுமா இல்லையா என்பதை நான் தானே தீர்மானிக்க வேண்டும்.//

திரட்டிகளில் சேர்ந்த பிறகும் கூட, ஒருவர் பதிவில் பின்னூட்டம் இட தனிப்பட்ட விருப்ப தேர்வு வைக்க முடியும். அவர்கள் மட்டும் தான் பின்னூட்டம் இட முடியும். அதே போல படிப்பதற்கும் விருப்பத்தேர்வு வைக்க முடியும். பிலாக்கரில் அப்படி ஒரு வசதி இருக்கிறது.

இப்படி செய்வதன் மூலம் அவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே அப்பதிவை பயன்படுத்த முடியும்.

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல பதிவு ரவி.

இப்படிப்பட்ட ஒரு பதிவு தமிழ்மணம் என்ற நிறுவனத்துக்கு எதிராக (சிலரால்) எழுதப்பட்டது என்று கருதப்படும் சூழல் இருக்கையில் மிக அவசியமான பதிவும் கூட.

ஆனால், இன்றைய நிலைக்கு (தமிழ் வலைப்பதிவு = தமிழ்மணம்) முழுக்க முழுக்க பதிவர்களின் தகவல் குறைவையே நான் குற்றம் சாட்டுவேன். பதிவுக்கான / திரட்டிக்கான தொழில்நுட்பம், பதிவர்கள், திரட்டிகள் மூன்றுமே ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்து வந்த நேரம் என்று 2003- 2006 ஐச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

மறுமொழி மட்டுறுத்தல், ஆபாசம் கொண்ட பதிவுகள் ஆகியவற்றுக்கு திரட்டிமேல் பழி போட்ட பதிவர்கள் காலப்போக்கிலேயே தெளிந்தனர். அதீதக் கோபம், அதீதப்பாசம் இரண்டுக்குமே நம் மக்கள் பெயர் போனவர்கள் :-) இன்னும்கூட தமிழ்மணத்தையா குறை சொல்கிறாய் எனக்கோபப்படும் பதிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தனிப்பட்ட பதிவர்கள் ஒரேயடியாக செய்ந்நன்றி செண்டிமெண்டும் வேண்டாம், வளர்ச்சியில் திரட்டிகளின் பங்களிப்பும் உள்ளது என்பதை உதாசீனம் செய்யவும் வேண்டாம் என்பதே என் கருத்து.

மீண்டும் ஒருமுறை தெளிவான விளக்கங்களுக்கு நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வவ்வால் - உங்கள் கருத்துக்கு நன்றி.

//என்ன இருக்கிறது என்பதைக் காட்டிவிட்டு தேர்வு அவர்களது என்று செல்வதே சிறந்தது.//

முற்றிலும் உடன்படுகிறேன். திரட்டிகளை நாடும் யாரையும் கொலை மிரட்டல் விடுத்து வெளியேற்றப்போவதில்லை. நானும் திரட்டிகளை வாசிக்கிறேன். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். ஆனால், முற்று முழுதாக அதைச்சார்ந்திருப்பதில்லை. திரட்டியில் இணைக்காமல் தனிப்பதிவில் எழுதுகிறேன். திரட்டியில் கிடைக்காமல் கூகுள் ரீடர் கொண்டும் வாசிக்கிறேன். ஆனால், தற்போதைய திரட்டிச் சேவைகளை முற்றுமுழுதாகச் சார்ந்து பயன்படுத்துவோர் அதனால் விளையும் ஒட்டுமொத்த system level விளைவுகளை உணர்கிறார்கள் இல்லை. இந்த system விளைவு என்னவென்று அடுத்த இடுகையில் எழுதுகிறேன். அதற்காகவே "வெறுப்புணர்வு" குற்றச்சாட்டுகளுக்கும் துணிந்து சிலவற்றை எழுத வேண்டி இருக்கிறது.

முத்துக்குமரன் - இதை நீங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களாக எடுத்துக்கொண்டதற்கு நன்றி.

//பதிவரின் அனுமதியின்றி திரட்டிகள் திரட்ட வேண்டுமென்றால் அவைகள் பிளாக்கர், வேர்ட்பிரஸ் போன்றவைகளின் துணை நிறுவனமாகத்தான் இயங்க வேண்டும். இது என் புரிதல்.//

இல்லிங்க உங்க புரிதல் நுட்ப அடிப்படையில் தவறு. ஒரு திரட்டி பதிவரின் பதிவைத் திரட்ட அவரின் பதிவில் ஓடை வசதி மட்டும் இருந்தாலே போதுமானது. ப்ளாகர், வேர்ட்ப்ரெஸ் என்று எல்லா சேவைகளுமே இந்த ஓடை வசதியை அளிக்கின்றன. தமிழூற்று, சங்கமம் தளங்கள் பதிவரின் அனுமதிக்கு காத்திராமலேயே திரட்டத் தொடங்கியுள்ளதைப் பாருங்கள். google, yahoo போன்ற தேடுபொறிகள் முதற்கொண்டு technorati, icerocket போன்ற blog engineகள் வரை ஒவ்வொரு நாளும் நம் பதிவுகளை நம் அனுமதியின்றித் தான் திரட்டிக்கொண்டிருக்கின்றன.

உலக நிறுவனங்கள் எல்லாம் நம் பதிவுகளை அனுமதியின்றித் திரட்டும்போது உள்ளூர் நிறுவனங்கள் திரட்டக்கூடாதா? நமக்கும் ஒவ்வொரு பதிவாய்ச் சேர்க்கச் சொல்லிக் கேட்கும் நேரம் மிஞ்சும். திரட்டி நிர்வாகிகளுக்கும் ஒரே பதிவைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு திரட்டிகளில் பார்த்துச் சேர்க்கும் நேரம் மிஞ்சும். இதை எல்லாம் விட முக்கியம், "ஏன் சேர்க்கிறோம், ஏன் நீக்குகிறோம்" என்றெல்லாம் விளக்கம் தந்தே நொந்து போகும் திரட்டி நிர்வாகங்கள் அந்தச் சிக்கலில் இருந்து தப்பலாம். திரட்டி நிர்வாகிகளைத் தங்கள் நேரத்தை நுட்பத்தை மேம்படுத்துவதில் செலவு செய்ய விடாமல் அவர்களை இது போன்ற விளக்கங்களைத் தர இழுத்தடிப்பதன் மூலம் நாமே நமக்கு கிடைக்க வேண்டிய நுட்ப
வசதிகளைத் தாமதிக்கிறோம் என்பது தான் உண்மை.

//எடுத்துகாட்டாக ஜிமெயிலில்(ஜிமெயிலின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு) மூலமாக நான் ஒரு வலைப்பூவை உருவாக்கிக் கொள்கிறேன். அதை பிறர் வாசிக்க வேண்டுமா இல்லையா என்பதை நான் தானே தீர்மானிக்க வேண்டும். பதிவுகள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சேமிப்பு பக்கங்களாக இருக்கும்போது அவைகளை மூன்றாவது நபர் சேர்த்துக்கொள்வது என்பது தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பதற்கு ஒப்பாகும்.//

உங்கள் பதிவை யார் படிக்கிறார்கள் என்பதை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுத்தலாம். உங்கள் பதிவுக்கோ குறிப்பிட்ட இடுகைகளுக்கோ கடவுச்சொல் வைத்து மறைக்கலாம். ப்ளாகரில் பதிவை மட்டுமே பூட்டலாம். வேர்ட்ப்ரெசில் இடுகைகளையே கூட பூட்டலாம். மறுமொழி இடும் வசதியைக் கூட குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தருமாறு பூட்டி வைக்கலாம். ஆனால், இப்படி கடவுச்சொல் இல்லாமல் தளத்தைத் திறந்து வைத்த அடுத்த நொடி உங்கள் தளத்தை யார் யார் படிக்கிறார்கள், யார் யார் எந்தெந்த வழிகளில் அணுகிறார்கள், எந்தெந்த தேடு பொறிகள் உங்கள் தளத்துக்கு வருகின்றன என்பதில் உங்களுக்கு துளியளவு கட்டுப்பாடும் கிடையாது என்பது தான் உண்மை. வேண்டுமானால், ஓடை வசதியை முடக்கினால் திரட்டிகளால் அணுக முடியாது.

இது உங்கள் சுதந்திரத்தின் மீதான தலையீடு இல்லை. இணையம் இயங்குவதற்கே இது தான் அடிப்படை. சுதந்திரம் விரும்பும் பதிவர்கள் முதலில் வலைப்பதிவில் எழுதவே கூடாது. அப்படியே எழுதி தங்கள் நண்பர்கள் மட்டும் படிக்க விரும்புபவர்களுக்குக் கடவுச்சொல்வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு பிறகும் சுதந்திரம் குறித்துப் பேசுவதில் ஒன்றுமில்லை. உண்மையில், திரட்டிகள் பதிவர்களின் தளத்தைத் திரட்டுவதால் சுதந்திரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்றே விளங்கவில்லை. தளத்தைப் பொதுவில் வைக்கும்போதே அதற்கு எவ்வளவு கூடுதல் வாசகர்களைப் பெறலாம் என்பது தானே ஒவ்வொரு பதிவரின் எண்ணமும்? சூடான இடுகைகளைப் பார்ப்பதற்கும் மறுமொழி எண்ணிக்கை பார்ப்பதற்கும் இது தானே காரணம்? பிறகு அந்த கூடுதல் வாசகர்களைப் பெற்றுத் தர ஏன் ஒவ்வொரு திரட்டிக்கும் போய் தனி அனுமதி தர வேண்டும்?

உங்கள் பதிவைத் திரட்டலாம் என்று x திரட்டிக்கு அனுமதி கொடுக்கிறீர்கள். அதன் மூலம் சில வாசகர்கள் வருகிறார்கள். ஆனால், Y திரட்டிக்கும் கூடுதலாகவும் சேர்த்து அனுமதி கொடுப்பதால் எப்படி நமது சுதந்திரம் பாதிக்கப்படும்? ஒட்டுமொத்த தமிழ்த் திரட்டிகளுக்கும் நீங்கள் அனுமதி கொடுக்காவிட்டாலும் கூகுள் மூலம் உங்களை மக்கள் வந்தடைய முடியும். அப்போது எங்கே போகிறது சுதந்திரம்?

x திரட்டியில் மட்டுமே இணைப்பேன், அதன் வாசகர்கள் மட்டுமே என் பதிவுக்கு வரலாம் என்பது கூகுள் வழியாக என் தளத்துக்கு மக்கள் வரலாம். ஆனால் யாஹூ வழியாக வரக்கூடாது என்று சொல்வது போலத் தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

பதிவர்களின் அனுமதி பெற்றே திரட்டிகள் திரட்டுவது, பதிவர்கள் வேண்டியே திரட்டியில் சேர்ப்பது, இரண்டுக்கும் நுட்பம் தவிர்த்த திரட்டி நிர்வாகங்களை ஆதரிப்பது உள்ளிட்ட குழு மனப்பான்மைச் சூழல் நிலவுவது ஒரு முக்கியக் காரணம் என்பது தான் என் புரிதல். இது குறித்த அடுத்தடுத்த இடுகைகளில் எழுதப் பார்க்கிறேன்.

முத்துக்குமரன், இங்கு "உங்கள், நீங்கள்" என்று விளித்து எழுதி இருப்பதை உங்களைத் தனிப்பட அழைத்து அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள் தானே? பொதுவாகப் பதிவர்களை விளித்தே எழுதி இருக்கிறேன்.

பெனாத்தல் suresh - //இன்றைய நிலைக்கு (தமிழ் வலைப்பதிவு = தமிழ்மணம்) முழுக்க முழுக்க பதிவர்களின் தகவல் குறைவையே நான் குற்றம் சாட்டுவேன். பதிவுக்கான / திரட்டிக்கான தொழில்நுட்பம், பதிவர்கள், திரட்டிகள் மூன்றுமே ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்து வந்த நேரம் என்று 2003- 2006 ஐச் சொல்லலாம் என நினைக்கிறேன்.//

உடன்படுகிறேன்.

PKS said...

இந்த உரையாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் சொல்கிற பல கருத்துகளில் உடன்பாடு உண்டு என்று எழுதினால், உங்களுக்கு மேலும் சாயங்கள் பூசப்படலாம் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் சொல்கிற பல கருத்துகளை, பல நண்பர்கள் (முகமூடி உள்ளிட்டு) கடந்த காலங்களில் அவரவர் ஸ்டைலில் சொல்லிக் கெட்டப் பெயர் மட்டுமே வாங்கியிருக்கிறோம். உங்களிடம் நிதானமாகவும் பொறுமையாகவும் கருத்துகளை எடுத்து வைக்கிற திறமை இருக்கிறது. அதற்குப் பாராட்டுகள்! - பி.கே. சிவகுமார்

Kasi Arumugam said...

ரவிசங்கர்,

உங்கள் கடந்த பல இடுகைகளையும் வாசித்து வந்தாலும் (சக நுட்பவியலாளர் என்ற பாசம்தான்:-) எதிலும் மறுமொழியவில்லை. காரணம், அவற்றில் மறுமொழிய ஒன்றுமில்லை என்பதால்தான்! இங்கு நீங்கள் நீங்கள் நீட்டி முழக்கியிருக்கும் 'சேர்ப்பதற்கு பதிவரிடம் அனுமதி கேட்பதும்' 'என்னை விலக்கு என்று பதிவர் கேட்பதும் விலக்குவது'மான நிகழ்வுகளின் ஆசான்;-) இங்கே எனக்கு முன் மறுமொழிந்த சிவகுமார் என்பவர் . அந்த நிகழ்வுகள் நடந்த போது நீங்களும் பதிவுலகில் இருந்ததும் அறிந்ததே. இன்று அவரே உங்களுடன் 'ஒத்துப்போகிறார்' அதை வெட்கமில்லாமல் நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்கள். நல்ல நகைச்சுவை. தொடரட்டும். ரசிப்போம்.

இதை இங்கே சொன்னதற்காக இனி இங்கே சிலர் அடிக்கப் போகும் கூத்துக்களுக்கான என் சிரிப்பான்களை இப்போதே தூவிவிடுகிறேன், பிறகு தமிழனுக்கு நகைச்சுவை உனர்ச்சி குறைவு' என்று யாரும் சொல்லிவிடக்கூடாதல்லவா?
:-)))))))
:DDDDDDDDDDD
:}}}}}}}}}}}}
:lol:
:rofl:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

காசி, உங்கள் மறுமொழியை வெளியிடுவதாலேயே உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன் என்பதில்லை. அதே போல் pks கருத்துக்கும். ஒத்துப் போகிற கருத்துக்களை மட்டும் வெளியிடும் பதிவரும் நான் இல்லை.

தவிர, 2000+ பதிவரில் ஒவ்வொருவரும் திரட்டிகளிடத்தில் என்ன நிலை கொண்டிருந்தார்கள் என்று தெரிந்து கொள்ளவோ நினைவில் வைக்கவோ என்னல் இயலாது. யார் எழுதுகிறார்கள் என்பதை விட என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தே வெளியிடுகிறேன்.

இரா.சுகுமாரன் said...

எங்கள் ஊரில் பட்டிமன்றம் தேவையா இல்லையா? என்று ஒரு பட்டிமன்றத்தில் விடிய விடிய பேசினார்கள்.

கடைசியில் பட்டிமன்றம் தேவையா? இல்லையா? என்று முடிவு செய்வதற்கு ஒரு பட்டிமன்றம் தேவைப்படுகிறது எனவே பட்டிமன்றம் தேவை என்று நடுவர் தீர்ப்பளித்தார்.

அது போல

..........."பதிவரா திரட்டியா? - திரட்டிச் சார்பு, திரட்டி அரசியல், பதிவர்-திரட்டி உறவு... - பாகம் 2 :)".............

என்று நீங்கள் எழுதியதை படிக்க ஒரு திரட்டி தேவை. அதன் தேவையை அந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் அரசியலில் அவர்களில் தனிப்பட்ட சுதந்திரத்தில் நீங்கள் (அல்லது) நான் தலையிடுவது நல்லது அல்ல என நான் கருதுகிறேன். அவர்களின் அரசியல் உங்களுக்கு உடன்பாடில்லையோ அதுபோல நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றால் நீங்கள் இனி எழுதுவதை நிறுத்திக் கொள்வீர்களா?.

முத்துகுமரன் said...

நீண்ட விளக்கத்திற்கு நன்றி. உங்கள் விளக்கங்களின் மூலம் நான் சில தொழில்நுட்ப தெளிவுகள் பெற உதவியாக இருந்தது.
//முத்துக்குமரன், இங்கு "உங்கள், நீங்கள்" என்று விளித்து எழுதி இருப்பதை உங்களைத் தனிப்பட அழைத்து அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள் தானே? //
நிச்சயமாக! குறைந்தபட்சம் அந்த புரிதல் எனக்கு இருக்கிறது என்றே நம்புகிறேன் :-)

மு. சுந்தரமூர்த்தி said...

//ஆதரவாளர்கள் தவிர வேறு யாருக்கும் நாம் தட்டி வைக்கத் தேவை இல்லை என்று என் கருத்தை முன்வைத்தேன்.//

//இந்த உரையாடல் நடந்த போது சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கு தமிழ்வெளி, தமிழ்மணத்தின் நிதி ஆதரவு கிட்டி இருக்கவில்லை//

1. நிதி அளிக்குமுன் திரட்டிகளுக்கு தட்டி வைப்பது/திரட்டிகளைத் தட்டி வைப்பது தொடர்பான உட்குழு விவாதங்கள் சரி. நிதி அளிக்கப்பட்ட பின் இதுபோன்ற விவாதம் ஏதாவது மீண்டும் நடந்ததா? எந்தெந்த புரவலர் அமைப்புகளுக்கு தட்டி வைக்கப்பட்டன. எவ்வெவை தட்டி வைக்கப்பட்டன போன்ற தகவல்கள் கிடைக்குமா?

2. இப்பட்டறையில் பயிற்சி பெற்ற எத்தனை பேர் புதிதாக வலைப்பதிவுகள் ஆரம்பித்தார்கள் என்ற தரவு இருக்கிறதா? பயிற்சியின் முடிவில் பதிவு ஆரம்பிப்பதற்கான சாத்தியத்தைப் பற்றி அறிய பயிற்சி பெற்றவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதா அல்லது சில நாட்களுக்குப் பிறகு அவர்களைத் தொடர்பு கொண்டு பதிவு துவக்கினார்களா எனக் கேட்டறியப்பட்டதா? தமிழ்மணத்தில் நான் பார்த்தவரையில், அந்த நிகழ்வுக்கு பின் புதிதாக இணையும் பதிவுகளின் வரத்து கணிசமாக கூடவில்லை. அக்கால கட்டத்தில் ஏற்கனவே தின்று கொட்டை போட்ட பதிவர்களின் கூச்சல்களே அதிகமாக இருந்தன. பயிற்சி பெற்ற புதிய பதிவர்கள் தமிழ்மணத்திற்கு வெளியே இயங்குபவர்களாக இருந்தால் நான் தவறவிட்டிருக்கலாம் அல்லவா?

3. திரட்டி அரசியல் போல, உங்கள் கணிப்பில், பட்டறை அரசியல் என்று ஏதாவது உள்ளதா? பட்டறை ஏற்பாட்டளர் என்ற முறையில் அந்த அரசியலையும் விலாவரியாக எழுத முடியுமா? குறிப்பாக பட்டறையை ஒழுங்கு செய்பவர்களும் அதிகார பீடங்களாக/பீடாதிபதிகளாக ஆகும் வாய்ப்புள்ளதா என்பது குறித்து.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இரா. சுகுமாரன் -

//அதன் அரசியலில் அவர்களில் தனிப்பட்ட சுதந்திரத்தில் நீங்கள் (அல்லது) நான் தலையிடுவது நல்லது அல்ல என நான் கருதுகிறேன். அவர்களின் அரசியல் உங்களுக்கு உடன்பாடில்லையோ அதுபோல நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றால் நீங்கள் இனி எழுதுவதை நிறுத்திக் கொள்வீர்களா?.//

திரட்டிகளுக்கு அரசியல் உண்டு என்று தெளிவாக ஒப்புக் கொண்டிருப்பதற்கு நன்றி. திரட்டிகளுக்கு நுட்பம் தானே இருக்க வேண்டும் அரசியல் ஏன் வேண்டும் என்பது தான் என் கேள்விகளுள் ஒன்று.

என் சுதந்திரத்துக்காக, அரசியலுக்காக, நலனுக்காக நான் என்ன முடிவெடுத்தாலும் அது உங்களையோ யாரையுமோ கட்டுப்படுத்தாது. அதனால், நான் என் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் மாற்றத் தேவை இல்லை. ஆனால், திரட்டியின் நலனை முன்னிட்டு எடுக்கப்படும் முடிவு குறைந்தபட்சம் அத்திரட்டி நிர்வாகத்துக்குத் தொடர்பில்லாத ஒரு பதிவர் அல்லது வாசகரின் சுதந்திரத்திலாவது தலையிடுகிறது என்பதால் அதைக் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது.

-/சுடலை மாடன்/- said...

// ஏற்கனவே ஒரு பொதுக்களத்தில் நான் பதிவு செய்த கருத்துக்கள் குறைந்தபட்சம் இந்தப் புரிதலையாவது வாசிப்பவர்களுக்குத் தரும் என்று நம்புகிறேன்.//

எந்தப் பொதுக்களமென்று தெரியவில்லை. இந்த விவாதத்தை நான் முன்பே படித்திருந்தால் தமிழ்மணத்தை நடத்துபவர்களைப் பற்றிய உங்களது தவறான புரிதல்களை முன்பே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட விவாதங்கள் எல்லாம் ஏன் வெளிப்படையாக எங்களைப் போன்ற திரட்டிகள் நடத்துபவர்களும் கலந்து கொள்ளுமாறு நடத்தப் படவில்லை என்றெல்லாம் கேட்க மாட்டேன். வேண்டுமென்றே அதற்கு ஒரு உள்ளர்த்ததைக் கற்பிப்பதை விட பட்டறை நடத்துபவர்களுக்கிருந்த பல சிக்கல்களில் ஒன்றாகத்தான் இதைப் புரிந்து கொள்கிறேன்.

இருந்தாலும் இப்படிப்பட்ட விவாதங்கள் நடத்தப் படுவது வலைப்பதிவுகளின் மிக ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். அந்த வகையில் துணிச்சலாக இதை நீங்கள் மேற்கொண்டதற்கு என் பாராட்டுக்கள். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள மறுத்தாலும் நான் சொல்லியே ஆக வேண்டும். தமிழ் மணத்தை நடத்தி வரும் டி.எம்.ஐ. நிறுவனத்தில் தற்பொழுது பங்களிப்பவர்களுக்கு நீங்கள் கற்பிக்கிறபடி எந்தவித வணிக நோக்கோ அல்லது வலைப்பதிவுகளை/பதிவர்களை விசுவாசிகளாகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. நான் கடந்த வாரம் உங்களுக்கு மின்னஞ்சலில் சொன்னது போல், அனைத்துத் தரப்புத் தமிழ் மக்களின் நலனையும் முன் வைக்கக் கூடிய, ஊடகமான தமிழ் வலைப் பதிவுகள், openness-டனும், ஜனநாயகத்தன்மையுடனும், சுதந்திரத்துடனும் இருக்க வேண்டும் என்பதில் தமிழ் மணம் (TMI) உறுதியாகச் செயல் பட்டு வருகின்றது.

வலைப்பதிவுகள் எப்படி இயங்க வேண்டும் என்ற உங்களது உயர்ந்த இலட்சிய எதிர்பார்ப்பை நான் வரவேற்கிறேன். அப்படி ஒரு சூழல் உருவாகி திரட்டிகள் இல்லாமல் போய் வலைப் பதிவர்கள் தொழில் நுட்ப அறிவுடனும், கருத்துச் சுதந்திரத்துடனும் செயல் பட்டால் அதை விட தமிழ்ச்சமூகத்தில் நல்ல குறிக்கோள் வெற்றி வேறொன்றுமில்லை. வியப்பென்னவென்றால், இட ஒதுக்கீட்டுக்கும், ஈழப்போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்தும், இந்திய, சிங்கள அரசுகளை மற்றும் உயர்சாதி ஆளும் வர்க்கங்களை விமர்சித்தும் எழுதுபவர்களையெல்லாம் “கைகளை வெட்ட வேண்டும், களி தின்ன வைக்க வேண்டும்” என்று வெளிப்படையாகவும், போலிப்பெயர்களிலும் எழுதுபவர்களும், தமிழ் இணையத்தில் மன்றங்களையும், குழுக்களையும், இணையப் பத்திரிகைகளையும் சர்வாதிகாரிகளாக நடத்திக் கொண்டிருந்தவர்களும், உங்கள் openness கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பதுதான் உங்கள் உயர்ந்த நோக்கம் எப்படித் தவறாக இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது என்ற கவலையளிக்கக் கூடியது.

கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கையுடைய பல பதிவர்கள் உங்களுடைய இடுகைகளுக்கு மிகுந்த வரவேற்பளிக்கத் தவறிவிட்டதையும் கொஞ்சம் நீங்கள் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு அதற்கான காரணம் புரியும். தமிழ் ஊடக வரலாற்றில் (அச்சு, வானொலி, தொலைக்காட்சி, இணையம்) மேலே சொன்ன கருத்துச் சர்வாதிகாரிகள் இதுவரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று பதிவர்கள் அனுபவப் பட்டிருப்பதால் தான், தமிழ்மணம் ஒரு திரட்டி மட்டுமே என்று தெரிந்த பின்னும், நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு ஆதரவாக வெளிவராமல் மவுனம் சாதிக்கின்றனர். இதை ‘நன்றிக்கடன்’ என்றெல்லாம் சொல்லி தயவு செய்து கொச்சைப் படுத்தாதீர்கள். தமிழகத்தின் தென்கோடியில் ஒரு குக்குராமப்பள்ளியில் படித்த நான் அமெரிக்காவின் உயர்ந்த கல்வி நிறுவனங்களில் படித்த பொழுதும், இரண்டையும் ஒப்பிட்டு அமெரிக்காவின் கல்வி நிறுவனத்தைப் போல் அந்தக் குக்கிராமப் பள்ளியில் வசதிகள் இல்லையென்பதற்காக அப்பள்ளியையும், நடத்துபவர்களின் குறைபாடுகளையும் சொல்லி, அப்பள்ளிகளில் படிப்பதை விட்டு விட்டு அமெரிக்கக் கல்வி நிலையங்கள் சென்று படிப்பதற்கு முயலுங்கள் என்று சொல்ல மாட்டேன். தமிழ் மணத்தையும், கூகுள் நிறுவனத்தையும் நொடிக்கு நூறு முறை ஒப்பிட்டுப் பேசுவதை நினைத்தால் இந்த இலட்சிய இரவி எந்த உலகத்தில் இருக்கிறார் என்றுதான் சிரிக்கத் தோன்றுகிறது.

அதற்காக, தமிழ் மணத்திலே அளிப்பதைக் கட்டிக் கொண்டுதான் இங்கு இருக்க வேண்டும் என்று எந்தப் பதிவரையும் வற்புறுத்தவில்லை. எங்களால் இயன்ற அளவுக்குத் தொழில் நுட்ப வசதிகளைப் பெருக்கித் தருகிறோம். இருந்தாலும் மற்றவர்களும் தாராளமாக திரட்டி தொடங்குங்கள். புதிது புதிதாக செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம். உதாரணமாக, தமிழ் வெளி ஆரம்பிக்கப் பட்ட பொழுது அதற்குப் பின்புலமாக இருந்த நண்பரைத் தொலை பேசியில் அழைத்து எத்தனை முறைகள் என்ன பேசியிருக்கிறேன் என்று அந்த நண்பரையே கேட்டுப் பாருங்கள். "அனைத்துத் தரப்புத் தமிழ் மக்களின் குரல்களையும் ஒலிக்கும் ஊடகமாக வலைப்பதிவூடகம் பரிணமிக்க உதவ வேண்டும்” என்ற குறிக்கோளைப் போட்டி போட்டு தமிழ் வெளி, தமிழ் மணத்தை விட மிகச் சிறப்பாக செயல் படுத்தி தமிழ் மணத்தையே இல்லாமல் ஆக்கினால் நான் கவலைப் பட மாட்டேன், மகிழ்ச்சியுறுவேன். அதனால் தயவு செய்து எங்களைப் எதிராளிகளாகக் கருத வேண்டாம்." என்று மட்டுமே நான் பேசிய ஒவ்வொரு முறையும் அவரிடம் சொல்லியிருக்கிறேன். இது போலவே தேன்கூடு ஆரம்பிக்கப் பட்ட பொழுது OPML பகிர்வு உள்பட காசி செய்த உதவிகளையும் வலைப் பதிவுலகம் அறியும்.

தமிழ் மணத்தைப் பற்றி நீங்கள் சொல்லியுள்ள ஒவ்வொரு குறையும், நாங்கள் வழங்கும் தொழில் நுட்பத்தில் உள்ள குறைகள்தான். அவை உங்களுக்குத் தெரிவது போல எங்களுக்கும் தெரிந்தே வைத்திருக்கிறோம். நாங்கள் உங்களை விட விசய ஞானம் குறைவானவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், தமிழ் மணத்திலுள்ள தொழில் நுட்பக் குறைபாடுகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத அடிமுட்டாள்களல்ல. அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆசையும், ஆதங்கமும் எங்களுக்குமுண்டு. நாங்களும் ஓய்வு நேரங்களில் முயன்றுதான் வருகிறோம்.

"ஒரு திரட்டி தான் தேவை என்றால் அதையும் open source போல் உருவாக்க இயலும். மாய மந்திரமில்லை. tamilblogs.com கூட திறமூலமாக இருக்கிறது. நமக்குத் தேவையானதை நாமே உருவாக்க முடியும். கட்டுப்பாடுகள், குறை உள்ள பழைய திரட்டிகளுக்கு ஆள் சேர்ப்பதை விட திறமான புதிய திரட்டிகளை உருவாக்கலாம்." என்று மேலே எழுதியிருக்கிற நீங்களும், "எங்கள் குறைகளை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி, பொன்னான நேரத்தை வீணாக்காமல் புதிய திரட்டிகளை உருவாக்குங்கள்" என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி – சொ. சங்கரபாண்டி

-/சுடலை மாடன்/- said...

//சரியாகச் சொன்னீர்கள். திரட்டி நிர்வாகங்கள் ஏன் பட்டறை வேலையில் இறங்கவில்லை? அவர்கள் பதிவர்களில் ஒருவராகத் தங்களை உணரவில்லையா? அப்ப அவர்கள் யார்?//

//தேன்கூடு, தமிழ்மணம் நிகழ்வுக்கு ஆதரவு வழங்கி இருப்பதாக ஏற்பாட்டடாளர் 4 குறிப்பிட்டார். மன்னிக்கவும். வெறும் t-shirt கொடுத்ததை என்னால் ஆதரவாகக் கருத முடியாது. இந்த t-shirt இல்லாமலும் பட்டறை நடக்கும். 100 t-shirt அடித்து தங்கள் தளத்தை விளம்பரப்படுத்த இயல்பவர்களுக்கு அதில் ஒரு 10 t-shirt காசையேனும் அளிக்க நினைத்திருக்கலாம் அல்லவா? தங்கள் தள விளம்பரம் என்ற சுயநலம் மட்டுமே இதில் தெரிவதைத் தவிர, பதிவுலகை வளர்க்க வேண்டும் என்ற நோக்கமும் இதில் தெரியவில்லை.//

இவை இரண்டுமே தவறான தகவல்கள்.

1. திரட்டி நிர்வாகிகள் பட்டறை வேலை செய்யவில்லையென்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். சென்னையில் நடக்கும் பட்டறையில், உங்களைப் போன்றவர்கள் உதவியிருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. அதற்காக இப்படி அசட்டுத்தனமான கேள்விகளை முன்வைப்பீர்களென்று எதிர்பார்க்கவில்லை. தமிழ்மணத்திலும், பூங்காவிலும் (பட்டறைப் பணிகள் நடந்த பொழுது) உள்ள வேலைகளையே ஒவ்வொரு வாரமும் சிரமப் பட்டுச் செய்து கொண்டிருந்த எங்களுக்கு பட்டறைக்கு ஏதேனும் பணிகள் மூலம் பங்களிப்புச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் இருந்தது. இருந்தாலும் குறைந்த பட்சம் நம்மால் இயன்ற பொருளுதவியாவது செய்ய வேண்டும் என்றெண்ணியே பத்தாயிரம் நன்கொடையாவது அளிக்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களை நோக்கி இப்படிக் காழ்ப்புணர்ச்சிக் கேள்விகளை முன்வைத்த உங்களுக்கு எந்த பங்களிப்புமே செய்ய முன்வராத பிற பதிவர்கள் மேல் என்ன மதிப்பு இருந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

2. சென்னை பட்டறைக்கு முன்பு பால பாரதியைத் தொலை பேசியில் அழைத்த நான் எங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்று கேட்ட பொழுது பட்டறைக்கான செலவுகள் அதிகம் உள்ளன என்று மட்டும் சொன்னார். அவர் என்னிடம் பட்டறைப் பணிகள் மும்முரமாக போய்க் கொண்டிருந்ததைச் சொன்ன பொழுதும் கூட அவராக எந்த உதவியையும் கேட்க வில்லை. பின் பத்தாயிரம் ரூபாய் பொருளுதவி அளிக்க முன் வந்த பொழுது மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். அப்பொழுது டி-சர்ட் பற்றியே இருவரும் பேசவில்லை.

3. தமிழ் மணம் டி-சர்ட்டுகள் கோவைப் பதிவர் சந்திப்பின் போது கொடுப்பதற்காக முடிவு செய்யப் பட்டு பால பாரதியே தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். தயாரிக்கும் நிறுவனம் குறித்த நேரத்தில் செய்து முடிக்காத படியால், பின்னால் அதே பதிவர்களை எப்பொழுதாவது சந்திக்கும் பொழுது கொடுத்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்தார்.

4. சென்னைப் பட்டறைக்கு பணம் அளித்த பிறகு இன்னொரு நாள் பாலபாரதியிடம் தொலை பேசும் பொழுது, அந்த டி-சர்ட்டுகளை அதே பதிவர்களில் பெரும்பாலோர் சென்னைப் பட்டறைக்கும் வரவிருப்பதாயிருந்தால் சென்னையில் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அதற்கு பாலபாரதி, “அப்படி அவர்களுக்கு மட்டும் கொடுப்பது நன்றாக இருக்காது. வருகை தரும் முதல் 38 பேருக்கு மட்டும் கொடுக்க முயற்சி செய்கிறோம்” என்றார். பின்னால் பல பணிகளுக்கிடையே அதுவும் முடியவில்லையென்று அறிந்த பிறகு நானும், சுந்தரவடிவேலும் ஆகஸ்டு இறுதியில் சென்னை வந்திருந்த பொழுது கலந்து கொண்ட பதிவர் கூட்டத்தில் அந்த டி-சர்ட்டுகள் கொடுக்கப் பட்டன.

5. டி-சர்ட்டுகள் தமிழ் மணத்தை விளம்பரப் படுத்தவே கொடுக்கப் பட்டன என்பதை நான் மறுக்க வில்லை. வணிக நோக்கம் இருந்தால் மட்டுமே இப்படி உத்திகள் கையாளப் படவேண்டும் என்ற சட்டத்தை எங்கு கற்றீர்கள் என்று தெரியவில்லை. இலாப நோக்கமற்ற எத்தனையோ நிறுவனங்கள் இதைப் போன்ற விளம்பரங்கள் செய்து மக்களுக்கு தம் பணிகளைப் பற்றி அறியும் வாய்ப்பை ஏற்படுத்துவது சர்வசாதாரணம்.
"என்னுடைய தனித்தளத்தில் எழுதத் தேவையில்லாத, wordpress, ubuntu, wikipedia, tamil99 போன்ற விழிப்புணர்வுக் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க விரும்பும் இலக்கு வாசகர்களை எந்த சேவை தந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நோக்கம், விளைவு அளவுக்கு வழிமுறைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிலும் இருக்கும் வழிமுறைகள், வாய்ப்புகள் குறைவாக இருக்கையில் அவை எல்லாவற்றையும் பயன்படுத்துவதில் என்ன தவறு? இந்த இடங்களில் என்னுடைய தனிப்பட்ட விருப்புகளைக் காட்டிலும் விழிப்புணர்வு பரப்புவதை முதன்மை நோக்கமாகக் கருதுகிறேன்." என்றெழுதுகிற உங்களுக்கு ஒரு நியாயம், தமிழ் மணத்துக்கு இன்னொரு நியாயமா? கொஞ்சமாவது மனசாட்சியுடன் தான் பேசுகிறீர்களா என்று யோசியுங்கள்.

6. இந்த விசயத்தில் இறுதியாக ஒன்று – இன்னும் ஓரிரு வருடங்களில் வலைப்பதிவுகள் மிகப் பிரபலமாகி, ஆனந்த விகடன் போன்ற பெரும் வணிக ஊடக நிறுவனங்கள் வலைப் பதிவூடகத்தையே கபலீசுவரம் செய்து கொண்டால் நீங்களெல்லாம் எப்படி போராடப் போகிறீர்கள் என்று பார்க்கலாம்.

நன்றி – சொ. சங்கரபாண்டி

Kasi Arumugam said...

இந்த ரவிசங்கர் நீங்களா, வேறு யாரோவா?

http://kasilingam.com/?item=207லிருந்து:
//ஞாயிறு, 23.10.05, 04:18:21 ரவிசங்கர் சொன்னது:

காசி, திரட்டி effciencyஐ அதிகரிப்பது குறித்த உங்கள் முடிவுகளை வரவேற்கிறேன். இதில் சர்வாதிகாரம் எல்லாம் ஒன்றும் இல்லை. வண்டி நிறைய பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கவிழ்வதை விட அளவாக பயணிகளை ஏற்றி நன்றாக பயணம் போவது நன்று. நீங்களே சொன்னது போல், பிற்காலத்தில் வகைப்பிரிப்பு வசதி வந்தால் அப்பொழுது தற்சமயம் 4வது காரணம் காட்டி நீக்கப்பட்ட சிலப்பதிவுகளை சேர்த்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அப்புறம், இந்த 3 மாதக் கணக்கு பற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்கள். வலைப்பதிவு உரிமையாளர் போடும் புதுப்பதிவு மட்டும் தான் கருத்தில் கொள்ளப்படுமா இல்லை அவருடைய பழைய பதிவுகளில் யாரேனும் பின்னூட்டம் இட்டால் கூட அப்பதிவு activeஆக இருப்பதாக கணக்கில் கொள்ளக் கூடுமா..மற்றபடி, மத, சாதி துவேஷ, ஆபாச வலைப்பதிவுகளை நீக்கி விடுவதில் உடன்படுகிறேன்..இவற்றை எல்லாம் விலக்கி நல்ல பதிவுகளை கண்டுபிடிப்பது பெரும் பாடாக இருந்து வந்தது//

'அன்று அறியாப்பிள்ளை, இன்று வளர்ந்துவிட்டேன்' என்றால், இன்னும் கொஞ்சம் வளருங்கள் என்று வாழ்த்துகிறேன்:-)

-/சுடலை மாடன்/- said...

//என்ன அடிப்படையில் சேர்க்கிறார்கள், என்ன அடிப்படையில் நீக்குகிறார்கள் என்ற தெளிவில்லாத மூடு மந்திரத் திரட்டிகளுக்கு ஆதரவளிக்கத் தேவை இல்லை.

ஏன் என் பதிவைச் சேர்த்தாய், ஏன் என் பதிவை நீக்கினாய் என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தமிழ்மணம் எல்லாவற்றையும் திரட்ட வேண்டும்.//

இப்படிச் சொல்கிற இரவிசங்கர்தான் நேற்று இப்படியும் எழுதினார் –
//தங்களுக்கு ஒத்து வரும் பதிவுகளைச் சேர்க்கவும் ஒவ்வாத பதிவுகளை நீக்கவும் தமிழ்மணத்துக்கு முழு உரிமை உண்டு. கருத்துச் சுதந்திர மறுப்பு போன்ற குற்றச்சாட்டுக்கள் வந்தாலும் தங்கள் நலனைக் காப்பதற்கு உரிய உரிமை எவருக்கும் உண்டு. தங்களுக்கு ஒவ்வாத அப்பதிவரின் பதிவை இன்ன காரணத்துக்காக விலக்கிக் கொள்கிறோம் என்று அறிவித்து விட்டு நீக்கியிருந்தாலே நிச்சயம் தமிழ்மணத்தின் நடுநிலைமையை என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்படி விளக்கம் கொடுக்காமலும் நீக்கினாலும் ஒரு கவலையும் இல்லை.//

:-)

//எந்தத் திரட்டியும் இல்லாமலேயே knowledge foundation பதிவர் பட்டறை நடத்தியது. அதில் நுழைவுக் கட்டணம் செலுத்தி மக்கள் கலந்து கொண்டார்கள் என்பதையும் கவனியுங்கள். நாம் இந்திய மொழி அளவில் பார்க்காமல் உலக அளவில் பார்த்தாலும் பதிவர் சந்திப்புகள், பட்டறைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.//

இரவிசங்கர் அய்யா, இந்தியா போன்ற ஆங்கிலம் முதல் மொழியாக இல்லாத நாடுகளில் ஆங்கிலப் பதிவர்களின் மேட்டுக்குடி அறிவு மற்றும் பொருளாதாரப் பின்புலத்துடன் தமிழ்ப் பதிவர்களை ஒப்பிட்டுப் பேசுவதே தவறு. உங்களைப் போன்று ஒரு சிலர் ஆங்கிலப் பதிவுலகில் நன்றாகச் செயல் படமுடியும் என்றாலும், பெரிய மனது பண்ணி தமிழிலும் பதிவு எழுதுவது மட்டுமல்லாமல், தொழில் நுட்பத்தை வளர்க்கவும் சிரத்தை எடுக்கிறீர்கள். ஆனால் உங்களைப் போன்றவர்கள் ஒரு சிறு விழுக்காட்டினரே. பெரும்பாலானோர் முதன் முறையாக தங்கள் சிந்தனைகளைக் கோர்வையாக பொதுத்தளத்தில் இகழ்ச்சி செய்யப் படாமல் எழுதும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களும் உங்களைப் போன்ற இலட்சிய இலக்கை அடைய வேண்டும்தான். அதற்காக முயற்சி செய்யுங்கள், எல்லோரும் முயற்சி செய்வோம். ரொம்ப அவசரப் படாதீர்கள். "ஐ.ஐ.டி.யில் உள்ளவர்கள் அறிவாளிகள், அதனால் அவர்களையே மற்ற கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் கல்லூரிகளே நடக்க வேண்டாம்" என்கிற மேட்டுக்குடி மொன்னைத்தனத்துக்கும், இதற்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இலட்சணத்தில் மேற்கு நாடுகளில் வசதியாக வாழும் பதிவர்களுடன் ஒப்பிடுவதையே நான் விரும்பவில்லை. இன்னமும் தமிழ் நாட்டில் பல பதிவர்கள் சொந்தமாகக் கணிணி வசதியில்லாமல் சிரமங்களுக்கிடையே எழுதி வருகிறார்கள். knowledge foundation பட்டறைகளில் பங்காற்றுகிறவர்கள் எப்படிப் பட்ட பின்புலத்தையுடையவர்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை.

நன்றி – சொ. சங்கரபாண்டி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மு.சுந்தரமூர்த்தி - திரட்டி நிர்வாகம் குறித்த கேள்விகளைத் திரட்டி நிர்வாகிகளின் தனிப்பதிவில் கேட்டால் official விசயங்களைத் தனிப்பதிவில் தெரிவிக்க முடியாது என்ற பதிலையே பார்த்திருக்கிறேன். ஆனால், பதிவர் பட்டறைக்கு என்று ஒரு நிறுவனமும் இல்லாததால் எனக்குத் தெரிந்த விவரங்களை இங்கு தருவதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால், இது என் தனிப்பட்ட கருத்துக்களே என்ற disclaimerஐயும் போட்டுக் கொள்கிறேன் :)

1. நிதி அளிக்காதவர்களுக்கான இலவச விளம்பரம் குறித்து தான் விவாதம் என்பதால் நிதி அளிக்கப்பட்ட பின் இப்படிப்பட்ட விரிவான விவாதம் ஏதும் பட்டறை ஏற்பாட்டு மடற்குழுவில் நடந்ததாக நினைவில்லை. திறமூல ஆதரவு போன்ற சில கொள்கைகளுக்குட்பட்டு நிதி ஆதரவு பெற்ற பிறகு அந்த நிறுவனங்களின் விளம்பரங்களை அனுமதிப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இவ்வளவு நிதி கொடுத்தால் இவ்வளவு விளம்பரம் தருகிறோம் என்று நாங்கள் package ஏதும் போட வில்லை. அந்த வகையில் ஒவ்வொரு புரவலர் நிறுவனமும் தாங்கள் கொண்டு வந்த விளம்பரத் தட்டிகளை எந்தத் தடையும் இன்றி ஏற்பாட்டாளர்கள் அனுமதித்திருக்கிறார்கள். பட்டறை வேலைகளே கழுத்தை இறுக்கியதால், பட்டறையின் சார்பில் புரவலர்களுக்கான விளம்பர ஏற்பாடுகள் எதையும் எங்களால் செய்து தர இயலவில்லை. புரவலர்களின் விளம்பரங்களை வடிவமைத்துத் தயாரிப்பதும் எந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வேலையும் அல்ல. சென்னையில் நான் நேரில் இல்லாததால் நீங்கள் வேண்டும் துல்லியமான தரவுகளை என்னால் தர இயலவில்லை. பதிவுலகம் சாரா நிறுவனங்களின் தரவுகள் உங்களுக்குத் தேவைப்படாது என்று நினைக்கிறேன். பட்டறை புகைப்படங்கள் மூலமும் பட்டறை நண்பர்கள் மூலமும் நான் அறிவது: சற்றுமுன், தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்ப்பதிவுகள், சற்றுமுன் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒரு தட்டி வைக்கப்பட்டது. மேற்கண்ட உரையாடலையே இட்டிருந்தேனே தவிர, உரையாடலுக்கு அடுத்து எழுந்த புரிந்துணர்வை நான் குறிப்பிடவில்லை. மேல் உள்ள ஐந்து தளங்களின் மேலும் பட்டறை ஏற்பாட்டாளர்களுக்கு இருந்த பொதுவான நல்லுணர்வு அடிப்படையிலும் பட்டறை வருகையாளர்கள் இத்தளங்களை அறிந்து கொள்ள உதவும் என்ற வகையிலும் இத்தட்டி வைக்கப்பட்டதாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

2. சென்னை பட்டறையை அடுத்து பெருமளவிலான புதிய பதிவுகள் ஏதும் என் கண்ணிலும் தட்டுப்படவில்லை. ஆனால், ஒரு பட்டறைக்கு எத்தனை புதிய பதிவுகள் என்ற விகிதத்தில் மட்டுமே ஒரு பட்டறையின் வெற்றியையோ தேவையையோ அளந்து விட முடியாது. இந்தப் பட்டறைகள் என்பன தமிழ்ப்பதிவுலகம் குறித்து ஊடகங்கள், பொதுமக்களிடம் அறிமுகம் ஏற்படுத்தல், தமிழ்த் தட்டச்சு கற்பித்தல் போன்று அளத்தலுக்கு அப்பாற்பட்டவற்றையும் சேர்த்து அடையாள, பன்முகத் தேவைகளை முன்னிறுத்தும் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளாகவே பார்க்கிறேன். பட்டறையின் வெற்றி, அதன் தொடர்ச்சி குறித்த என் கருத்துக்களை இங்கும் இங்கும் காணலாம். இதைத் தொடர்ந்த புதுகைப் பட்டறையும் முழுக்க வலைப்பதிவர் பட்டறையாக இல்லாமல் கணினியில் தமிழ் என்பதை முன்னிறுத்திய நிகழ்வாக அமைந்ததை கவனிக்கிறேன்.

3. நானும் ஒரு பட்டறை ஏற்பாடுகளில் கலந்து கொண்டவன் என்ற முறையில் தற்போதும் வருங்காலத்திலும் தனிப்பட்ட முறையில் இதை வைத்து அரசியல் செய்யப்போவதில்லை. அப்படி அரசியல் செய்ய நினைக்கும் யாருடனும் என்னால் இணங்கி ஒரு குழுவாக வேலை செய்திருக்க முடியும், வருங்காலத்தில் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. திரட்டிகள் தொடங்கி 4 ஆண்டுகள் கழித்தே திரட்டி அரசியல் குறித்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வருங்காலப் பட்டறைகள் எல்லாம் பொதுப் பயன்களுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தாமல் நடைபெறும் என்பதற்கு உறுதியளித்து ஆசிர்வதிக்க நான் எந்த மடத்தின் பீடாதிபதியும் அல்ல !

நான் தெரியாமல் தான் கேட்கிறேன்- பட்டறை வெற்றியா இல்லையா, இன்னும் எப்படி சிறப்பாக செய்திருக்கலாம் என்பது உங்கள் கவலையா அல்லது தமிழ்மணம் கொடுத்த காசுக்கு உகந்த விளம்பரம் கிட்டவில்லை என்பது உங்கள் கவலையா? பதிவுலகம் சாரா நிறுவனங்கள் இப்படி கவலைப்பட்டால் என்னால் புரிந்து கொள்ள முடியும். பதிவுலகைச் சேர்ந்தவர்கள் என்றாலும் புரவலர்கள் என்ற முறையில் இப்படிக் கவலைப்பட உரிமை உண்டு. ஒரு வேளை கொடுத்த காசுக்கு உகந்த மரியாதை இல்லை என்று நினைத்தால் அந்தக் காசைத் திருப்பித் தருமாறு பட்டறை நண்பர்களுக்கு என் தனிப்பட்ட பரிந்துரையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு தட்டி வைத்தோ சில நிமிடங்கள் பேச ஒதுக்கிக்கொடுத்தோ தமிழ்மணத்துக்குத் தந்திருக்கக்கூடிய விளம்பரத்தை விட நாள் முழுக்க நடந்த பயிற்சிகளின் மூலம் நிச்சயமாகப் பட்டறை ஏற்பாட்டாளர்கள் தமிழ்மணம் உள்ளிட்ட எல்லா திரட்டிகளுக்கும் கூடுதல் விளம்பரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.

அடையாளமே காட்டாமலும் அடையாளம் காட்டியும் விளம்பரமே வேண்டாமலும் எத்தனையோ பதிவுலக நண்பர்கள் தங்களால் இயன்றதை ஆயிரக்கணக்கில் தந்திருக்கும்போது இந்த ஒரு கேள்விக்குத் திரும்பத் திரும்ப பதில் சொல்லிச் சலித்துப் போய் விட்டது.

எந்த நிறுவனத்தையும் திரட்டியையும் இருட்டடிப்பு செய்வதற்கான எந்த agendaவும் எங்களுக்கு இல்லை.

இரா.சுகுமாரன் said...

/// திரட்டியின் நலனை முன்னிட்டு எடுக்கப்படும் முடிவு குறைந்தபட்சம் அத்திரட்டி நிர்வாகத்துக்குத் தொடர்பில்லாத ஒரு பதிவர் அல்லது வாசகரின் சுதந்திரத்திலாவது தலையிடுகிறது என்பதால் அதைக் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது.///

எந்த திரட்டியும் தங்கள் வலைப்பதிவில் என்ன எழுத வேண்டும் என்று விதிமுறை விதித்தாக தெரியவில்லை.

ஆனால், என்ன எழுதக்கூடாது என்று விதித்திருக்கிறார்கள்.

//ஒரு பதிவர் அல்லது வாசகரின் சுதந்திரத்திலாவது தலையிடுகிறது//

எதேனும் ஒரு திரட்டியில் இணைத்து விட்டு நான் என்னத்தை வேண்டுமானாலும் எழுதுவேன். அதை நீங்கள் வெளியிட்டுத்தான் ஆக வேண்டும் என்று கோருவது எப்படி சனநாயகம் ஆகும். இது சுத்த வன்முறை போல் உள்ளது.

சரியான கருத்து திணிப்பு இது நான் சொல்வதை இந்த திரட்டிகள் எல்லாம் கேட்க வேண்டும் என்று கருதுகிற அதிகார மனோபாவம் உங்களிடம் வளர்ந்துள்ளதை உங்கள் நடவடிக்கைகள் காட்டுகின்றன

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சங்கரபாண்டி -

//எந்தப் பொதுக்களமென்று தெரியவில்லை//

சென்னைப் பட்டறைக்கான நிர்வாகக் குழு மடலில் எழுதப்பட்டது. அது மூடப்பட்ட குழுவில் எழுதப்பட்டது தான். ஆனால், இருவருக்கு இடையேயான தனி மடலில் அல்லாமல் கூகுள் குழுமம் போன்ற இடத்தில் எழுதப்படுவது எப்படி எடுத்தாளப்படும், வருங்காலத்தில் அதில் யார் இணைந்து பார்க்கக்கூடும் என்பது என் கட்டுப்பாட்டில் இல்லாததால் அதைப் பொதுக் களமாகவே கருதுகிறேன்.

//இப்படிப்பட்ட விவாதங்கள் எல்லாம் ஏன் வெளிப்படையாக எங்களைப் போன்ற திரட்டிகள் நடத்துபவர்களும் கலந்து கொள்ளுமாறு நடத்தப் படவில்லை என்றெல்லாம் கேட்க மாட்டேன்.//

இது வரை எந்தப் பட்டறை அல்லது பதிவுலக நிகழ்வை நடத்தியவர்கள் குறைந்தபட்சம் மூடப்பட்ட குழுவிலாவது தங்கள் நடைமுறையை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்? எங்களுக்கு இருந்த குறைந்த நேரத்தில் இத்தகைய ஒரு உரையாடலையே செய்ய முடிந்தது. அடுத்தடுத்த பட்டறைகளில் இதையே கூட இன்னும் திறந்த முறையில் விக்கி தளம் போன்ற அமைப்பில் செய்ய வேண்டும் என்பது தான் என் பரிந்துரை.
தவிர, இது முழுக்க மூடப்பட்ட குழுவும் அல்ல. சென்னையில் நடக்கும் பட்டறைக்கும் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சிந்தாநதிக்கும் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஆக்கப்பூர்வமாகவும் தீவிரமாகவும் பங்களிக்க முன்வந்தவர்களை உள்வாங்க அந்தக் குழுமம் தயாராகவே இருந்தது.

//இருந்தாலும் இப்படிப்பட்ட விவாதங்கள் நடத்தப் படுவது வலைப்பதிவுகளின் மிக ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். அந்த வகையில் துணிச்சலாக இதை நீங்கள் மேற்கொண்டதற்கு என் பாராட்டுக்கள்.//

நன்றி. நேற்று தான் காழ்ப்புணர்வு, வெறுப்புணர்வு என்று ஒருவர் விடாமல் தமிழ்மண நிர்வாகிகள் கருத்து சொன்னீர்கள். தற்போது இந்த அளவுக்காவது புரிதல் வந்திருப்பதாவது மகிழ்கிறேன்.

(இந்தப் புரிதலுடன் உறங்கப் போய் வந்தால் திரும்பவும் அதே குற்றச்சாட்டுக்களுடன் அடுத்தடுத்த மறுமொழிகள்..ஹ்ம்ம்..)

//ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள மறுத்தாலும் நான் சொல்லியே ஆக வேண்டும். தமிழ் மணத்தை நடத்தி வரும் டி.எம்.ஐ. நிறுவனத்தில் தற்பொழுது பங்களிப்பவர்களுக்கு நீங்கள் கற்பிக்கிறபடி எந்தவித வணிக நோக்கோ அல்லது வலைப்பதிவுகளை/பதிவர்களை விசுவாசிகளாகக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை.//

முதலில் நான் புரிந்து கொள்ள மறுக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டுகிறேன். எனக்குப் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கிறது என்பது தான் உண்மை.

புரிந்து கொள்ள மறுக்கிற யாரும் ஏன் தமிழ்மண நிர்வாக நண்பர்களுடன் ஓராண்டாக மடல் தொடர்பில் விமர்சனங்களைத் தெரிவித்து வந்திருக்க வேண்டும்? எல்லா மடல்களுக்கும் தங்களால் பதில் அளிக்க இயலாது என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், மேம்பட்ட புரிதலை வேண்டி பொதுக்களத்தில் கருத்தை வைக்கும்போது மட்டும் ஏன் அதை வெறுப்புணர்வு என்று கொள்கிறீர்கள்? தனி மடலில் தர இயலாத விளக்கங்களைத் தற்போது பொதுக்களத்தில் தந்திருக்கிறீர்கள். அந்த வகையில் என்னுடைய புரிதல் மேம்பட்டு அதன் காரணமாக என் விமர்சனங்களை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தாலும் அதற்கு நான் தயங்கவில்லை.

விருதுகளை விமர்சித்தால் தனக்குவிருது கிடைக்காதென்றும் தன்னை நடுவாரக்கவில்லை என்றுமே புரிந்து கொள்ளத்தக்க அளவுக்கு maturity உள்ள சராசரி மனிதர்களைப் போல் தமிழ்மண நண்பர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே பொதுக் களத்தில் வைக்கிறேன். அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றித் தருவீர்கள் என்றும் எதிர்ப்பார்க்கிறேன்.

ஆனால், காசி போன்றவர்கள் கூட இடுகையில் சொல்லப்பட்ட கருத்து குறித்து எதுவும் கூறாமல் "இன்னாருடைய கருத்தைப் போய் மறுமொழியில் வெளியிடுகிறாயே" என்று சொல்வது அலுப்பாக இருக்கிறது.

முதலில் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். பதிவுலகம் சார்ந்த என்னுடைய ஈடுபாடு முழுக்க முழுக்க நுட்பம் சார்ந்தது. வெளியாகிற வலைப்பதிவுகள் ஒன்று விடாமல் படிப்பதோ பின்னூட்டம் இடுவதோ யார் யார் எங்கு எப்படி அரசியல் செய்தார்கள், செய்கிறார்கள் என்பதும் உண்மையிலேயே தெரியாது. நேரடியாக முகத்துக்கு முகம் இரண்டு, மூன்று வலைப்பதிவர்களைத் தான் பார்த்திருக்கிறேன். எந்தக் குழு, கூடாதரத்துடனுடம் கூகுள் உரையாடல் தொடர்புகள் கூட கிடையாது.

இணைய வரலாறு என்று சுட்டி கொடுத்து பெயரிலி எழுதியது போல் இணைய அரசியல் என்று விலாவரியாக த் தெளிவாக அப்பட்டமாக யாராவது எழுதினால் புண்ணியமாகப் போகும். தமிழிணையத்தில் அனுபவம் உள்ள உங்களைப் போன்றவர்கள் நிச்சயம் இதைச் செய்யலாம். எந்தச் சமூக நலன்களுக்காக நீங்கள் உழைக்கிறீர்களோ அவற்றில் 99.99% வீதம் எனக்கும் உடன்பாடு உண்டு. வழிமுறைகள், அணுகுமுறைகள் மட்டிலுமே மாறுபடுகிறேன். ஒரு வேளை இந்த அணுகுமுறைகள் எதிர்ப்பார்க்கும் நோக்கிற்கு என்னை இட்டுச்செல்லாது என்று நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருந்தால் அதை தயவு செய்து தெளிவாக எடுத்துரையுங்கள். என்னைப் போலும் செயல்படக்கூடிய இன்னும் பல இளைஞர்கள் அறியாமல் அரசியலில் சிக்கி உழைப்பை வீண்டிப்பதால் யாருக்கும் பயன் இல்லை.

தமிழ்மணத்துக்கும் அதன் நோக்கங்களுக்கும் எதிராகச் செயல்படக்கூடியவர்கள் என்று நீங்கள் வைத்திருக்கக்கூடிய பட்டயலில் இருப்போர் போல் முழு நேரமும் பதிவுலகில் இணைய உலகில் கூடாரமிட்டு ஆள் சேர்ப்பவன் நான் அல்ல. wikipedia, wordpress, wiktionary, ubuntu, free tamil computing, tamil99 என்று நான் சார்ந்திருக்கும் எந்த விதத்திலும் தனியொருவரை முன்னிறுத்தாத முயற்சிகளுக்கே ஒரு நாளைக்கு 48 மணி நேரம் வேண்டி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

//கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கையுடைய பல பதிவர்கள் உங்களுடைய இடுகைகளுக்கு மிகுந்த வரவேற்பளிக்கத் தவறிவிட்டதையும் கொஞ்சம் நீங்கள் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு அதற்கான காரணம் புரியும்.//

அமைதியாக இருப்பவர்கள் உங்களுக்கு நன்றிக்கடன் காட்டுகிறார்கள் என்று நிச்சயம் நான் கொச்சைப்படுத்த மாட்டேன். அதே வேளை, தமிழ்மணத்தின் மீது இல்லாத அபாண்டத்தை எவரும் சுமத்தும் போது தமிழ்ப் பதிவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக நான் அறியவில்லை. தமிழ்மண நிர்வாகிகளும் அவர்களுக்கு மிகுந்த நெருக்கம் கொண்டோரும் தவிர வேறு யாரும் ஏன் என்னைக் கண்டித்தும் கூட மறுமொழியும் போட வில்லை என்று கவனிக்க வேண்டும்? நான் சொல்லும் எல்லாம் 100% வீதம் சரி என்று முரட்டுப் பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆனால், ஒரு வீதமாவது உண்மையும் நியாயமும் இருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.

அதையும் தாண்டி நான் சொல்வது சரியா தவறா அடுத்தவர் ஏற்பரா மாட்டார்களா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் முதலில் நான் சொல்ல விரும்புவதைச் சொல்லும் துணிவைக் கற்றுக் கொள்கிறேனே? இது கூட இல்லாமல் பிறகு என்ன கட்டற்ற இணையம்?

//தமிழ் மணத்தையும், கூகுள் நிறுவனத்தையும் நொடிக்கு நூறு முறை ஒப்பிட்டுப் பேசுவதை நினைத்தால் இந்த இலட்சிய இரவி எந்த உலகத்தில் இருக்கிறார் என்றுதான் சிரிக்கத் தோன்றுகிறது.//

கூகுளோடு நுட்பத்திறத்தில் தமிழ்மணத்தால் போட்டியிட முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். கூகுள் போன்ற நிறுவனங்கள் வணிக நலனை முன்னிட்டுச் நுட்பத்தில் போட்டி இடுகின்றன. ஆனால், தமிழ்ச் சூழலில் உள்ள நிறுவனங்கள் அரசியல் நலனை முன்னிட்டு (அது நல்ல அரசியலாகவே இருந்தாலும்) நுட்பத்தில் இரண்டாம் இடத்திலேயே வைத்திக்கின்றன என்பது தான் நுட்ப ஆர்வலன் என்ற முறையில் என் ஆதங்கள்.

//உதாரணமாக, தமிழ் வெளி ஆரம்பிக்கப் பட்ட பொழுது அதற்குப் பின்புலமாக இருந்த நண்பரைத் தொலை பேசியில் அழைத்து எத்தனை முறைகள் என்ன பேசியிருக்கிறேன் என்று அந்த நண்பரையே கேட்டுப் பாருங்கள்.//

தமிழ்வெளி யார் நடத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. தமிழ்மண OPMLஐ பொதுவில் வைப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகப் போய் விடுகிறது என்று நீங்கள் சொல்வதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும், தமிழ்வெளி போன்று உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கக் கூடிய திரட்டிகளுடனாவது தனிப்பட்ட முறையில் உங்கள் OPMLஐப் பகிர்ந்து கொள்ளுங்களேன் என்பது தான் என் எதிர்ப்பார்ப்பு. தமிழ்மணத்தில் பதிந்துள்ள 2000+ பதிவுகளும் திரும்ப அங்கு போய் வேண்டி பதிய வேண்டும் என்பது முட்டாள்த்தனமாக இருக்கிறது.தமிழ்மணத்தில் இருக்கும் 2000+ பதிவுகளும் நீங்கள் காக்க விரும்பும் சமூக நலனை முன்னிட்டவை தானே? அதே பதிவுகளுக்கு இன்னொரு திரட்டியில் கிடைக்ககூடிய கூடுதல் காட்சிப்படுத்தல் நேரத்துக்கு ஏன் தங்களால் உதவ இயலவில்லை என்பது எனக்குப் பிடித்த wordpress மீது ஆணையாக உண்மையிலயே புரியலிங்க. இல்லை, தமிழ்மணம் தவிர வேறு யாரும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவார்கள் என்று உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் அதையாவது வெளிப்படையாகத் தெரிவியுங்கள்.

//"எங்கள் குறைகளை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி, பொன்னான நேரத்தை வீணாக்காமல் புதிய திரட்டிகளை உருவாக்குங்கள்" என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.//

தமிழ்மணம் தன்னுடைய கருவிப்பட்டைக்குப் பயன்படுத்தும் நுட்பத்தை மாற்றிக் கொள்ளும் வரை இன்னும் 100 புதிய திரட்டிகள் வந்தும் ஏன் பயன் இல்லாமல் போகும் என்பதை என்னுடைய அடுத்த இடுகையில் எழுதுகிறேன். இது ஏற்கனவே தனிமடலிலும் பொதுவிலும் பல இடங்களில் நான் குறிப்பிட்டு வருவது தான்.

புதுத் திரட்டி உருவாக்குங்கள் நீங்கள் வேண்டுகோள் விடுக்காவிட்டாலும், புதிதாகத் திரட்டி உருவாக்குபவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறேன். தங்கள் கனிவுக்கு நன்றி.

மற்றது, பட்டறை குறித்த உங்கள் தன்னிலை விளக்கங்களைப் பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்த இடுகையின் மறுமொழிகள் பட்டறை குறித்த விளக்கமாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் சொல்ல வந்த கருத்துக்குக் களமாகப் பட்டறை இருந்ததால் அதை இங்கு தர வேண்டியதானது. இதே உரையாடல் வேறு சூழலிலும் நடக்கக்கூடியதே. அப்படியே பட்டறை குறித்து தொடர்ந்து யாரும் உரையாட விரும்பினால் அதற்கு இன்னொரு இடுகையில் களம் அமைத்துத் தருகிறேன். அது வரை பொறுங்கள் என்றே வேண்டுகிறேன். இல்லை, பட்டறை வலைப்பதிவிலும் உரையாடலாம்.

பூங்கா, தமிழ்மணம் வேலைகளே இறுக்கியதால் நேரடிப் பங்களிப்பு ஏதும் தர இயலாத நிலையில் தமிழ்மணம் இருந்ததைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், பட்டறையில் ஈடுபட்ட நண்பர்களுக்கும் பிற பதிவுலக, இணைய உலக ஈடுபாடுகள் இல்லாமல் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்மணமாவது பட்டறை குறித்த ஒரு மின்னும் அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி, தேன்கூடு ஆகியவை நாங்கள் எழுதிக்கேட்ட பிறகும் சிறு அறிவிப்பைக் கூடத் தளத்தில் வெளியிடவில்லை என்பதே என்னுடைய பட்டறை ஏற்பாட்டுத் தொடக்க கால விமர்சனமாக இருந்தது. பின்னர், இத்திரட்டிகளின் நிர்வாகங்கள் தங்களால் இயன்ற ஏதோ ஒரு வகையில் பட்டறையில் ஈடுபட முன்வந்தன என்பதையும் குறிப்பிடுவதில் தயக்கமில்லை.

//ஆனந்த விகடன் போன்ற பெரும் வணிக ஊடக நிறுவனங்கள் வலைப் பதிவூடகத்தையே கபலீசுவரம் செய்து கொண்டால் நீங்களெல்லாம் எப்படி போராடப் போகிறீர்கள் என்று பார்க்கலாம்.//

அப்படி ஒரு நிலை வந்தாலே அதை எப்படி அணுகலாம் என்று புரியவரும். ஆனந்தவிகடனும் சரி வேறு எந்த நிறுவனமும் சரி நுட்ப ரீதியாகவேனும் தமிழ் வலைப்பதிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடாது, கட்டுப்படுத்த விடக்கூடாது என்பதே என் எண்ணம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சுடலைமாடன்,

//இப்படிச் சொல்கிற இரவிசங்கர்தான் நேற்று இப்படியும் எழுதினார் – //

பழைய மறுமொழிகளைத் தேடிப்பிடித்து சுட்டி கொடுத்து ஆதாரப்பூர்வமாக எழுதும் தமிழ்ப்பதிவர்களின் திறம் புல்லரிக்க வைக்கிறது. தாங்கள் எல்லாம் தமிழ் விக்கிபீடியாவில் வந்து இது போல் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் கட்டுரை எழுதினால் மிகவும் உதவியாக இருக்கும்.

என் கருத்தில் என்ன முரண் கண்டீர்கள்? நீங்கள் விளக்கம் கொடுத்து நீக்குங்கள், கொடுக்காமல் நீக்குங்கள். எனக்குக் கவலையில்லை. நான் பார்க்க விரும்பும் பதிவுகள் உங்கள் திரட்டியில் வரும் வரை அதை நாடுவேன். அவ்வளவு தான்.

நீங்கள் விளக்கம் கொடுத்து நீக்குவதால் மட்டுமே உங்களை என்னால் ஆதரிக்க இயலாது.

ஒரு பதிவையும் ஒரு இடுகையையும் நீக்காமல் தமிழில் எழுதப்படும் எல்லா வலைப்பதிவையும் திரட்டுவோம் என்ற கொள்கையுடன் ஏதாவது blog engine வந்தால் நுட்ப அடிப்படையில் என் தனிப்பட்ட ஆதரவு அதற்கு மட்டுமே. அதே வேளை, அந்தக் காரணதுக்காக அதற்கு இலவசமாகத் தட்டி வைக்கவோ, அதை ஆதரிக்கிறேன் என்று என் பதிவில் பட்டை போடவோ முற்பட மாட்டேன்.

//"ஐ.ஐ.டி.யில் உள்ளவர்கள் அறிவாளிகள், அதனால் அவர்களையே மற்ற கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் கல்லூரிகளே நடக்க வேண்டாம்" என்கிற மேட்டுக்குடி மொன்னைத்தனத்துக்கும், இதற்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.//

நானோ பிறரோ ஏதும் உவமை கூறினால், அதை சகட்டு மேனிக்கு நீங்களும் உங்கள் நண்பர்கள் கிண்டல் செய்வதால் எனக்கு ஒரே தாழ்வு மனப்பான்மையாக இருக்கிறது :) அதனால் உங்கள் உவமை அருமை என்று கூறிக் கொள்கிறேன்.


காசி ஆறுமுகம் -

//இந்த ரவிசங்கர் நீங்களா, வேறு யாரோவா?//

அது நான் தான். நான் இன்னும் வளர வேண்டும் என்ற உங்கள் தாயுள்ளத்தைக் கண்டு நெகிழ்கிறேன்.

4 ஆண்டுகள் பழம் தின்று கொட்டை போட்ட பிறகே, "நிகழ் உலகில் உள்ள அளவுக்கு இணைய உலகிலும் பாசாங்குக்குக் குறைவில்லை" என்று நீங்களோ யாரோ எங்கோ குறிப்பிடப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில் உங்கள் பார்வையில் குழந்தையான நான் எல்லாம் எம்மாத்திரம்?

நானும் வளர வளர அனுபவப்பட பட உங்களைப் போல் உண்மையைக் கண்டு கொள்ளலாம் அல்லவா?

அந்த மறுமொழியை இட்டபோது தமிழ்மணம் என்பது காசி என்ற அணுகக்கூடிய தனி மனிதராக இருந்தார். இப்போது தமிழ்மணம் என்பது அணுகிப் பதில் பெற இயலாத நிறுவனமாகி விட்டிருக்கிறது.

இப்போதும் மத, சாதி, வெறுப்புணர்வுப் பதிவுகளை தமிழ்மணம் நீக்குவதை ஆதரிக்கிறேன். தமிழ்மணம் கருத்துச் சுதந்திரத்தைப் பேணவோ அது அதைப் பேண வேண்டும் என்றோ நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், கருத்துச் சுதந்திரத்தைப் பேணாமல் அப்படி யாரும் பேணுவதாக அறிவித்துக் கொண்டால் அதை எப்படி கேள்விக்குட்படுத்தாமல் இருப்பது?

கருத்துச் சுதந்திரம் என்பது நமக்கு ஒவ்வாத கருத்துக்களுக்கும், நம் நலன்களுக்கு உடன்படாத நடைமுறைகளுக்கும் சேர்த்து இடம் கொடுப்பது தானே? ஏதோ ஒரு இடுகையை, பதிவை என்ன காரணத்துக்காக ஏற்க மறுத்தாலும் அது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதே. அது என்ன காரணத்துக்காக ஏற்க மறுக்கப்பட்டது என்பது இரண்டாம் பட்சமே.

வேர்ட்ப்ரெஸ் தளத்தைச் சீனாவில் காட்ட வேண்டும் என்றால் சில பதிவுகளைத் தணிக்கை செய்யச் சொல்லி சீனா கேட்டது. அவ்வளவு பெரிய சந்தையே போனாலும் பரவாயில்லை என்று வேர்ட்ப்ரெஸ் அதற்கு உடன்பட மறுத்தது. அது நடுநிலையா? தங்கள் நிறுவன நலனுக்கு அவதூறு என்பதால் ஒரு பதிவை திரட்ட மறுப்பது நடுநிலையா? அவதூறு எழுதுகிற பதிவர்கள் வருங்காலத்தில் அதற்குத் தொடர்பற்ற நல்ல இடுகைகளைக் கூட எழுதலாமே? அவற்றை வாசகர்கள் கண்ணில் இருந்து இருட்டடிப்பு செய்வது முறையா? இணையத்திலும் சரி, வெளியிலும் சரி எந்த நிறுவனமும் நடுநிலையாக இயங்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், அப்படி இல்லாத நிறுவனங்கள் தாங்கள் அப்படி செயல்படுவதாக கூற முற்படும்போது "நடுநிலை" என்றால் என்ன என்று விவாதிப்பது தவிர்க்க முடியாதது.

தானியங்கித் திரட்டிகளில் தமிழ்மணத்தை மட்டுமே நான் பயன்படுத்துக்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். ஆனால், தமிழ்மணம் தரும் நுட்ப வசதிகள் தான் முழுமதற் காரணம். அது கருத்துச் சுதந்திரத்தைப் பேணுவதாக நான் நம்புவதால் அல்ல. ஒரு இணையத்தளத்தை நான் பயன்படுத்துகிறேனா இல்லையா என்பதை அதன் சேவைத் திறம், வடிவமைப்பு ஆகியவை தான் தீர்மானிக்க இயலும். அதை நடத்துபவர்களின் அரசியல் அல்ல. அதே வேளை தனிப்பட்ட நட்புகள் என்று வருகையில் உங்களின் அரசியலைத் தான் கவனிப்பேனே தவிர நீங்கள் வழங்கும் சேவையின் திறத்தை அல்ல. நட்பு வேறு, சமூக நலன் வேறு, அரசியல் வேறு, நுட்பம் வேறு. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு நல்ல நோக்கத்தை முன்னெடுக்கும் நண்பர்கள் திரட்டி என்பதற்காக அந்தத் திரட்டியின் நுட்பக் குறைபாடுகளையும் அந்தத் திரட்டியால் மாறி வரும் வலைப்பதிவு இயங்கியலையும் கேள்விக்குட்படுத்தாமல் இருக்க முடியாது.

இரா.சுகுமாரன் - அல்வா மாதிரி நான் சொல்ல வருகிற கருத்துக்களை முன்வைக்கிற மாதிரி சொற்றொடர்களை தந்து செல்வதற்கு நன்றி.

//எந்த திரட்டியும் தங்கள் வலைப்பதிவில் என்ன எழுத வேண்டும் என்று விதிமுறை விதித்தாக தெரியவில்லை.

ஆனால், என்ன எழுதக்கூடாது என்று விதித்திருக்கிறார்கள். //

பதிவர் எதை எழுதக்கூடாது என்று சொல்வதற்கு திரட்டி யார்? எதை எழுதலாம் என்று இருப்பது சுதந்திரம் அல்ல. எதையும் எழுதலாம் என்று இருப்பது தான் சுதந்திரம். எதை எழுதக்கூடாது என்று கட்டுப்படுத்தப்படுவது தான் அதிகாரமாக்கலின் முதற்படி. சீனாவில் எதை எழுதக்கூடாது என்று தான் சீன அரசு கட்டுப்படுத்துக்கிறது. எதை எழுதலாம் என்று பட்டியலிடுவதில்லை.

//சரியான கருத்து திணிப்பு இது நான் சொல்வதை இந்த திரட்டிகள் எல்லாம் கேட்க வேண்டும் என்று கருதுகிற அதிகார மனோபாவம் உங்களிடம் வளர்ந்துள்ளதை உங்கள் நடவடிக்கைகள் காட்டுகின்றன //

நான் விரும்பிதைச் செய்யும் அதிகாரம் எதையும் நான் பயன்படுத்த மறந்திருந்தால் தயவு செய்து நினைவூட்டுங்கள் நண்பரே. இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் எழுதி கை வலிக்கிறது :)

மு. சுந்தரமூர்த்தி said...

//தமிழ்மணம் என்ன தமிழ் வலைப்பதிவுகளுக்கு authorityஆ? இடுகையில் நான் எதிர்ப்பார்த்த மாதிரியே எல்லாரும் என்னைத் தாளித்து எடுத்து விட்டார்கள் :) //

//நேற்று தான் காழ்ப்புணர்வு, வெறுப்புணர்வு என்று ஒருவர் விடாமல் தமிழ்மண நிர்வாகிகள் கருத்து சொன்னீர்கள்.//

உங்களோடு விவாதிப்பதை இப்படி சிறுபிள்ளைத்தனமான கழிவிரக்கம் உணர்ச்சியைக் கைவிடுங்கள்.(விடமுடியவில்லையென்றால் கூடவே தாளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு சிலர் ஒத்தடம் கொடுக்க முன் வருகிறார்கள் என்றாவது உணருங்கள்).

தொழில்நுட்ப விஷங்களைத் தவிர (அதில் எனக்கு பயிற்சி இல்லையென்பதால்), உங்கள் பிற வாதங்கள் ஒவ்வொன்றையும், உங்களிடமிருந்தே வெளிப்படும் முரண்பாடுகளுகளையும் பிரித்துபோட்டு எதிர்வாதம் செய்யமுடியுமென்றாலும், அதை நீங்கள் உங்களைத் தாளிப்பதாக எடுத்துக்கொள்ளும் சாத்தியம் அதிகமாக இருப்பதால் ஜகா வாங்கிக்கொள்கிறேன்.

உங்கள் பீடம் விரைவில் உயர்ந்தோங்கவும், உங்கள் உபதேசங்களுக்கு உலகம் செவிசாய்க்கவும் வாழ்த்துக்கள்

இரா.சுகுமாரன் said...

ரவிசங்கர்

//பதிவர் எதை எழுதக்கூடாது என்று சொல்வதற்கு திரட்டி யார்? எதை எழுதலாம் என்று இருப்பது சுதந்திரம் அல்ல//

எந்த திரட்டியும் யாரையும் எதுவும் எழுதக்கூடாது என்று கட்டளை விதிக்கவில்லை. ஆனால், அப்படி எழுதினால் அவர்கள் தளத்தில் வெளியிட இயலாது என்று தான் கூறுகிறார்கள்.

ஆங்கிலப்பதிவர்கள் போல கட்டற்று எழுதவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இதுமாதிரி விதிமுறைகளை விதிக்கும் வலைத் திரட்டிகளில் நீங்கள் இணைக்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சுந்திரமாக எழுத எவ்வித கட்டுப்பாடும் இல்லை தானே.

நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டு நான் மதுரைக்குத் தான் செல்ல வேண்டும்.நீங்கள் மதுரைக்கு பேருந்தை திருப்புங்கள், இது என்னுடைய சுதந்திரம் என்று கூச்சல் போடுவது போல் உள்ளது. எனவே, நீங்கள் இறங்கி மதுரை செல்லும் பேருந்தில் ஏறுங்கள்.

பிடிக்க வில்லையா? ஆங்கிலப்பதிவு போல இனி தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்பதிவுகள் உள்ளிட்ட எதிலும் இணைக்க வேண்டாம். தனி பேருந்தில் ஏறி நீங்கள் மட்டும் மதுரை செல்லுங்கள். நாங்கள் இருக்கிற பேருந்தை பிடித்து பயணம் செய்யவே விரும்புகிறோம்.

நீங்கள் சொல்கிற பல விசயங்களில் எனக்கு உடன்பாடில்லை.

//வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும், தமிழ்வெளி போன்று உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கக் கூடிய திரட்டிகளுடனாவது தனிப்பட்ட முறையில் உங்கள் OPMLஐப் பகிர்ந்து கொள்ளுங்களேன்//

என்பதிவை என்னைக் கேட்காமல் தமிழ்மணம், தமிழ்வெளிக்கு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்கு நீங்கள் யார்?.

நான் எனது பதிவை எந்த தளத்தில் இணைக்கவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவன் நான். ஆனால் நீங்கள் ஏன் அதனை தீர்மானிக்கிறீர்கள். தமிழ்மணமோ அல்லது வேறு எந்த தளமோ ஏன் எனது விவரங்களை மற்றவர்களுக்கு தரவேண்டும்.

தரவேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கு உரிமை அந்தந்த பதிவர்களுக்கே உரியது.
ஆனால், அத்தனை உரிமையையும் நீங்கள் கையிலெடுக்கும் உரிமையை யார் உங்களுக்கு வழங்கியது. நீங்கள் என்ன தமிழ்ப் பதிவர்களின் ஏகபோக பிரதிநிதியா? விளங்கவில்லை.

Kasi Arumugam said...

//ஆனால், காசி போன்றவர்கள் கூட இடுகையில் சொல்லப்பட்ட கருத்து குறித்து எதுவும் கூறாமல் "இன்னாருடைய கருத்தைப் போய் மறுமொழியில் வெளியிடுகிறாயே" என்று சொல்வது அலுப்பாக இருக்கிறது.//

வயசுப்பிள்ளைங்க அதுக்குள்ள அலுத்துட்டா எப்படி? :-)) இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவு!

உங்கள் சமீபத்திய இடுகைகள் அவற்றுக்கான உங்கள் மறுமொழிகள் இவற்றில் உள்ள சுயமுரண்களை (self-conட்radictionsங்கோ, எல்லாம் 4 வருடமா பழம் தின்னு கொட்டை போட்டதில் கத்துக்கிட்ட வர்த்தைகள், இப்ப சிற்றிதழ் இலக்கியவியாதிகளைப் படிச்சு நானும் வளர்கிறேனே ரவீ:-)) எண்ணிச் சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கலாம். இதில் என்னத்த //சொல்லப்பட்ட கருத்து குறித்து எதுவும் கூறாமல் // போவது?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

காசி, சுந்தரமூர்த்தி - தங்கள் அறிவுரைகளுக்கு நன்றி.

இரா.சுகுமாரன் - தயவுசெய்து, இந்த இடுகையின் மறுமொழியில் முத்துக்குமரனுக்குத் தெரிவித்துள்ளதைப் படித்துப் பாருங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் எத்தனை பேர் உங்கள் உள்ளடக்கத்தை அணுகுகிறார்கள் என்பதையும் அது தான் இணையம் இயங்கும் அடிப்படை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

சென்னைக்குச் செல்லும் பேருந்தை மட்டுமே வைத்திருக்கும் நினுவனங்கள் தாங்கள் எல்லா ஊருக்கும் பேருந்து இயக்குவதாக நிறுவ முயல்வதே இங்கு பிரச்சினை.

தமிழ்மணம் தன் OPML மூலம் வெளியிட்டால் அதில் உங்கள் பதிவின் முகவரி தவிர வேறு ஒரு தனிப்பட்ட விவரமும் இருக்காது. உங்கள் பதிவின் முகவரி அவ்வளவு பெரிய ரகசியமா?

OPML வழங்குவதை ஏதோ நான் கண்டுபிடித்த குற்றம் போல் நினைக்காதீர்கள். தமிழ்மணம் ஏற்கனவே தன் OPMLஐத் தேன்கூட்டுக்கு வழங்கி இருக்கிறது. அப்போது தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட ஒவ்வொரு பதிவரின் அனுமதி பெற்று செய்தார்களா என்ற விவரத்தை நீங்களே சொன்னால் நலம்.

செல்வநாயகி said...

ரவிசங்கர்,

//////தமிழ்மணம் என்ன தமிழ் வலைப்பதிவுகளுக்கு authorityஆ? இடுகையில் நான் எதிர்ப்பார்த்த மாதிரியே எல்லாரும் என்னைத் தாளித்து எடுத்து விட்டார்கள் :)////

///தமிழ்மண நிர்வாகிகளும் அவர்களுக்கு மிகுந்த நெருக்கம் கொண்டோரும் தவிர வேறு யாரும் ஏன் என்னைக் கண்டித்தும் கூட மறுமொழியும் போட வில்லை என்று கவனிக்க வேண்டும்? //////

அந்த இடுகையில் நானும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதுவெல்லாம்கூட உங்களின் தாளிப்புப் பட்டியலிலே சேர்க்கப்பட்டிருக்கும் போல:))

எங்கே யாரை எப்படித் தாளிக்கலாம் என்றெல்லாம் அலைந்துகொண்டிருக்க நேரம் மட்டுமல்ல ஆர்வமும் இல்லை:)) கிடைக்கிற நேரத்தில் அங்கங்கு வாசிப்பதில் ஆர்வம் உண்டு.
அது விசயங்களைச் சொல்கிற பதிவுகள் மட்டுமல்ல, விசங்களைச் சொல்கிற பதிவுகளானாலும்.

சாகரன் மறைவின்போது பலரும் துக்கங்களை மட்டுமே பகிர்ந்துகொண்டிருக்க நீங்கள் வித்தியாசமாக துக்கங்களைக் கைவிட்டு யார் எப்படிச் செயலாற்றலாம் இணையத் தமிழுக்கு என்று புதியதொரு கோணத்தில் எழுதியது துவக்கம் உங்கள் பதிவுகள் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதென்பதாலும், ஒரு உரையாடல், கருத்துப் பரிமாற்றங்களுக்குக்கூடச் சாத்தியமில்லாத தன்மைகளைக் கொண்டிருந்தாலும் தங்களை ஓர் அறிவுப்பேரொளியாக அடையாளம் காட்டிக்கொண்டு சுற்றுகிற நீதிமான்களைப் போலன்றி, உங்களிடம் ஒரு கருத்தைப் பகிர்ந்துகொள்வதில் சிரமங்கள் இல்லையென்பதாலுமே எனக்குத் தோன்றியதை எழுதினேன் அங்கு.

அதற்கு நீங்கள் எழுதியிருக்கும் நீண்ட விளக்கங்களுக்குக்கூட மாற்றாகச் சொல்ல எனக்குக் கருத்துக்கள் இருந்தாலும், நீங்கள் வரிசையாக இடுகைகள் எழுதிப் போய்க்கொண்டிருக்கும் வேகத்துக்குக் கூடவே தொடர்ந்து வரும் நேரவசதிகள் இல்லையென்பதால் தவிர்க்கிறேன்.

ஆனால் உங்களின் "நெருக்கமானவர்கள், சார்புடையவர்கள்" என்கிற ரீதியிலான இந்த அடைமொழிகள் எல்லாம் ஒருக்கால் நேரவாய்ப்புகள் அமையுமென்றாலும் தொடரமுடியாத சங்கடத்தையே ஏற்படுத்துகிறது.

"நான் தமிழ்மணத்துக்கு எதிரியல்ல" என்று சொல்லிக்கொண்டு உங்களின் பார்வைகளை வைக்கமுடிகிற உங்களுக்கு அதேபோல் கருத்துக்களை வைக்கும் தமிழ்மண நிர்வாகிகள் அல்லாத மற்ற பதிவர்களை மட்டும் அவர்களின் கருத்துக்கள் உங்களின் பார்வைக்கு மாறுபட்ட பார்வையுடையது என்பதால் தமிழ்மணத்துக்கு நெருக்கமானவர்கள் என்று பார்க்கும் மனநிலை வருவது எப்படியோ?

கருத்தியல்ரீதியாக யாருக்கும் யாரோடும் உடன்பாடு இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் "நான் ஒரு திரட்டிக்கு எதிரியல்ல, பலவருடமாக ஒரு பதிவராகச், சேவை பெறுபவனாகப் பார்த்துவருவதைக் கொண்டே என் விமர்சனங்களை வைக்கிறேன்" என்று நீங்கள் சொல்வதைப் போலவே, உங்களில் இருந்து மாறுபட்டுப் பேசும் பதிவர்களுக்கும்கூட
தனிப்பட்ட நட்புக்கள் காரணமின்றி இங்கே ஒரு பதிவராய் அவதானித்த விசயங்களே
அவர்களின் கருத்துக்களுக்கும் அடிப்படையாய் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டால் மகிழ்ச்சி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

செல்வநாயகி - தமிழ்மணத்துக்கு நெருக்கமானவர்கள், சார்புடையவர்கள் என்று எழுதியது உங்களைப் போன்றோரைக் குறித்து அல்ல. அந்த சொல்லாடல் வருத்தம் தந்திருந்தால் மன்னிக்கவும்.