Sunday, December 23, 2007

பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி தேவையா?

பதிவரா திரட்டியா? இடுகையில் முத்துகுமரன், இரா.சுகுமாரன் ஆகிய இருவரும் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தனர். அது:

"ஒரு பதிவரின் அனுமதி இன்றி எப்படி அப்பதிவரின் பதிவைத் திரட்டலாம். அது அவரின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா"?

ஒரு பதிவரின் பதிவைத் திரட்ட அவரின் அனுமதி தேவையில்லை என்பது எனது ஆணித்தரமான கருத்து.

ஏன் தேவையில்லை என்ற நான் விளக்குவதற்கு முன் பதிவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும்.


"ஏற்கனவே உங்கள் பதிவுகள் உங்கள் அனுமதி இன்றி பல இடங்களில் திரட்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன"


தமிழ்மணம் கேளிர் திரட்டி, தேன்கூடு ஜி திரட்டி, தமிழூற்று, சங்கமம், Technorati, Icerocket என்று உள்ளூர் தளங்கள் தொடங்கி உலகத் தளங்கள் வரைக்கும் இவற்றில் அடக்கம். இவை பிரபலமான சேவைகளாக இல்லாததால் நாம் அலட்டிக் கொள்வதில்லை.

"ஆஆ..இது எனக்குத் தெரியாதே ! என் சுதந்திரத்தைக் காக்க என்ன வழி" என்கிறீர்களா?

உங்கள் பதிவை யார் படிக்கிறார்கள் என்பதை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் பதிவுக்கோ குறிப்பிட்ட இடுகைகளுக்கோ கடவுச்சொல் வைத்து மறைக்கலாம். ப்ளாகரில் பதிவை மட்டுமே பூட்டலாம். வேர்ட்ப்ரெசில் இடுகைகளையே கூட பூட்டலாம். மறுமொழி இடும் வசதியைக் கூட குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தருமாறு பூட்டி வைக்கலாம். ஆனால், இப்படி கடவுச்சொல் இல்லாமல் தளத்தைத் திறந்து வைத்த அடுத்த நொடி உங்கள் தளத்தை யார் யார் படிக்கிறார்கள், யார் யார் எந்தெந்த வழிகளில் அணுகிறார்கள், எந்தெந்த தேடு பொறிகள் உங்கள் தளத்துக்கு வருகின்றன என்பதில் உங்களுக்குத் துளியளவு கட்டுப்பாடும் கிடையாது என்பது தான் உண்மை. வேண்டுமானால், ஓடை வசதியை முடக்கினால் திரட்டிகளால் அணுக முடியாது.

இது உங்கள் சுதந்திரத்தின் மீதான தலையீடு இல்லை. இணையம் இயங்குவதற்கே இது தான் அடிப்படை. சுதந்திரம் விரும்பும் பதிவர்கள் முதலில் வலைப்பதிவில் எழுதவே கூடாது. அப்படியே எழுதி தங்கள் நண்பர்கள் மட்டும் படிக்க விரும்புபவர்களுக்குக் கடவுச்சொல் வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு பிறகும் சுதந்திரம் குறித்துப் பேசுவதில் ஒன்றுமில்லை. உண்மையில், திரட்டிகள் பதிவர்களின் தளத்தைத் திரட்டுவதால் சுதந்திரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்றே விளங்கவில்லை. தளத்தைப் பொதுவில் வைக்கும்போதே அதற்கு எவ்வளவு கூடுதல் வாசகர்களைப் பெறலாம் என்பது தானே ஒவ்வொரு பதிவரின் எண்ணமும்? சூடான இடுகைகளைப் பார்ப்பதற்கும் மறுமொழி எண்ணிக்கை பார்ப்பதற்கும் இது தானே காரணம்? பிறகு அந்த கூடுதல் வாசகர்களைப் பெற்றுத் தர ஏன் ஒவ்வொரு திரட்டிக்கும் போய் தனி அனுமதி தர வேண்டும்?

உங்கள் பதிவைத் திரட்டலாம் என்று x திரட்டிக்கு அனுமதி கொடுக்கிறீர்கள். அதன் மூலம் சில வாசகர்கள் வருகிறார்கள். ஆனால், Y திரட்டிக்கும் கூடுதலாகவும் சேர்த்து அனுமதி கொடுப்பதால் எப்படி நமது சுதந்திரம் பாதிக்கப்படும்? ஒட்டுமொத்த தமிழ்த் திரட்டிகளுக்கும் நீங்கள் அனுமதி கொடுக்காவிட்டாலும் கூகுள் மூலம் உங்களை மக்கள் வந்தடைய முடியும். அப்போது எங்கே போகிறது சுதந்திரம்?

"x திரட்டியில் மட்டுமே இணைப்பேன், அதன் வாசகர்கள் மட்டுமே என் பதிவுக்கு வரலாம்" என்பது "கூகுள் வழியாக என் தளத்துக்கு மக்கள் வரலாம். ஆனால் யாஹூ வழியாக வரக்கூடாது" என்று சொல்வது போலத் தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

எந்தத் திரட்டியும் நீங்கள் எழுதியதில் உள்ளடக்கத்தை மாற்றியோ உங்கள் பெயரை இருட்டடிப்புச் செய்தோ காட்டப் போவதில்லை என்னும் போது எத்தனை இடங்களில் கூடுதல் காட்சிப்படுத்தல் கிடைக்கிறதோ அது உங்களுக்கு அத்தனை இலாபம் தானே? இலவசமாகக் கிடைக்கும் இதை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

ஒரு பதிவரின் பார்வையை விட்டு விலகி ஒரு பயனரின் பார்வையில் வாசகரின் பார்வையில் இதைப் பாருங்கள்.

கூகுளுக்குப் போய் "பில்லா" என்று தேடுகிறீர்கள் என்று வைப்போம். பில்லா குறித்த தேடல் முடிவுகளைக் காட்டாமல், "மன்னிக்கவும், பில்லா குறித்து எழுதிய யாரும் கூகுளில் இணைக்கச் சம்மதிக்கவில்லை. அதனால் உங்களுக்கு உதவ இயலாது" என்று பதில் வந்தால் மண்டை காயுமா இல்லையா?

அதே போல் தமிழ்ப்பதிவுகளைத் தேடிப்படிக்க தமிழ்த் திரட்டிகளைப் பயன்படுத்துகிறோம். தமிழ் வலைப்பதிவுகளில் எழுதப்படுகிற எல்லா நல்ல இடுகைகளையும் வாசிப்பது தான் நமது விருப்பமாக இருக்கும். வாசகர் ஒருவர் அப்படித் தேடும்போது "மன்னிக்கவும், அந்தப் பதிவர் இந்தத் திரட்டியில் இணைந்து அதைக் காட்ட விரும்பவில்லை என்பதால் உங்களுக்கு உதவ இயலாது" என்று பதில் வருவது மட்டும் ஏன் அபத்தமாகத் தோன்றவில்லை?

பதிவர் சுதந்திரம் என்பதற்கு முன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எழுதும் ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு தகவலைப் பதிகிறது. ஒவ்வொரு வாசகரும் ஏதோ ஒரு தகவலைத் தேடி இணையத்துக்கு வருகிறார். இப்படி இருக்கையில், நாம் எழுதும் இலவச உள்ளடக்கம் அவருக்கு எத்தனை வழிகளில் கிட்ட முடியுமோ அத்தனை வழிகளுக்கும் நாம் அனுமதி தருவது தானே நியாயம்? பதிவர் சுதந்திரம் என்ற தவறான புரிதலால் நாம் அனுமதி மறுக்கும்போது வாசகரின் தகவல் அறியும் உரிமை, வாய்ப்பு மட்டுப்படுத்தப்படுகிறதா இல்லையா?

சரி, உங்கள் பதிவைத் திரட்ட உங்கள் அனுமதி தேவையில்லை என்ற புரிதலுக்கு வருகிறீர்கள். உங்கள் அனுமதி இல்லாமல் திரட்டிகள் எப்படியெல்லாம் உங்களை அணுகலாம்?

1. தமிழில் எழுதப்படும் தகவல் எது என்பதைச் செயலிகள் மூலம் அறிந்து திரட்டுவது. கேளிர் திரட்டி, ஜி திரட்டி போன்றவை இப்படி இயங்குவதாகக் கொள்ளலாம்.

2. ஏற்கனவே உங்கள் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரட்டிகள் தங்கள் OPML பதிவர் பட்டியலை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வது. அது என்ன OPML என்கிறீர்களா? விலாவரியாக அறிய விரும்புபவர்கள் OPML விக்கிபீடியா கட்டுரையைப் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால், எடுத்துக்காட்டுக்கு நான் ஒரு வலைப்பதிவு முகவரியை இங்கு தருகிறேன் என்று கொள்வோம்.

http://valavu.blogspot.com

http://vimarsanam.wordpress.com

என்று எழுத மட்டும் செய்தால் உங்களால் அதை வாசிக்க மட்டுமே முடியும்.

அதையே

http://valavu.blogspot.com

http://vimarsanam.wordpress.com

என்று இணைப்புகளோடு தந்தால் உங்களால் அதைச் சொடுக்கி அந்தத் தளங்களுக்குச் செல்ல முடியும்.

இப்படி நீங்கள் நாளும் படிக்க விரும்பும் நூறு தளங்களின் இணைப்புகள் பட்டியலை இந்தப் பக்கத்தில் தருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் அந்த 100 இணைப்புகளைச் சொடுக்கிப் பார்ப்பது உங்களுக்கு இலகுவாக இருக்குமா? இல்லை தானே? இதையே இந்த 100 பதிவுகள் பட்டியலை OPML என்ற கோப்பு வடிவமாகத் தந்தால் அதை நீங்கள் கூகுள் ரீடர் போன்ற ஓடைத் திரட்டுத் தளங்களைக் கொண்டு இலகுவாகப் படிக்கலாம். ஆக, OPML என்பது என்ன? நீங்கள் படிக்க விரும்பும் பதிவுகளை இலகுவான பட்டியலாகத் தருவது. அவ்வளவு தான். இதை நீங்கள் தனிப்படப் பயன்படுத்துவது போலவே திரட்டிகளும் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தினால் தனிப்பட படிக்கப் போகிறீர்கள். திரட்டிகள் திரட்டினால் அவற்றைப் பொதுவில் காட்சிப்படுத்தப்போகின்றன. அவ்வளவு தான்.


ஒவ்வொரு தமிழ்த் திரட்டியும் தங்களுக்கு இடையேயான OPML பட்டியல்களைப் பகிர்வதால் உங்களுக்கு என்ன இலாபம்?


இன்னும் 100 திரட்டிகள் வந்தாலும் ஒவ்வொரு திரட்டியாகப் போய் நீங்கள் தனித்தனியாகத் திரும்பப் பதியத் தேவை இல்லை. ஒரு திரட்டியில் பதிந்தால் எல்லா திரட்டிகளிலும் காட்சிப்படுத்தப்படுவீர்கள்.

உங்கள் பெயர், மின்மடல் முகவரி, IP முகவரி உள்ளிட்ட தகவல்களை எந்தத் திரட்டிக்கும் தெரிவிக்கத் தேவை இல்லை என்பதால் உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

"இரு, இரு X திரட்டியிடம் தானே என் விவரங்களைத் தந்து பதிந்தேன். அது எப்படி என் அனுமதி இல்லாமல் இன்னொரு திரட்டிக்கு என் தகவல்களைத் தரலாம்" என்கிறீர்களா?

ஒரு முறை நினைவுகூருங்கள். OPMLல் என்ன தகவல் இருக்கும்? உங்கள் பதிவின் முகவரி மட்டுமே இருக்கும். உங்கள் பதிவின் முகவரி என்பது அவ்வளவு பெரிய இரகசியமா?

இன்னொன்று, இப்படி OPML தருவது புதிய நடைமுறை அல்ல. தேன்கூடு தொடங்கப்பட்ட போது தமிழ்மணம் தன் OPMLஐ இவ்வாறு பகிர்ந்து கொண்டது வரலாறு.

ஆனால், இத்தனைப் புரிதல்களையும் தாண்டி, "பதிவர்களின் அனுமதி பெற்றே திரட்டிகள் திரட்டுவது, பதிவர்கள் வேண்டியே திரட்டியில் சேர்ப்பது" என்ற எழுதப்படாத விதி தமிழ்ப்பதிவுலகில் நிலவுவதற்குக் காரணம் என்ன?

திரட்டி அரசியல் தான் காரணம்.

அது என்ன திரட்டி அரசியல் என்கிறீர்களா?

அடுத்தடுத்த இடுகைகளில் எழுதுகிறேனே?

அன்புடன்,
ரவி

4 comments:

வி. ஜெ. சந்திரன் said...

//கூகுளுக்குப் போய் "பில்லா" என்று தேடுகிறீர்கள் என்று வைப்போம். பில்லா குறித்த தேடல் முடிவுகளைக் காட்டாமல், "மன்னிக்கவும், பில்லா குறித்து எழுதிய யாரும் கூகுளில் இணைக்கச் சம்மதிக்கவில்லை. அதனால் உங்களுக்கு உதவ இயலாது" என்று பதில் வந்தால் மண்டை காயுமா இல்லையா?//

Search engine= aggrigator?

அப்படியா சொல்ல வருகிறீரள்.
தேடு பொறிகள் என்பவையும் திரட்டிகள் என்பவையும் ஒரே நோக்கத்தையா கொண்டவை??

வி. ஜெ. சந்திரன் said...

1. Add your blog to our listings?

Yes No

A Listed blog may be linked to from Blogger.com, such as the Blogger home page, Blogger Play, and Next Blog. If you select "No" your blog will not appear in these places, but it will still be available on the Internet. This blog will still be displayed on your profile unless you hide it. Edit displayed blogs

2. Let search engines find your blog?

Yes No

If you select "Yes" we will include your blog in Google Blog Search and ping Weblogs.com. If you select "No", everyone can still view your blog but search engines will be instructed not to crawl it.


கணினிகள், இணையம், இப்படியான விசயத்தில் அவற்றை பயன்படுத்துபவன் என்பதற்கு அப்பால்
வேறு அறிவு எனக்கு இல்லை.

நீங்கள் மேலே சொன்ன தேடுபொறிகள், மற்றும் புளொக்கரின் திரட்டி என்பவற்றில் எமது பதிவுகள் தோன்றுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். நான் ஆம் என்று அனுமதியளிக்கவிட்டால் எமது பதிவை கூகுள் தேடு பொறி மூலம் கூட தேட முடியாதென்பதாக தான் எனக்கு தெரிகிறது.

இதை பற்றி உங்கள் விளக்கம்??

ரவிசங்கர் said...

//Search engine= aggregator?

அப்படியா சொல்ல வருகிறீரள்.
தேடு பொறிகள் என்பவையும் திரட்டிகள் என்பவையும் ஒரே நோக்கத்தையா கொண்டவை??//

Technorati, Google blog search, Icerocket சேவைகள் ஆங்கிலம், தமிழ் என்று எல்லா மொழி வலைப்பதிவுகளையும் திரட்டுகின்றன. பதிவுகளைத் திரட்டுவதால் இவை திரட்டியே. பதிவுகளில் தேட உதவுவதால் இவை பதிவுகளுக்கான பிரத்யேக தேடு பொறியும் கூட.

1, 2 என்று எண்ணிட்டு நீங்கள் கேட்டிருக்கும் தெரிவுகள் போன்றவை wordpressலும் உண்டு. தங்கள் பதிவை யார் படிக்கிறார்கள், எதன் மூலம் படிக்கிறார்கள், எப்படி அணுகுகிறார்கள் என்று பதிவர்கள் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை இவை தருகின்றன. ஆனால் பெரும்பாலான பதிவர்கள் இவற்றுக்கு "ஆம்" என்றே தருகின்றனர். அப்படி தந்த பிறகும் குறிப்பிட்ட திரட்டிகள், தேடு பொறிகள் தான் தங்களை அணுக வேண்டும் என்று பெரிய அளவு கட்டுப்படுத்த முடியாது என்பதே நான் சொல்ல வந்தது. தனித்தளத்தில் பதிவு வைத்திருப்பவர்களுக்கு இன்னும் கூடுதலான தெரிவுகள் உண்டு.

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/