Tuesday, March 18, 2008

தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை

பல மென்பொருள்களையும் தமிழாக்கும் போது தமிழாக்கத்தின் தொனி குறித்த ஒரு கேள்வி தொடர்ந்து வருகிறது.

அதாவது, பல மென்பொருள்களில் cut, paste, search, close போன்ற கட்டளைகள் வருகிறது அல்லவா? இவற்றை வெட்டுக, ஒட்டுக, தேடுக, மூடுக என்று தமிழாக்கினால் உங்களுக்குப் பிடிக்குமா? அல்லது, வெட்டு, ஒட்டு, தேடு, மூடு என்று தமிழாக்கினால் பிடிக்குமா?

வெட்டு, ஒட்டு போன்ற கட்டளைகள் நாம் கணினிக்கு கொடுப்பவை என்றும், கணினி அஃறிணை தான் என்பதால் அதற்கு மரியாதை தரத் தேவை இல்லை என்றும், இப்படி எழுதுவது சுருக்கமாக இருக்கிறது என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

இன்னொரு தரப்பினரோ, இது போன்ற கட்டளைகள் கணினி தங்களைப் பார்த்துச் சொல்வதைப் போல் உணர்கிறார்கள். எனவே, மூடு, திற போன்ற கட்டளைகளை மரியாதை குறைவாக உணர்கிறார்கள். நானும் இந்த வகையைச் சேர்ந்தவன் தான்.

தற்போது மீடியாவிக்கி மென்பொருளை தமிழாக்கி வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்துக்கள் எங்கள் தமிழாக்கத்தைத் திறம்பட செய்ய உதவும்.

உங்கள் விருப்பத்தை வலப்பக்கம் உள்ள வாக்குப் பெட்டியில் தெரிவியுங்களேன்.

நன்றி

17 comments:

TBCD said...

இவை உள்ளது உள்ளபடி சொல்வது என்ன...
//cut, paste, search, close//
to cut use this option
to paste use this option...
அதை நாம் எப்படி சொல்ல முடியும்..
வெட்டுக, வெட்டு என்பதை விட வெட்ட (வெட்ட பயன் படுத்துங்கள்)
என்ற தொனி சிறப்பாக இருக்கும்...

அப்படிப் போட்டா,

வெட்ட, ஒட்ட, தேட, மூட

இதில் கொச்சை சொற்கள் இருப்பின் அதை நீக்கி, நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தலாம்..

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

tbcd, உங்களைப் போல நானும் யோசித்துப் பார்த்து இருக்கிறேன். ஆனால், வெட்ட, ஒட்ட என்பவை நிறைவுறா சொற்களாக இருப்பதால் தயக்கமாக இருக்கிறது.

**

நீங்கள் உங்கள் பதிவுகளிலும் பிற இடங்களில் மறுமொழிகளிலும் நல்ல தமிழ்ச் சொற்களை ஆள்வது கண்டேன். மகிழ்ச்சி.

ILA (a) இளா said...

வெட்டுக, ஒட்டுக.. என்பதே சரியாகப் படுகிறது.

வினோத் ராஜன் said...

வெட்டுக, ஒட்டுக என்பதே கண்ணியமாக படுகிறது.

மு. மயூரன் said...

வெட்டுக ஒட்டுக.

குமரன் (Kumaran) said...

என் வாக்கை அளித்துவிட்டேன் இரவிசங்கர். எனக்கு 'வெட்டு, ஒட்டு,..' என்று சொல்பவர்களின் கருத்து புரிகிறது. ஆனால் 'வெட்டுக, ஒட்டுக,...' என்பவை பிடிக்கிறது. :-)

சரவணன் said...

மேற்கத்தியக் கலாசாரத்தில் குழந்தை தன் அம்மாவிடம் பிஸ்கட் வாங்க வேண்டும் என்றால் கூட please சொல்லாமல் முடியாது என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் please open, please cut என்றா வைத்துள்ளார்கள்? நமக்கும் வெட்டு, ஒட்டு பழகிவிடும். மேலும் இவை கணினி நம்மைப் பார்த்துச் சொல்வதாக நான் நினைக்கவில்லை.

செல்வா said...

TBCD சொல்வதுபோல, வெட்ட ஒட்ட, தேட, தொகுக்க என்பது போல் இருத்தல் தவறில்லை. நிறைவில்லாமல் இருப்பது உண்மை (வினையெச்சமாக), ஆனால் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். "வெட்ட என்னும் சுட்டியை சொடுக்குங்கள்" என்று கூறுதல் இயலும்.

இது இயலாது எனில், வெட்டு, ஒட்டு என்றே கூறலாம். ஆனால் வெட்டுக, ஒட்டுக என்னும் வழக்குக்கு எதிர்ப்பாளியல்ல (சற்று மிகையாகவே தோன்றுகின்றது). வெட்டு, ஒட்டு என்பது ஆணை என்பதைவிட என்ன வினை என்பதனைக் குறிக்கும். தமிழில் வினைச்சொற்கள், வினையடிச் சொற்கள், ஏவல் வினைதான். அதாவது பால், காலம் முதலான பின்னொட்டுக்கள் சேரா வினைச்சொற்கள் . Infinitive forms என்பார்களே அது. ஆகவே ஏவல் வினை (ஆங்கிலத்தில் imperative form - which is actually and simultaneously the infinitive form in Tamil. அதாவ்து to cut என்பது ஆங்கிலத்தில் infinitive form ஆனால் தமிழில் வெட்டு என்பது infinitive form.) - செல்வா

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இளா, மயூரன், வினோத், குமரன் - நன்றி.

சரவணன் - நீங்கள் சொல்வதில் ஒரு நுணுக்கமான வேறுபாடு இருக்கிறது. please சேர்க்காவிட்டாலும் ஆங்கிலத்தில் மரியாதையை உணர்த்த முடியும். பல இடங்களில் சொல்லாமலேயே மறைமுகமாக please உணரப்படுகிறது. நம்மிடம் உள்ளது போல் நீ, நீங்கள் வேறுபாடு அவர்களிடம் இல்லை. எல்லாமே you தான். ஒட்டு - ஒட்டுக என்ற இரண்டு சொற்களுக்கு இடையே உள்ள தெளிவான மரியாதைக் குறைபாடு போல் ஆங்கிலத்தில் உணர வாய்ப்பு இல்லை தானே?

பழகிவிடும் என்பது வேறு, நமது பண்பாட்டுக்குக்கும் சூழலுக்கும் ஏற்ப எப்படி செய்யலாம் என்று நினைப்பதும் வேறு தானே? ஒட்டு என்று இருந்தால் பழகி விடும் என்பதற்கும் ஒட்டுக என்று இருந்தால் பிடித்திருக்கிறது என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

மு. மயூரன் said...

சரவணன்,


ஆங்கிலத்தில் வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும். ஆனால் தமிழில் அவ்வாறில்லை, அது பால், திணை, எண், இடம் என்பவற்றையும் காட்டும்.

please cut = வெட்டுக என்று சமப்படுத்த முடியாதல்லவா?

cut - வெட்டு/வெடுட்க என்ற மாதிரி நேரடி மொழி பெயர்ப்புக்களில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.ஆனால் அவசியம் வரும்போது உறுத்தாத வார்த்தையாகப் படக்கூடிய "வெட்டுக" போன்ற பிரயோகத்தையே நான் விரும்புகிறேன்.

தமிழ் சசி | Tamil SASI said...

வெட்டுக, ஒட்டுக

***

இது போலவே புகுபதிகை என்பது சற்று கடினமான சொல்லாக இருக்கிறது. எளிமையான வார்த்தையாக இருந்தால் நன்றாக இருக்கும்.

குறிப்பாக புதிதாக தமிழ் தளங்களுக்கு வருபவர்களுக்கு இந்த வார்த்தைகள் மிரட்சியை அளிக்கலாம்.

"இடுகை" என்ற வாக்கியம் கூட அவ்வாறு தான் உள்ளது

மணியன் said...

எனது வாக்கு வெட்டுக,ஒட்டுக விற்கே,
கணினியாவது கண்ணியம் காக்கட்டும் :)

Nimal said...

மூடுக
தேடுக
ஒட்டுக
வெட்டுக

ரெங்கராசு said...

நான் எனது கருத்தை ஏற்கனவே தனிப்பட்ட மடலில் பதிந்திருந்தேன். அதை மீண்டும் இங்கே தருகிறேன். அதாவது கணினியில் நடைபெறுவது இருப்பக்க தொடர்பாடாலாகும். நாம் கணினிக்கு சில கட்டகளை கொடுக்கிறோம் அது நமக்கு சில வழிக்காட்டகளையும் பதில்களையும் தகவல்களையும் கொடுகிறது. நாம் கொடுக்கும் கட்டளைகளை கணினி அஃறிணை ஆதலால் ஏவல் தொனியில் கொடுக்கலாம். அது நமக்கு பதிலளிக்கும் போது மரியாதை தரலாம்.

Star Wars மாதிரி தமிழ்ப் படம் வருவதாக வைத்துக் கொள்வோம் (2500 வரையில் இல்லை ;)) அதில் வரும் தானியங்கிகளுக்கு "ஆர்.2. டி.2. இங்கே வா" என்றால் இயல்பாக இருக்குமா அல்லது இங்கே வருக, அந்த மாவைக் கொண்டு சமயல் செய்க என்றால் ஒரு செயற்கைத் தன்மைத் தெரியாதா?

மேலும் விசைகளைப் (பொத்தன்களை) பார்போமானால் மரியாதைக் கலந்து எழுதுவது அவற்றை நீளமானதாக்கும்.
எ+கா:
save the page
பக்கத்தைச் சேமி
பக்கத்தைச் சேமிக்கவும்

சரி கொஞ்சம் நீளம் தானே கூடுகிறது பரவாயில்லை எனவாதிடுபவர்கள் இப்படி 5 விசைகளை வந்தால் என்ன நடக்கும் என்பதை கருதவும் விசைகள் திரையில் அங்குமிங்குமாக ஓடி அழகைக் கெடுகின்றன.


எனது கருத்தின் பொத்தான்களை ஏவல் தொனியில் மொழிப்பெயர்க்க வேண்டும்.
கணினி தகவல்கள் வழிகாட்டால்கள் மாரியாதை தொனொயில் இருக்க வேண்டும்,

வினோத் ராஜன் said...

ரெங்கராசு, இங்கு மூல பிரச்சினை Perception தான். அஃறினைகளை கட்டளையிடுவது தவறில்லை தான். கணினிக்கு கட்டளையிடுவதாக எடுத்துக்கொள்பவர்களுக்கு இது சரியாக தோன்றலாம்.

அதே சமயத்தில் கணினி தமக்கு ஒரு செயலை இந்த சொற்கள் உணர்த்துவதாக கருதுபவர்களுக்கு இந்த மொழிபெயர்ப்புகள் மிகவும் Rudeஆக இருக்கும்(கணினி நம்மை நோக்கி மரியாதை இல்லாமல் பேசலாமா ?) என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்

தங்கள் கண்ணோட்டத்தில் கூறவேண்டுமெனில், 'கணினிக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்பதில்' தவறில்லை. இல்லையெனில், வருங்காலத்தில் மேட்ரிக்ஸ் படத்தில் வருவது போல், தானியங்கிகள் தங்களுக்கு மதிக்கவில்லை என புரட்சி செய்தால் என்ன செய்வது ? :-))

புருனோ Bruno said...

கதவில் எழுதப்பட்டிருக்கும் தள்ளு என்ற சொல்லை விட தள்ளுக என்பது நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து

கணினிக்கும் அது தானே பொருந்தும்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

புருனோ, நல்ல எடுத்துக்காட்டு.