தமிழ்மணத்தில் முழு இடுகைகள் காட்சிப்படுத்துவது குறித்து பதிவர்களின் கருத்தை அடுத்து தமிழ்மணம் அவ்வசதியை நீக்கியிருக்கிறது. தமிழ்மணத்துக்கு நன்றி. தமிழ்மணம் இவ்வசதியை மீளப்பெற்றுக் கொண்ட நிலையில், இதைப் பற்றி பெரிதாக உரையாடுவது தேவை இல்லை தான். என்றாலும், பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் தளம் பதிவர்களின் உணர்வுகளைப் புரிந்து தன் நடவடிக்கையை மாற்றிக் கொண்டது புரிந்து கொள்ளத்தக்கதே. இதை வரவேற்கிறேன்.
எனினும், தற்போது வரும் ஒவ்வொரு தமிழ் இணையத்தளமும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றது. ஏற்கனவே உள்ள தொல் ஊடகங்களும், பெரிய இணையத்தளங்களும் தமிழ் வலைப்பதிவுகள் சார் நிறுவன முயற்சியில் இறங்க அதிக காலம் ஆகாது. அத்தகைய சூழலில் இது போன்ற செயற்பாடுகளின் முழுப் பரிமாணத்தையும் அறிவது அவசியம். நாளை தமிழ்மணம் போன்ற இன்னொரு திரட்டி இந்த முயற்சியில் ஈடுபட்டாலும், அதை எதிர்ப்பதற்கான தேவை என்ன என்பது குறித்து அறிவோம்.
இங்கு கூகுள் ரீடர், தமிழ்மணம் என்பது எளிதாகப் புரிந்து கொள்வதற்கான நோக்கில் ஒரு ஓடை வாசிப்புச் செயலிக்கும் தமிழ் வலைப்பதிவு திரட்டித் தளம் ஒன்றுக்குமான எடுத்துக்காட்டே. இக்கூற்றுகளை அச்செயலி, தளத்துக்கான ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ காணத் தேவை இல்லை.
"தமிழ்மணம் செய்தது கூகுள் ரீடர் செய்தது போன்ற ஒரு முயற்சி தானே? கூகுள் ரீடரை ஆதரிக்கும் போது தமிழ்மணத்துக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்" என்ற குரல்களுக்கு விளக்கமாய் கூகுள் ரீடர் - தமிழ்மணம் இவற்றுக்கான வேறுபாடுகளைச் சுட்டுகிறேன்.
0. ஒரு பதிவின் பிரபலம் அதன் வருகைக் கணக்குகளை மட்டும் வைத்து அளப்பதில்லை. ஆங்கில வலைப்பதிவுகளில் வருகைக்கணக்குகளுக்கு ஈடாக எத்தனை பேர் கூகுள் ரீடர் போன்றவை மூலம் ஓடைகளை வாசிக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. முழு ஓடைகளைப் பெறுபவர்கள் எண்ணிக்கையை கூகுள் ரீடர், பிளாக்லைன்ஸ் போன்றவைக் கொண்டே அளக்க முடியும். தமிழ்மணம் போன்ற முழு இடுகைகளைக் காட்டும் தளங்கள் இந்த எண்ணிக்கையில் கணக்கில் வராது. அப்படியே வந்தாலும் ஒரே ஓடையைப் பலரும் பார்வையிடுவதால் எண்ணிக்கையில் பெரும் குறை வரும். தமிழ்மணத்தில் உங்கள் முழு இடுகைகளையும் பிறர் வாசித்தால் உங்களுக்கு வருகைகளும் வராது; இந்த தொடர் வாசகர் எண்ணிக்கையும் தெரிய வராது.
1. காசு கொடுத்து திரைப்பட வட்டு வாங்கி வீட்டில் நாம் போட்டுப் பார்ப்பதற்கும் தெருவில் பெரிய திரை போட்டு எல்லாருக்கும் காட்டுவதற்கும் உள்ள வேறுபாடு தான் கூகுள் ரீடர் காட்டுவதற்கும் தமிழ்மணம் காட்டுவதற்கும் உள்ள வேறுபாடு.
கூகுள் ரீடரில் நீங்கள் பிறரது இடுகைகளை முழுமையாக வாசித்தாலும் அது உங்கள் தனிப்பயன்பாட்டுக்கே. அந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி நீங்கள் எந்த வகையிலும் வணிக, பிற நலன்களை அடைவதில்லை. ஆனால், தமிழ்மணத்தில் தோன்றும் எல்லா உள்ளடக்கங்களும் பொதுவாகக் காட்சிப்படுத்தப்படுவதால், அதன் பகுதியாக, உரிமையாகச், சொத்தாக மாறி விடும். 3000 பதிவர்கள் பற்றிய ஆளுக்கு ஒரு பதிவர் பக்கம், ஒவ்வொரு குறிச்சொல்லுக்கும் ஒரு பக்கம் என ஆயிரக்கணக்கில் குறிச்சொல் பக்கங்கள், இவற்றில் முழுமையான இடுகைகள் என்று இலட்சக்கணக்கான பக்கங்கள், உள்ளடக்கம் கொண்டு மாபெரும் தளத்தை, வலைப்பதிவுகள் சார்ந்த ஒரு ஊடக நிறுவனத்தை இலவசமாக கட்டித் தருகிறீர்கள் என்று அறியுங்கள். இவற்றால் தமிழ்மணத்துக்குக் கூடும் பக்கப் பார்வைகள், விளம்பர வருவாய் ஆகியவற்றால் பதிவர்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது.
இவ்வாறு முழு இடுகைகளையும் ஒரு தளத்தில் காட்சிப்படுத்துவது காப்புரிமை அடிப்படை, தார்மீக அடிப்படை இரண்டு நோக்கிலுமே தவறு. அது என்ன தார்மீக அடிப்படை? பதிவர்களை ஊக்குவிப்பது என்ற அடிப்படை தார்மீக நோக்கிலேயே எல்லா திரட்டிகளும் எழுகின்றன. அவர்களுக்கான வரவுகள், ஊக்கம் குன்றச் செய்யும் எதுவுமே அந்நோக்கத்திற்குப் புறம்பானது தான்.
2. கூகுள் ரீடர் பொதுவில் காட்சிப்படுத்துவதில்லை. பதிவுகளை விட கூடுதல் PageRank உள்ள தமிழ்மணம் அவற்றைத் தன் தளத்தில் காட்சிப்படுத்தினால் தேடல் முடிவுகளில் பதிவர்களின் பதிவுகளை முந்தித் தமிழ்மணத்தின் பக்கங்கள் தோன்றும் வாய்ப்பு உண்டு. தற்போதே கூகுளில் நீங்கள் தேடும் எந்த ஒரு குறிச்சொல்லுக்கும் தங்கள் தளங்களை விட WordPress, TechTamil ஓன்ற தளங்களின் பக்கங்கள் தோன்றுவதைக் காணலாம். ஆனால், இத்தளங்கள் ஒரு சில வரிகள் மட்டுமே காட்டுவதால் எப்படியும் உங்கள் பதிவுக்கு வந்து சேர்வார்கள். தற்போது + குறி அழுத்திக் காட்டும் செயற்பாட்டில் தேடு பொறியில் சிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், இப்படி முழு இடுகைகளைக் காட்டுவதற்கான ஆதரவு, பதிவர்களின் உள்ளடக்கங்களை பிற தளங்கள் கடத்திப் பயன்பெறவே வழி விடும்.
3. திரட்டி, தேடு பொறி - இவற்றின் பணி வேறு. கூகுள் ரீடர் போன்ற ஓடை வாசிப்புச் செயலிகளின் பணி வேறு. கூகுள், தன் தேடல் முடிவுகளில் ஒரு சில வரிகளைக் காட்டுவதற்குப் பதில் முழுத்தளத்தையுமே காட்டினால் ஏற்றுக் கொள்வோமா? ஒரு சில வரிகளைக் காட்டி உரிய பதிவுக்கு ஆட்களைத் திருப்பி விடுவதே திரட்டிகள், தேடு பொறிகள் ஆகியற்றின் பணி. தமிழ்மணமே கூட கூகுள் ரீடர் போன்ற தமிழ் வலைப்பதிவுகளுக்கான ஒரு ஓடை வாசிப்புச் செயலியை உருவாக்குமானால் அது முழு வரவேற்புக்குரியது. பொதுவில் காட்சிப்படுத்துவதற்கு மட்டுமே எதிர்ப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. அலுவலங்களில் இருந்து பதிவுகளைப் படிப்போர் பலரால் தமிழ்மணத்தையோ, பிளாகர், வேர்ட்பிரெஸ் தளங்களையோ அணுக இயலாமல் இருக்கிறது. இத்தகையோர் கூகுள் ரீடர் போன்ற கருவிகள் மூலம் தங்கள் முழு ஓடைகளை வாசிப்பது தான் தங்கள் பதிவுகளைப் படிக்க ஒரே வழி. முழு ஓடைகளைக் காட்டுவதற்குத் தமிழ்மணத்துக்கு இத்தகைய நியாயம் ஏதும் இல்லை.
5. தனி நபர் பயன்பாட்டுக்கென கூகுள் ரீடர் மூலம் முழு ஓடைகளை வாசிப்பது உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட, ஊக்குவிக்கப்படும் ஒரு வலைப் பண்பாடு. ஆனால், இப்படி முழு ஓடைகளையும் காட்சிப்படுத்தும் வணிகத்தளங்கள் உலக அளவிலேயும் ஊக்குவிக்கப்படுவதில்லை. உலக அளவிலும் சில தளங்கள் இப்படி காட்டுவது உண்டு. ஆனால், உலக வலைப்பதிவுலகின் அளவைக் காண்கையில் இது போன்ற தளங்களின் தாக்கங்கள் குறைவு. ஆனால், மிகச் சிறிய தமிழ் வலைப்பதிவுலகச் சூழலில் தமிழ்மணம் போன்ற முன்னணித் திரட்டிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரிய, உடனடி விளைவுகளை ஏற்படுத்தும்.
6. கூகுள் ரீடர் ஒரு கருவி. தமிழ்மணம் ஒரு வலைப்பதிவு ஊடக நிறுவனம் / இணையத்தளம். தமிழ் வலைப்பதிவுகளால் கூகுள் ரீடர் வாழ்வதில்லை. ஆனால், தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவுகளின் பலத்தால் மட்டுமே கட்டியெழுப்பப்பட்டது. அதன் வளர்ச்சியில் பதிவர்களுக்குத் திரும்ப எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்பதும் கேள்விக்குட்பட்டதே. பதிவர்களுக்கும் திரட்டிகளுக்கும் இடையில் இருப்பது ஒட்டுண்ணி உறவே. ஒருவரால் இன்னொருவர் அடையும் பயன் சம நிலையில் இருப்பதே நன்று.
7. எந்த நிலையிலும் நமது ஓடைகளை முடக்கினால், குறை ஓடை ஆக்கினால் கூகுள் ரீடரால் முழு ஓடைகளைக் காட்ட இயலாது. ஆனால், தமிழ்மணம் செய்வது விரும்பாமல் தற்போது நீங்கள் ஓடைகளை முடக்கிக் கொண்டாலும் நீங்கள் ஏற்கனவே எழுதிய இடுகைகளின் முழுத் தரவும் தமிழ்மணத்திடம் இருக்கிறது. அதை உங்களால் ஒன்றும் செய்ய இயலாது.
8. கூகுள் ரீடர் ஒரு கருவி. அதில் உங்களுக்கு வேண்டியதைச் சேர்க்கலாம். வேண்டாததை நீக்கலாம். தமிழ்மணத்தில் அந்தச் செயற்பாடுகள் இல்லை. நீங்கள் எழுதிய அஞ்சல்களை அனுப்பி வைப்பதையும் வரும் அஞ்சல்களைப் பெற்றுத் தருவதையும் செய்யும் அஞ்சல்காரனின் வேலையைத் தான் கூகுள் ரீடர் செய்கிறது. உங்கள் உள்ளடக்கம் ஒரு போதும் கூகுள் ரீடரின் சொத்தும் பலமும் உரிமையும் ஆகாது. ஆனால், எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மக்களிடம் சேர்ப்பதற்காக 10% உரிமைத் தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு முழு படைப்புரிமத்தையும் பதிப்பக நிறுவனத்திடம் தருவது போலவே முழு இடுகைகளையும் தமிழ்மணத்தில் காட்சிப்படுத்துவது அமையும். நமக்குத் தற்காலிகமாக கிடைக்கக்கூடிய ஒரு சில வருகைகளுக்காக நமது உள்ளடக்கத்தை முழுமையாக தமிழ்மணத்தின் வசம் விட்டு அதைப் பலப்படுத்தி விடுவோம். எப்போதும் எழுத்தாளர்களை விட பதிப்பாளர்கள் வலு மிக்கவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம். இணையத்தைப் பொருத்த வரை ஒவ்வொருவருமே எழுத்தாளரும் பதிப்பாளரும் தான் என்பதால் இடையில் எவரையும் தங்கி இருக்கத் தேவை இல்லை.
9. கூகுள் ரீடர் போன்றவற்றில் படிப்பார்கள் என்று அறிந்தே தான் எல்லாரும் முழு ஓடைகளைத் தந்தார்கள். தமிழ்மணம் போன்ற தளங்கள் அவற்றை அப்படியே காட்சிப்படுத்தும் அறியாமல் தான் பதிவர்கள் இணைந்து கொண்டார்கள்.
சரி, அப்படி என்றால் ஏன் முழு ஓடைகள் கொடுக்க வேண்டும்? தமிழ்மணம் தன் முடிவைப் மாற்றிக் கொண்டது. நாளை இன்னொரு திரட்டி இப்படி செய்யாது என்பது என்ன நிச்சயம்? பேசாமல் குறை ஓடைக்கு மாறி விடலாமே?
முழு ஓடைகள் தருவது எப்படி வலைப்பதிவு இயங்கிலுக்கு உதவுகிறது என்று முந்தைய இடுகையில் விரிவாக விளக்கி இருக்கிறேன். நம் தெருவில் யாரும் குப்பை போட்டுவிட்டு "காலில் அழுக்கு ஒட்ட வேண்டாம் என்றால், நீ வேணா உன் காலை வெட்டிக்கோ" என்றால் "ஓ, சரி" என்று காலை வெட்டிக் கொள்வீர்களா? குப்பை போட்டவரைத் தானே சுத்தம் செய்யச் சொல்வீர்கள்? அது போல, வலைப்பதிவுகள், வலைப்பதிவர்களின் இயல்பான செயல்பாட்டில் எவரேனும் செயற்கையான மாற்றங்களை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக குரல் தந்து அதை மாற்றச் செய்ய வேண்டுமே தவிர, நமது இயல்பான நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளலாகாது.
தமிழ்மணம் முழு ஓடைகளைத் திரட்டுவதில் பிரச்சினையில்லை. இந்த முழு ஓடைகளை வைத்துத் தமிழ்மணமே கூட தமிழ் வலைப்பதிவுகளுக்கான தேடு பொறி ஒன்றைச் செய்ய இயலும். அது போன்ற முயற்சிகள் வரவேற்புக்குரியவை. அதை வைத்து மென்னூலாக்கம் போன்ற பதிவர்களே விரும்பும் புதிய வசதிகளையும் செய்து தருவது பாராட்டுக்குரியது. ஆனால், முழு ஓடையை அப்படியே காட்சிப்படுத்துவதில் தான் பிரச்சினை.
தமிழ்மணம் முழு ஓடைகளைக் காட்டினாலும் அது formatting இல்லாமல் அவ்வளவு படிக்க உகந்ததாக இல்லையே? இது அவ்வளவு பெரிய பிரச்சினையா?
தேடு பொறிகளில் பதிவுகளை விடத் தமிழ்மணம் முன்னிலை பெறுவது போன்ற பிரச்சினைகளுக்கு formatting ஒரு பொருட்டு இல்லை. அந்த உள்ளடக்கம் இருந்தாலே போதும். தவிர, இப்போது உள்ளது போல் இல்லாமல் அருமையான fomatting உடன் வருங்காலத்தில் காட்சிப்படுத்த தமிழ்மணம் உள்ளிட்ட எந்தத் தளத்தாலும் முடியும்.