தமிழ் வலைப்பதிவுகளுக்கான திறந்த OPML திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2680+ தமிழ் வலைப்பதிவுகள் பட்டியலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தப் பட்டியலை http://tamilbloggers.org/toopml.xml என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். இப்பட்டியலை OPML கோப்பாகப் பெற விரும்புவோர் தங்கள் உலாவியில் file--save as போய் தரவிறக்கிக் கொள்ளலாம்.
தமிழ் வலைப்பதிவுகள் போக Thatstamil, Yahoo Tamil போன்ற ஓடை வசதி வழங்கும் தமிழ்த் தளங்களையும் இப்படியலில் சேர்த்து உள்ளோம். இப்பட்டியலின் குறைபாடுகள், ஆலோசனைகள் ஆகியவற்றை padhivu@gmail.com முகவரிக்கு எழுதலாம்.
இப்பட்டியலில் எந்த ஒரு பதிவையும் திட்டமிட்டு நீக்கவோ சேர்க்கவோ இல்லை. விட்டுப் போன பதிவுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் சேர்க்கப்படலாம். திட்ட விளக்கத்தை இவ்விடுகையின் இறுதியில் காணலாம்.
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கங்கள்:
1. தமிழ் வலைப்பதிவுகளுக்கான இற்றைப்படுத்தப்பட்ட பட்டியலை உருவாக்குவது. இது வரை திரட்டிகள் சாரா அத்தகைய பட்டியலாக http://www.tamilblogs.blogspot.com/ தளம் விளங்கி வருகிறது.
2. வெறும் வாசிப்புக்குகந்த பட்டியலாக அல்லாமல் திரட்டி முயற்சிகளில் இறங்குவோருக்கு உதவும் வகையில் அதை ஒரு OPML கோப்பாக வெளியிடுவது.
3. திரட்டிச் சார்பின்மைக்கு உதவுவது.
இவ்வெளியீட்டுடன் தெளிவுபடுத்தப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் சிலவும் உண்டு.
திரட்டிகள் சாராமல் இயங்க வேண்டுமெனில் அத்திரட்டிகளுக்கே உதவும் வகையில் இக்கோப்பினை வெளியிடுவது ஏன்?
நாமே நம் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பத் திரட்டியை உருவாக்கும் முன் எந்தத் தனியொரு பொதுத் திரட்டியின் மீதும் நம் சார்பினைக் குறைப்பது அவசியம். இந்த கோப்பின் மூலம் பல பொதுத் திரட்டிகளிலும் வெளி வரப்போகிற உள்ளடக்கம் ஒரே போலவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம் என்பதால் எந்த ஒரு தனித்திரட்டியின் செயல்பாடும் பதிவுலக நடப்புகளை நாம் அறிந்து கொள்வதை, நாம் வாசிப்புப் பரப்பை மட்டுப்படுத்த இயலாது.
1000 பதிவுகளுக்கே கூகுள் ரீடர் மூச்சு வாங்குகிறதாமே?
முதலில் இந்தத் திட்டத்தில் கூகுள் ரீடரின் பங்கு என்ன என்பதை அறிய வேண்டும். இந்தத் திட்டத்துக்கு கூகுள் ரீடர் ஒரு online collaborative opml editing tool. அதாவது கூட்டு முயற்சியாக இணையத்தில் பலரும் சேர்ந்து OPML உருவாக்க உதவும் ஒரு கருவி. தரமான ஒரு offline opml editor கருவி எங்களுக்குக் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒருங்கிணைப்பு சிரமமாக இருந்தது. எனவே கூகுள் ரீடரைப் பயன்படுத்தினோம். ஆனால், கூகுள் ரீடரோ கூகுள் ரீடர் போன்ற ப்ளாக்லைன்ஸ் போன்ற சேவைகளோ OPML தொகுப்புக்காக வடிவமைக்கப்பட்ட சேவைகள் அல்ல. அவை ஓடைகளை வாசிக்க உருவாக்கப்பட்ட சேவை. எனவே, OPML தொகுப்புக்கு அவற்றின் உதவி மட்டுப்படுத்தப்பட்டதே. எங்கள் நோக்கத்துக்கு உதவும் எந்த சிறிய கருவி கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம். கூகுள் ரீடர் மட்டுமல்ல ப்ளாக்லைன்ஸ் சேவை கூட 2000+ பதிவுகளைத் தாண்டுகையில் வேகம் குறைந்தது. கிட்டத்தட்ட எல்லா வலை அடிப்படை ஓடைத் திரட்டிகளிலும் இந்தக் குறைபாட்டை எதிர்ப்பார்க்கலாம் என்பது எங்கள் ஊகம்.
"சரி, இத்தகைய குறைபாடு உள்ள சேவையைக் கொண்டு எப்படி ஆளாளுக்குத் தனித்திரட்டி உருவாக்குவது?" என்று அடுத்த கேள்வி வருகிறது.
ஆளுக்கு ஒரு தனித்திரட்டி உருவாக்குவது என்றால், எல்லாரும் பொதுத் தமிழ்த் திரட்டிகள் போல் 2000+ தமிழ் வலைப்பதிவுகளையும் திரட்டுவது என்று பொருள் அல்ல. ஓர் உணவகம் நடத்துகிறவர் அங்கு வருபவர் பலரின் விருப்பத்துக்கும் ஏற்ப 100க்கணக்கான உணவுகளைச் சமைப்பார். ஆனால், நாம் ஒவ்வொருவரும் விரும்பி உண்ணப்போவது ஓரிரண்டு உணவு வகைகள் தானே? நாம் அன்றாடம் இப்பொதுத் திரட்டிகளை அணுகினாலும் இவற்றில் வெளிவரும் எல்லா இடுகைகளையும் படிக்கிறோமா? இல்லை தானே?
நீங்கள் அன்றாடம் விரும்பிப் படிக்கும் பதிவுகள் எவை? உங்கள் நண்பர்கள் பதிவுகள் எவை? ஒரு இடுகை கூட தவற விடாமல் காத்திருந்து படிக்கும் பதிவுகள் எவை? என் கணக்கில் என்னைப் பொறுத்த வரை இது போன்ற பதிவுகள் ஒரு 70 அல்லது 80 தேறலாம். இவற்றை மட்டுமே என் கூகுள் ரீடரில் இட்டு வைத்திருக்கிறேன். நான் மட்டும் அல்ல, கூகுள் ரீடர் போறன்ற சேவைகளைப் பயன்படுத்தும் பலரும் இவ்வாறே பயன்படுத்துகிறார்கள். 500க்கு மேற்பட்ட ஓடைகளை யாரும் தங்கள் தனித்திரட்டியில் வைத்திருந்தால் அவர் வேலை இழப்பது நிச்சயம் :) எல்லா வலைப்பதிவுகளையும் சேர்த்துக் கொண்டு எவருக்கும் பிடிக்காத வலைப்பதிவுகளை மட்டும் நீக்குவது பொதுத் திரட்டிகளின் செயற்பாட்டு அடிப்படை. அவர்களுக்கு இந்த OPML கோப்பு உதவும். நமக்கு மட்டும் பிடிக்கும் பதிவுகளைச் சேர்த்து வைத்துப் படிக்கத் தனித்திரட்டி.
சரி, நமக்குப் பிடிக்கும் பதிவுகளை மட்டும் தனித்திரட்டியில் வாசிக்கிறோம். ஆனால், புதிதாகப் பதிவுலகில் வரும் நல்ல பதிவுகள், பதிவுலக நடப்புகளை எப்படி அறிந்து கொள்வது என்கிறீர்களா? தமிழ்மணம், தமிழ்ப்பதிவுகள், தேன்கூடு போன்ற எல்லா தளங்களுமே ஓடை வசதி அளிக்கின்றன. இவற்றின் ஓடைகளையும் சேர்த்துக் கொண்டால் இத்தளங்களில் வெளியாகும் பதிவுகளும் உங்கள் தனித்திரட்டிக்கு வந்து விடும். தனித்தனியாக 2000+ பதிவுகளைச் சேர்த்துக் கொள்வதை விட இப்படிச் செயல்படுவது எளிது. இதைத் தான் ஏற்கனவே பொதுத் திரட்டிகள் செய்கின்றனவே என்கிறீர்களா? பொதுத் திரட்டி நடத்துவது குடோன் வைத்திருப்பது போல். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா பொருள்களையும் அடைத்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். பொதுத் திரட்டிகளின் ஓடைகளைப் பெறுவது அவற்றின் catalogue புத்தகத்தைப் பார்த்து நமக்கு வேண்டிய பொருளை மட்டும் பெற்றுக் கொள்வது போல்..
(தமிழ் வலையுலகில் நுழைந்ததில் இருந்து உவமை சொல்லும் பிணி தொற்றிக் கொண்டுள்ளது :) 2008லாவது இதை விடுக்கப் பார்க்க வேண்டும் :) )
சரி, தனித்திரட்டிகளால் வேறு என்ன நன்மை?
1. உங்களுக்கு வேண்டிய பதிவைச் சேர்க்கலாம். வேண்டாத பதிவை நீக்கலாம். யார் அனுமதியும் தேவை இல்லை. உங்களுக்கு விருப்பமில்லாமல் உங்களுக்குப் பிடிக்காத பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கத் தேவை இல்லை.
2. ஒரு நாளைக்கு 30 பதிவுகள் படிக்கிறீர்கள் என்றால் அவை ஒவ்வொரு தளமாகப் போய்ப் பார்த்து, காத்திருந்து படித்து, பக்கத்தை மூடி என்று அல்லல்பட வேண்டாம். எத்தனை பதிவுகள் என்றாலும் அவை எல்லாவற்றையும் முழுமையாக ஒரே இடத்தில் இருந்து படிக்கலாம். உங்கள் விருப்பப் பதிவுகள் உங்கள் தனித்திரட்டியில் சேமித்து வைக்கப்படும் என்பதால் உங்களுக்குத் தகவல் தேவைப்படும் போது அவற்றில் தேடிப் பார்க்கலாம்.
3. பொதுத் திரட்டியில் ஒரு இடுகை காட்சிப்படுத்தப்படும் நேரம் சில மணி நேரங்களே. இதற்குள் நீங்கள் பார்க்காவிட்டால் உங்கள் விருப்ப இடுகைகளைத் தவற விட வேண்டும். ஆனால், தனித்திரட்டியில் நீங்கள் எத்தனை நாள் கழித்துப் பார்த்தாலும் தவற விடாமல் பார்க்கலாம்.
4. கூகுள் ரீடர் போன்ற சேவைகளில் நீங்கள் படித்த இடுகைகளைக் குறிச்சொல் இட்டுச் சேர்த்து வைக்கலாம். நீங்கள் படித்த இடுகைகளைப் பகிர்ந்து பொதுவில் காட்சிப்படுத்தலாம். உங்கள் நண்பர்கள் என்ன படிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம். நம் நண்பர்களுக்குப் பிடித்த இடுகைகள் நமக்கும் பிடிக்க கூடுதல் வாய்ப்புகள் உண்டு தானே?
5. வலைப்பதிவுகள் மட்டும் அல்ல ஓடை வசதி கொடுக்கும் எந்தத் தளத்தையும் தனித்திரட்டிகள் கொண்டு படிக்கலாம். இதனால் உங்கள் தனித்திரட்டியைத் திறந்தால் முழு இணையத்தையுமே உங்கள் திரட்டியில் இருந்து வாசித்து விடலாம்.
6. பல தனித்திரட்டிச் சேவைகள் இணைய இணைப்பு இல்லாமல் வாசிக்கும் வசதியையும் தருகின்றன. dial-up போன்ற வேகம் குறைந்த இணையச் சேவைகளைப் பயன்படுத்துவோர், பயணம் மேற்கொண்டுள்ளோருக்கு இது மிகவும் வசதி.
7. தமிழ்த் திரட்டித் தளங்கள், ப்ளாகர், வேர்ட்ப்ரெஸ் போன்ற தளங்கள் பல அலுவலகங்களில் தடை செய்யப்பட்டிருக்கலாம். இங்கு ஓடைத் திரட்டிகள் இவற்றைப் படிக்க உதவும்.
"சரி, சரி..தனித்திரட்டியின் நன்மை புரிகிறது. ஆனால், ஓடை, OPML என்று ஒரே குழுப்பமாக இருக்கிறதே? கூகுள் ரீடர் பயன்படுத்துவது எல்லாம் மெத்தப்படித்தவர் செய்வது அல்லவா? நாங்கள் எல்லாம் எளியவர்கள் ஆனோமே? எங்களால் இயலுமா?" ..என்கிறீர்களா?
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். மின்மடல் அனுப்புவது எவ்வளவு எளிதோ தனித்திரட்டிகள் பயன்படுத்துவதும் அவ்வளவு எளிது. மின்மடல் அனுப்ப பெறுநரின் மின்மடல் முகவரி தெரிய வேண்டும். திரட்டியைப் பயன்படுத்த விருப்பப் பதிவின் முகவரி தெரிய வேண்டும். அவ்வளவு தான். ரீடரில் ஒரு பதிவின் முகவரியைச் சேர்க்க 5 நொடி கூட ஆகாது. ஆகவே, முதல் முறை உங்கள் பதிவுகளைச் சேர்த்துக் கொண்டு விட்டால் பிறகு ஒரு வேலையும் செய்யத் தேவை இல்லை. "ஆங்கிலப் பதிவுலகக் காரர்கள் அப்படி செய்ய இயலும் நம்மால் இயலுமா" என்று யாராவது வினவினால், அவர்கள் திட்டமிட்டு உங்களைக் கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கப் பார்க்கிறார்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.
தனித்திரட்டிகள் பயன்படுத்துவது நமக்கு மட்டும் நன்மை அல்ல. பதிவுகளை அறிமுகப்படுத்தவும் அது ஒரு மிகச் சிறந்த வழியாகும். தமிழ்ப்படமே பார்க்காத ஒருவர் நம்மிடம் சில தமிழ்ப் படங்களைப் பரிந்துரைக்கச் சொல்லி கேட்டால் நம்மிடம் உள்ள விருப்ப dvdக்களைத் தானே தருகிறோம்? ஏதோ ஒரு திரையரங்கு முகவரியைச் சொல்லி அங்கு போய் பார்க்கச் சொல்வது இல்லையே? அது போல், நாம் பதிவுகளை அறிமுகப்படுத்த விரும்பும் நண்பர்களுக்கு நம் OPML கோப்புகளைப் பகிர்ந்து கொண்டால் நம் விருப்பம், ரசனையை எதிரொலிக்கும் சிறந்ந பரிந்துரை கிடைக்கும். அதை விடுத்து ஏதோ ஒரு பொதுத் திரட்டியில் போய் பார்க்கச் சொன்னால் அவர் பார்க்கும் நேரம் அந்தப் பொதுத்திரட்டியில் என்ன இடுகை வரும் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அவருக்கு தமிழ்ப் பதிவுலகம் குறித்த சிறந்த அறிமுகம் கிடைக்காமல் போகலாம்.
"சரி, எல்லாம் புரிகிறது..ஆனால், அது எப்படி தமிழ்த் திரட்டிகளை விடுத்து கூகுள் போன்ற பெரிய வணிக முதலையின் சேவையைப் பயன்படுத்துவது"? என்கிறீர்களா..
ஒரு நொடி யோசியுங்கள். ஜிமெயில், கூகுள் talk, கூகுள் தேடல், நீங்கள் பதிவு எழுதிக் கொண்டிருக்கும் ப்ளாகர் என்று ஒரு நாளைக்குப் பல விதங்களில் இதே கூகுளைத் தான் சார்ந்து இருக்கிறீர்கள். அங்கு உறுத்துவதில்லையா? இணையத்தைப் பொறுத்த வரை யார் சிறந்த சேவை அளிக்கிறார்களோ அதைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் என்றே நான் கருதுகிறேன். தவிர, இங்கு கூகுள் ரீடர் என்பது எனக்கு நன்கு அறிமுகமான உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு எடுத்துக்காட்டு. உங்களுக்கு கூகுள் ரீடர் பிடிக்காவிட்டால் ப்ளாக்லைன்ஸ் பயன்படுத்துங்கள். அதுவும் வேண்டாமா, இலவச திறமூல ஓடைத் திரட்டி மென்பொருள்கள் எத்தனையோ உள. ஓடைத் திரட்டிகள் குறித்து மயூரன் எழுதிய கட்டுரை பார்க்கவும். இவற்றில் உங்களுக்குப் பிடித்த சேவையைப் பயன்படுத்தலாம். கூகுள் ரீடர் பயன்படுத்த விரும்புபவர்கள் அது குறித்த விளக்க நிகழ்படத்தை இங்கு பெறலாம்.
"எல்லாரும் கூகுளையோ வேறு நிறுவனத்தையோ சார்ந்து அது செயல் இழந்தால் என்ன செய்வது" என்கிறீர்களா?
முதலில் இவை உலகளாவிய வணிக நிறுவனங்கள். இவை செயல் இழந்தால் விழுந்தடித்து சில மணித்துளிகளில் சரி செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். அதையும் தாண்டி, உங்கள் தனித்திரட்டியில் உள்ள OPML கோப்பை அவ்வப்போது தரவிறக்கி வைத்துக் கொண்டால், ஒரு சேவை செயல் இழந்தாலும் இன்னொரு சேவைக்கு எளிதாக மாறலாம்.
இனி, திறந்த OPML குறித்த சில கேள்விகள்:
முதலில் இக்குழுமம் திறந்த நிலையில் இருந்து பிறகு மூடி வைக்கப்பட்டது ஏன்?
குழுமம் திறந்து வைக்கப்பட்டதே பலரே பங்கெடுத்து உதவ இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. ஆனால், அதைத் தவிர்த்து எல்லா வித திசை திருப்பல்கள், குற்றச்சாட்டுக்கள் வர வழி வகுத்ததால் தற்காலிகமாக மூடி வைத்து எங்கள் செயல் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினோம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் இதற்குப் பின் என்ன அரசியல் என்று மருண்டவர்கள் தற்போது இக்குழுமப் பக்கத்தை அணுகிப் பார்க்கலாம்.
இத்திட்டம் குறித்த நம்பிக்கையின்மை, குற்றச்சாட்டுகள் குறித்து:
திட்டம் தொடங்கி இரண்டே வாரத்தில் 2680+ பட்டியலோடு வந்திருக்கிறோம். இதை விடச் சிறப்பாக இத்திட்டத்தைச் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து செயலில் இறங்கி செய்து காட்டுங்கள். நாங்கள் அளித்துள்ள இக்கோப்பினையே விதையாகக் கொண்டு நீங்கள் உங்கள் முயற்சியைத் தொடரலாம். எங்களுக்குச் செய்யத் தெரிந்தது இவ்வளவே. வரும் காலங்களில் மேம்பட்ட வழிகள் இருந்தால் அதைப் பின்பற்றுகிறோம்.
இந்த OPML திட்டத்துக்கான பங்களிப்பு, பயன்பாட்டு உரிமம், பொறுப்புத் துறப்பு ஆகியவற்றை இங்கு காணலாம்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, மறுமொழிப் பெட்டியைத் தற்போது திறந்து வைக்க விரும்பவில்லை. மன்னிக்கவும். ஆனால், பதிவுலகில் இத்திட்டம் குறித்து எழும் நியாயமான கேள்விகளுக்கு அடுத்தடுத்த இடுகைகள் அல்லது மறுமொழிகளில் விடை தர முயல்வேன்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
அன்புடன்
ரவி