புதிது புதிதாக பல தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள் வரத் தொடங்கியுள்ளன.
அண்மையில் கண்ட இரண்டு: http://www.thiratti.com, http://tamil.blogkut.com
தமிழ் வலைப்பதிவுகள் சார்ந்து இயங்கும் தளங்கள், திரட்டிகள் பட்டியலும் பார்க்கவும்.
இது போல் புதிய பல தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள், தளங்கள், இதழ்கள், முயற்சிகள் வருவது தமிழ்ப் பதிவுலகுக்கு நல்லது. திரட்டி சாராமல் பதிவர்கள் இயங்கவும், தமிழ் வலைப்பதிவுலகில் மையப்படுத்தல், நிறுவனப்படுத்தல், அதிகாரப்பீடங்களைத் தவிர்க்கவும் இவை உதவும்.
ஆனால், இந்தப் போக்கு இன்னும் வீரியமாக தொடர வேண்டுமானால் பதிவர்கள், தற்போது உள்ள திரட்டிகள் இரு தரப்புமே செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் சில உண்டு. அதற்கு முன், தற்போதைய நிலையைப் புரிந்து கொள்வோம். தற்போதைய நிலைகளை ஒட்டி எழும் கேள்விகள், தீர்வுகளையும் பார்ப்போம்.
நிலை
பதிவர் ஒருவர் X திரட்டியில் இணைய விருப்பம் தெரிவித்து தன் விவரங்களைத் தந்து சேர்கிறார். இன்னும் புதிதாக வரும் Y, Z திரட்டிகளில் சேர்கிறார். அப்புறமும் புதிது புதிதாக வரும் ஒவ்வொரு திரட்டியிலும் தன் விவரங்களைச் சேர்க்கச் சோம்பல் பட்டு சும்மா இருந்து விடுகிறார். இதனால் புதிதாக வரும் திரட்டிகள் நுட்பத்தில் சிறந்ததாக இருந்தாலும் உள்ளடக்கம் இல்லாமல் தடுமாறுகின்றன. தமிழ்மணத்தில் 2000+ பதிவுகளும், இரண்டு ஆண்டுகளாக இருக்கும் தமிழ்ப் பதிவுகள் தளத்தில் 700+ பதிவுகளும் தமிழ்வெளி தளத்தில் 300+ பதிவுகளும் மட்டுமே இருப்பதைக் கவனிக்கவும்.
தீர்வு என்ன?
தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள் தங்கள் தளத்தில் திரட்டப்படும் பதிவுகளின் முழுமையான விவரத்தை OPML வடிவில் தர வேண்டும். இந்தப் பொதுவில் வைக்கப்படும் OPMLகளைப் புதிதாக வரும் எந்தத் திரட்டியும், மற்ற திரட்டிகளும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையையும் பதிவர்கள் திரட்டித் தளங்களுக்குத் தர வேண்டும். பதிவர்களைச் சேர்க்கும் ஒவ்வொரு தளமும் இந்த நிபந்தனைக்கு உட்பட்டுச் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது ஒரு தெரிவாகவும் தரலாம். தற்போது இருக்கும் உறுப்பினர் பதிவர்களுக்கும் ஒரு மடல் எழுதி இந்த நிபந்தனைக்கு உட்படச் செய்யலாம். மறுப்பு தெரிவிக்கும் பதிவர்களை வேண்டுமானால் OPML பட்டியலில் இருந்து தவிர்க்கலாம்.
பயன் என்ன?
1. பதிவர்கள் ஒவ்வொரு திரட்டியாகப் போய் பதியத் தேவை இல்லை. ஒரு திரட்டியில் பதிந்தால் மற்ற எல்லா திரட்டிகளிலும் தானாகப் பதியபட்டு விடும். ஒவ்வொரு திரட்டியுலும் பதிந்து காத்திருக்கவும் பதிவதில் சிக்கல் ஏற்பட்டு மிரளவும் தேவை இல்லை. திரட்டிகளில் இணைப்பது எப்படி என்று பட்டறை நடத்தவும் தேவை இல்லை :)
2. இத்திரட்டிகளின் தள வடிவமைப்பு, இடைமுகப்பு சார்ந்து வாசகர்கள் தங்கள் வாசிப்பைச் சுருக்காமல், தங்களுக்குப் பிடித்தமான மேலதிக வசதிகள் தரும் கூகுள் ரீடர் போன்ற திரட்டிகளில் பதிவுகளைப் படிக்க உதவும். தமிழ் வலைப்பதிவுத் திரட்டித் தளங்கள் ஓரிரு நாட்கள் தொழில்நுட்பத் தடை காரணமாகத் தடைபடும் போது கை, கால் நடுக்கம் போன்ற தொல்லைகளில் இருந்து வாசகர்கள் தப்பிக்கலாம் :)
3. எல்லா தளங்களிலும் ஒரே உள்ளடக்கம் என்னும் போது எந்தத் தனித் திரட்டியும் மையப்படுத்தப்படுவதோ நிறுவனப்படுத்தப்படுவதோ அதிகாரமயமாக்கப்படுவதோ தவிர்க்கப்படும். உள்ளடக்கம் ஒன்றே எனும்போது தங்கள் தளத்தை வேறுபடுத்திக்காட்ட நுட்பம் மட்டுமே ஒரே ஆயுதமாக இருக்கும். புதிதாகப் பதிவுலகச் சேவைகள் தர முனைபவர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கும். இருக்கிற எல்லா தளங்களையும் விட சிறப்பான தளத்தை வடிவமைக்க முடியும் என்று நினைப்பவர்கள் உள்ளடக்கம் பற்றிய கவலை இன்றி சட்டுப்புட்டுன்னு களத்தில் இறங்க முடியும். ஆக, பதிவர்களுக்கு ஒவ்வொரு தளமும் தங்களால் ஆன கூடுதல் வசதிகளைத் தர முயல்வார்கள். ஒரு பூங்காவில் இடம் பிடிக்க முடியவில்லை என்று வருந்துபவர்கள் பல பூங்காக்களில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும் :)
4. திரட்டிகளில் பதிந்து கொள்ளும் பதிவர்களின் ip ரகசியங்கள் திரட்டிகளிடம் தற்போது இருக்கின்றன. அரசியல் ரீதியாக இயங்குபவர்களுக்கு இது பாதுகாப்பானதல்ல. privacy பலத்த அடி வாங்கும். கொஞ்ச நாள் முன்னர் திரட்டி ஒன்று ipஐ வெளியிட்டது என்று பலத்த சர்ச்சை கிளப்பப்பட்டதை அறியலாம் (அந்த சர்ச்சையின் உண்மை என்ன என்பது வேறு விசயம்). இது போன்ற open OPMLகள் நடைமுறைக்கு வந்தால் பதிவர்களின் இரகசியமும் காக்கப்படும். திரட்டிகளும் வீண் பழிகளில் இருந்து தப்பலாம்.
இது நிரந்தரத் தீர்வா?
இல்லை. 10,000+ தமிழ்ப் பதிவுகள் வரும்போது இப்படி ஒவ்வொருவராக எழுதிப் போட்டு அனுமதி வாங்கி சேர்வது இயலாத காரியம். முட்டாள்த்தனமானதும் கூட. நம் அனுமதி இன்றியே கூகுள், யாஹூ போன்ற தேடுபொறிகள் நம் தளத்துக்கு வந்து உள்ளடக்கத்தை எடுத்துச் செல்லும்போது, உள்ளூர் திரட்டிகள் மட்டும் ஏன் இதைச் செய்யக்கூடாது? ஏன் நம் அனுமதி பெற வேண்டுகிறோம்?
இந்த பொது OPML ஒரு தொடக்கமாக இருக்கலாம். போகப் போக, வருங்காலத்தில் பதிவரின் அனுமதி இன்றியே எல்லா திரட்டிகளும் பதிவுகளின் உள்ளடக்கத்தைத் திரட்டும் நிலை வர வேண்டும். கண்ணில் அகப்படும் தமிழ்ப் பதிவுகளை எல்லாம் இவை திரட்டிக் கொள்ளட்டும். அவற்றில் எது காட்சிப்படுத்த உகந்தது, எது அல்லது என்று மனித முறையிலோ தானியக்கமாகவோ அவையே தீர்மானித்துக் கொள்ளட்டும். தமிழில் தற்போது, தமிழூற்று தளம் மட்டுமே ஓரளவு இந்தத் திசையில் சரியாகச் செயல்படுகிறது. இதைப் போன்ற tamil blog engineகள் தான் அடுத்த கட்டத் தேவையே தவிர, எழுதிப் போட்டு அனுமதி வாங்கிப் பதிப்பிக்கும் கற்கால பத்திரிக்கை முறை இல்லை. இந்தக் கற்கால முறையால் பதிவர்கள், திரட்டிகள் இரண்டுக்குமே நன்மை இல்லை.
உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?
தமிழ்ப் பதிவுலகத் திரட்டிகள் தங்கள் தளத்தில் பதிந்துள்ள பதிவர்களுக்குப் பொதுவிலும் மின்மடல் மூலமும் இந்தப் பொது OPML முயற்சி குறித்து ஒரு அறிவிப்பு விடுக்க வேண்டும். மறுப்பதற்காக ஒரு வாரமோ இரு வாரமோ அவகாசம் தரலாம். மறுத்த பதிவர்களைத் தவிர்த்து பிறரின் பதிவுகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.
2007 முடிவுக்குள் இதை எந்தத் திரட்டியாவது செய்து காட்டி அடுத்த கட்டம் அல்லது சதுரத்துக்குத் தமிழ்ப் பதிவுகளை நகர்த்தும் பெருமையைப் பெற்றுக் கொள்ளலாம்.
எந்தத் திரட்டி செய்யப் போகிறது? எத்தனை பதிவர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பார்கள்?
கொஞ்சம் நப்பாசை, நிறைய நம்பிக்கையுடன்
ரவி
6 comments:
தேங்ஸ் மாம்ஸ் உங்க ஆசை கண்டிப்பா நிறைவேறும்.
தமிழ்மணம் முதல் பதிப்பில் OPML கோப்பு வெளியிடப் பட்டு இருந்தது...இப்போதைய பதிப்பில் காணப்படவில்லை
தேன்கூட்டில் இருக்கிறது!
---எழுதிப் போட்டு அனுமதி வாங்கிப் பதிப்பிக்கும் கற்கால பத்திரிக்கை முறை இல்லை. இந்தக் கற்கால முறையால் பதிவர்கள், திரட்டிகள் இரண்டுக்குமே நன்மை இல்லை---
மிக மிக சரியான அணுகுமுறை
baby pavan - நன்றி.
சிந்தாநதி - ஆம். தமிழ்மணம் முன்பு வெளியிட்டு இருந்தது. இப்போது காணவில்லை. திரும்ப முழுமையான கோப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும். வெறும் வழமையான OPML கோப்பாக வெளியிட்டால் பகுதி நன்மை தான். பிற திரட்டிகளும் இதைக் கொண்டு அவர்கள் தளத்தில் திரட்டலாம் என்ற உரிமத்தோடு வழங்கினால் அதன் பலன் முழுமை அடையும். தமிழ்மணத்தில் பதிந்திருப்பவர்கள் இந்த உரிமையை தமிழ்மணத்துக்கு வழங்கினால் நன்று.
தேன்கூடும் opml கோப்பு வழங்குகிறது. ஆனால், அது முழுமையாக இல்லை. 100+ பதிவுகளே இருக்கின்றன. தமிழ்மணம் மட்டும் அல்லாது எல்லா திரட்டிகளுமே இது போன்ற open OPML கோப்புகளை வெளியிட வேண்டும் என்று கருதுகிறேன். அப்போது தான் தாக்கம் முழுமையாகும்.
பாலா- புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி :)
நன்றி ரவி. ஆங்கிலத்திற்கு செய்ய விழைகிறேன்
நல்ல அருமையான யோசனை!
திரட்டி.காம் தளத்திற்காக தானியங்கி கிரவுலர் ஒன்றை வடிவமைத்துக் கொண்டுள்ளோம் பணி முடியும் தறுவாயில் உள்ளது இந்த கிரவுலர் செயல்படத்துவங்கினால் நீங்கள் கூறியது போல் பதிவர் திரட்டியை தேடிச்செல்ல வேண்டியது இல்லை. அது போல open OPML கோப்பு வெளியிடப்படும்.
Post a Comment