Tuesday, March 18, 2008

தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை

பல மென்பொருள்களையும் தமிழாக்கும் போது தமிழாக்கத்தின் தொனி குறித்த ஒரு கேள்வி தொடர்ந்து வருகிறது.

அதாவது, பல மென்பொருள்களில் cut, paste, search, close போன்ற கட்டளைகள் வருகிறது அல்லவா? இவற்றை வெட்டுக, ஒட்டுக, தேடுக, மூடுக என்று தமிழாக்கினால் உங்களுக்குப் பிடிக்குமா? அல்லது, வெட்டு, ஒட்டு, தேடு, மூடு என்று தமிழாக்கினால் பிடிக்குமா?

வெட்டு, ஒட்டு போன்ற கட்டளைகள் நாம் கணினிக்கு கொடுப்பவை என்றும், கணினி அஃறிணை தான் என்பதால் அதற்கு மரியாதை தரத் தேவை இல்லை என்றும், இப்படி எழுதுவது சுருக்கமாக இருக்கிறது என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

இன்னொரு தரப்பினரோ, இது போன்ற கட்டளைகள் கணினி தங்களைப் பார்த்துச் சொல்வதைப் போல் உணர்கிறார்கள். எனவே, மூடு, திற போன்ற கட்டளைகளை மரியாதை குறைவாக உணர்கிறார்கள். நானும் இந்த வகையைச் சேர்ந்தவன் தான்.

தற்போது மீடியாவிக்கி மென்பொருளை தமிழாக்கி வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்துக்கள் எங்கள் தமிழாக்கத்தைத் திறம்பட செய்ய உதவும்.

உங்கள் விருப்பத்தை வலப்பக்கம் உள்ள வாக்குப் பெட்டியில் தெரிவியுங்களேன்.

நன்றி